பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 2
அப்படி யாராலும் நம்ப இயலாத அளவுக்கு நம்மீது அருளைப் பொழிகிற அந்தப் பெருமானின் புகழைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,


தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.
பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.
இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடலின்பம்
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும்படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை
உருக்கும், பணிகொள்ளும் என்பது கேட்டு உலகமெல்லாம்
சிரிக்கும் திறம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.
*
அவம் ஆய தேவர் அவகதியில் அழுந்தாமே,
பவம் மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி,
நவம் ஆய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவம் ஆனவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.
பொருளின்பம்
திருமால், பிரம்மன், மற்ற தேவர்களுக்கெல்லாம்கூட நன்கு புலப்படாத அரியவன் சிவபெருமான், அப்படிப்பட்டவன் இங்கே நமக்காக வருவான், நம்மை உருக்குவான், தனது அடியவர்களாக்கிக்கொள்வான், நம்மை ஆள்வான் என்றெல்லாம் நாம் சொல்கிறோம், அதை நம்பாமல் உலகமெல்லாம் சிரிக்கிறது,
அப்படி யாராலும் நம்ப இயலாத அளவுக்கு நம்மீது அருளைப் பொழிகிற அந்தப் பெருமானின் புகழைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
பயனற்ற தேவர்களை நம்பி வணங்கினால் பயனில்லாத நிலை என்கிற வெள்ளத்தில் மூழ்கவேண்டியதுதான். நான் அப்படி மூழ்கிவிடாதபடி என்னைக் காத்து, பிறவி என்கிற பெரிய மாயையிலிருந்து விடுவித்து என்னை ஆண்டான் அந்தப் பரஞ்சோதி, சிவபெருமான்,
அவன் எனக்குப் புதுமையான, செம்மையான ஒளியை வழங்கினான், அதனால் ‘நான்’ என்கிற அகந்தை ஒழிந்தது, சிவமயமானேன், அந்தத் தன்மையைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
சொல்லின்பம்
அரி: திருமால்
தெரிக்கும்படித்து: தெரியும்படி
திறம்: திறமை/ இங்கே அருளைக் குறிக்கிறது
அவம்: பயனற்றது
அவகதி: பயனற்ற நிலை
அழுந்துதல்: மூழ்குதல்
பவம்: பிறவி
நவம்: புதுமை
செஞ்சுடர்: செம்மையான/ புதுமையான ஒளி
நல்குதல்: வழங்குதல்
ஆனவா: ஆன தன்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...