ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 37 – பிடித்த பத்து - 1

சிவபெருமானின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டது பற்றிப் பாடிய பாடல்கள் இவை. திருத்தோணிபுரம் எனப்படும் சீர்காழியில் பாடப்பட்டவை.

News image
Updated On :4 பிப்ரவரி 2016, 10:03 am

என். சொக்கன்

சிவபெருமானின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டது பற்றிப் பாடிய பாடல்கள் இவை. திருத்தோணிபுரம் எனப்படும் சீர்காழியில் பாடப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

212

பாடலின்பம்

உம்பர்கட்குஅரசே, ஒழிவுஅற நிறைந்த

யோகமே, ஊற்றையேன் தனக்கு

வம்புஎனப் பழுத்து என் குடிமுழுது ஆண்டு

வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே,

செம்பொருள்துணிவே, சீர்உடைக்கழலே,

செல்வமே, சிவபெருமானே,

எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

*

விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே,

வினையனேனுடைய மெய்ப்பொருளே,

முடைவிடாது அடியேன் மூத்துஅற மண்ணாய்

முழுப்புழுக்குரம்பையில் கிடந்து

கடைப்படாவண்ணம் காத்துஎனை ஆண்ட

கடவுளே, கருணைமாகடலே,

இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

பொருளின்பம்

தேவர்களின் தலைவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் யோகமே,

நான் அழுக்குவடிவமாக இருக்கிறவன், ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் என் வாழ்வில் புதுமையெனப் பழுத்த பழமே, என் குலம் முழுவதையும் ஆட்கொண்டவனே, இந்த உலக வாழ்வு அறுந்துபோகும்படி செய்த மருந்தே, சிறந்த நூல்களின் முடிவுப்பொருளாகத் திகழ்கிறவனே, சிறப்பு நிறைந்த திருவடிகளைக் கொண்டவனே, செல்வமே, சிவபெருமானே,

எனக்காக உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், நீ இனி வேறு எங்கு செல்ல இயலும்!

*

காளை வாகனத்தை விடாமல் அதன் மீது மகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கிறவனே, தேவர்களின் தலைவனே,

தீவினை செய்தவன் நான், எனினும் என்னை ஆட்கொண்டு என் மெய்ப்பொருளாகத் திகழ்கிறவனே,

முடைநாற்றம் வீசும் உடல்மீது நான் பற்றுக்கொண்டேன், அதை விட்டுவிடாமல் தொடர்ந்து இவ்வாறே வாழ விரும்பினேன்.

நான் இப்படியே வாழ்ந்திருந்தால், என் ஞானம் வளர்ந்திருக்காது, வெறுமனே வயது மட்டும்தான் அதிகரித்திருக்கும், நான் வெறும் மண்ணாக இருந்திருப்பேன், முழுமையாகப் புழுக்கள் நெளிகிற உடலில் கிடந்திருப்பேன். அவ்வாறு நான் தாழ்ந்து போகாதபடி காத்து என்னை ஆண்ட கடவுளே, கருணைப் பெரும்கடலே,

விடாமல் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், நீ இனி வேறு எங்கு செல்ல இயலும்!

சொல்லின்பம்

உம்பர்: தேவர்

ஒழிவுஅற: நீக்கமற

ஊற்றையேன்: அசுத்தமானவன்

வம்பு: புதுமை

செம்பொருள் துணிவே: செம்மையான நூல்கள் சொல்லும் நிறைவுப்பொருளே / சிவபெருமானே

சீர் உடைக் கழலே: சிறப்பான கழல் என்கிற ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணத்தை அணிந்தவனே / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

எம்பொருட்டு: எனக்காக / நான் வாழ்வதற்காக

விடைவிடாது உகந்த: காளை வாகனத்தை விடாமல் மகிழ்ந்த

கோவே: தலைவனே

முடை: நாற்றம் / நாற்றமடிக்கும் உடல்

அற: மிகவும்

குரம்பை: உடல்

கடைபடாவண்ணம்: தாழ்ந்து கடைசி நிலைக்குச் சென்றுவிடாதபடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.