பகுதி 36 – திருப்பாண்டிப் பதிகம் - 3
எம்பெருமானை வழிபட இதுவே சரியான நேரம், இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அவன் மீது அன்பு செலுத்தி வாழ்க்கையில் உய்ந்திடுங்கள்,


தென்பாண்டி நாடுடைய சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொள்வதற்காக எழுந்தருளினான். அப்போது, தான் அனுபவித்த பேரின்பத்தை மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களில் எழுதியுள்ளார்.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
காலம்உண்டாகவே காதல்செய்து
உய்ம்மின், கருதுஅரிய
ஞாலம்உண்டானொடு நான்முகன்,
வானவர் நண்அரிய
ஆலம்உண்டான், எங்கள் பாண்டிப்பிரான்
தன் அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின்றான்,
வந்து முந்துமினே.
*
ஈண்டிய மாயா இருள்கெட
எப்பொருளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவனும்
சொல்ல வல்லன்அல்லன்,
வேண்டியபோதே விலக்கிலை
வாய்தல் விரும்புமின் தாள்,
பாண்டியனார் அருள்செய்கின்ற
முத்திப் பரிசு இதுவே.
பொருளின்பம்
எம்பெருமானை வழிபட இதுவே சரியான நேரம், இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அவன் மீது அன்பு செலுத்தி வாழ்க்கையில் உய்ந்திடுங்கள்,
யாரும் எண்ணிப்பார்க்க இயலாதபடி இந்த உலகத்தையே உண்ட திருமால், நான்முகனான பிரம்மா, மற்ற தேவர்கள் என யாராலும் நெருங்க இயலாத ஆலகாலவிஷத்தை உண்டவன், எங்கள் பாண்டிநாட்டுத் தலைவன், சிவபெருமான் தன்னுடைய அடியவர்களுக்கு முக்தி என்கிற பெருஞ்செல்வத்தை வழங்குகின்றான், முந்துங்கள், அவனுடைய அருள்பெறுங்கள்.
*
நெருங்கிய மாயை என்கிற இருள் கெடும்படி, நமக்கு எல்லாப் பொருள்களும் விளங்கும்படி ஜோதி வடிவமாகத் தோன்றினான் சிவபெருமான், மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டிய மன்னனாலும் அவனது தன்மைகளை விளக்க இயலாது,
சிவபெருமான் திருவடிகளை நாம் விரும்பிய நேரத்தில் வணங்கலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை, அவன் திருவடிகளைச் சேர வேண்டும் என்று மனத்தில் எண்ணுங்கள், பாண்டிநாட்டுத் தலைவனான சிவன் முக்திநிலை என்னும் பரிசை வழங்கி அருள்வான்.
சொல்லின்பம்
ஞாலம்: உலகம்
நான்முகன்: பிரம்மன்
வானவர்: தேவர்கள்
நண்அரிய: நெருங்க இயலாத
ஆலம்: விஷம்
பாண்டிப்பிரான்: பாண்டிநாட்டுத் தலைவன் / சிவபெருமான்
மூலபண்டாரம்: மூலச் செல்வம் / முக்தி
முந்துமினே: முந்துங்கள்
ஈண்டிய மாயா: நெருங்கிய மாயை
மீனவன்: மீனைக் கொடியாகக் கொண்டவன் / பாண்டிய அரசன்
சொல்லவல்லன்அல்லன்: அவனாலும் சொல்ல இயலாது
விலக்குஇலை: தடை இல்லை
வாய்தல்: பெறுதல்
தாள்: சிவபெருமானின் திருவடிகள்
முத்தி: பிறவாநிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...