ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 5

திருமால், பிரம்மன், மற்ற தேவர்கள், வேதங்கள் என யாரும் உள்ளே நுழைந்து உணர்ந்துகொள்ள இயலாத நுட்பம் கொண்ட அரியவன் அவன்,

News image
Updated On :22 செப்டம்பர் 2015, 5:50 am

என்.சொக்கன்

தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.

பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.

இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

76

பாடலின்பம்

பார்பாடும் பாதாளர்பாடும் விண்ணோர்தம்பாடும்

ஆர்பாடும் சாரா வகைஅருளி ஆண்டுகொண்ட

நேர்புஆடல் பாடி நினைப்புஅரிய தனிப்பெரியோன்

சீர்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.

*

மாலே, பிரமனே, மற்றுஒழிந்த தேவர்களே,

நூலே நுழைவுஅரியான் நுண்ணியனாய் வந்துஅடியேன்

பாலே புகுந்து பரிந்துஉருக்கும் பாவகத்தால்

சேல்ஏர் கண் நீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ.


பொருளின்பம்

நாம் இந்த மண்ணில் பிறக்காதபடி, பாதாளத்தில் பிறக்காதபடி, விண்ணுலகத்தில் பிறக்காதபடி, இப்படி எங்கும் மறுபடி பிறக்காத ஒரு நிலையை அடைவதற்குச் சிவபெருமான் அருள் செய்தான், எந்த வினையும் நம்மைச் சேராமல் செய்தான், நம்மை ஆண்டுகொண்டான்,

அத்தகையை சிவனின் நேர்மையான திருவிளையாடல்களைப் பாடுவோம், யாராலும் நினைக்க அரியவனாகிய அந்தத் தனிப் பெரியவனின் சிறப்பைப் பாடல்களாகப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,

திருமால், பிரம்மன், மற்ற தேவர்கள், வேதங்கள் என யாரும் உள்ளே நுழைந்து உணர்ந்துகொள்ள இயலாத நுட்பம் கொண்ட அரியவன் அவன்,

ஆனால், என்னிடம் அவனே வந்தான், எனக்குள் புகுந்தான், தன்னுடைய கருணையினால் என்னை உருகச்செய்தான், மீன் போன்ற அழகிய கண்களில் நீர் மல்க, அவனுடைய புகழைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,

சொல்லின்பம்

பார்பாடு: நிலத்தில்

சாரா: சாராமல்

நேர்பு: நேர்மை

ஆடல்: திருவிளையாடல்

சீர்: சிறப்பு

நூல்: இங்கே வேதத்தைக் குறிக்கிறது

நுழைவு: நுழைதல்

நுண்ணியன்: நுட்பமானவன்

பாவகம்: இயல்பு

சேல்: மீன்

ஏர்: அழகு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.