ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 42 – சென்னிப் பத்து - 1

‘சென்னி’ என்றால் தலை என்று பொருள். சிவபெருமானின் திருவடிகளில் பக்தர்கள் தலைவணங்குகின்ற தன்மையைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

News image
Updated On :26 பிப்ரவரி 2016, 6:45 am

என். சொக்கன்

‘சென்னி’ என்றால் தலை என்று பொருள். சிவபெருமானின் திருவடிகளில் பக்தர்கள் தலைவணங்குகின்ற தன்மையைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

233

பாடலின்பம்

தேவதேவன், மெய்ச்சேவகன், தென்திருப்பெருந்துறை நாயகன்,

மூவராலும் அறியஒணா முதல்ஆய ஆனந்த மூர்த்தியான்,

யாவர்ஆயினும் அன்பர்அன்றி அறியஒணா மலர்ச் சோதியான்

தூய மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னிச் சுடருமே.

*

அட்டமூர்த்தி, அழகன், இன்அமுதுஆய ஆனந்த வெள்ளத்தான்,

சிட்டன், மெய்ச்சிவலோக நாயகன், தென்பெருந்துறைச் சேவகன்,

மட்டுவார்குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன் தன்

வட்ட மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னி மலருமே.

பொருளின்பம்

தேவர்களுக்கெல்லாம் தேவன், உண்மையான வீரன், தென் திருப்பெருந்துறையின் நாயகன், மும்மூர்த்திகளாலும் அறிய இயலாத முதல்வனான ஆனந்த மூர்த்தி, பக்தி கொண்டு வணங்காத யாராலும் அறிய இயலாத மலர் போன்ற ஒளியைக் கொண்டவன், அந்தச் சிவபெருமானின் தூய்மையான, சிறந்த மலர் போன்ற திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து சுடர்விடட்டும்!

*

அஷ்டமூர்த்தி, அழகன், இனிய அமுதம்போன்ற ஆனந்த வெள்ளம், உயர்வானவன், மெய்ப்பொருளான சிவலோகத்தின் தலைவன், தென் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கிற வீரன், தேன் சொரிகின்ற நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத் தன் உடலின் ஒரு பகுதியாக வைத்த அழகன், அந்தச் சிவபெருமானின் வட்டமான, சிறந்த மலர்போன்ற திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து மலரட்டும்!

சொல்லின்பம்

சேவகன்: வீரன்

அறியஒணா: அறிய இயலாத

முதல்ஆய: முதல்வனான

மலர்ச் சோதியான்: மலர்போல் ஒளி வீசுபவன்

சேவடிக்கணம்: திருவடிகள்

சென்னி: தலை

மன்னி: நெருங்கி

இன்அமுதுஆய: இனிய அமுதம் ஆன

சிட்டன்: சிறந்தவன்

மட்டு வார் குழல் மங்கையாள்: தேன் சொரிகின்ற நீண்ட கூந்தலை உடையவள் / உமையம்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.