பகுதி 43 – திருவார்த்தை - 3
தேவர்கள் வந்து வணங்கிப் போற்ற, உயர்ந்த கருணைக்கடலாகத் திகழ்கிறவன், அடியவர்களுடைய பற்றுகள் விண்டுபோகும்படி அருளும் எங்கள் பரமன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் முதல்வன், சிவபெருமான்,


இறைவனின் தன்மைகளைச் சொல்லும் மேலான வார்த்தை என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு.
பாடலின்பம்
வந்துஇமையோர்கள் வணங்கி ஏத்த மாக்கருணைக் கடலாய் அடியார்
பந்தனை விண்டுஅற நல்கும் எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந்நாள்
உந்து திரைக்கடலைக் கடந்துஅன்று ஓங்கும் மதில் இலங்கைஅதனில்
பந்துஅணை மெல்விரலாட்கு அருளும் பரிசுஅறிவார் எம்பிரான் ஆவாரே.
*
வேவத் திரிபுரம் செற்ற வில்லி, வேடுவனாய்க் கடிநாய்கள்சூழ
ஏவல்செயல் செய்யும் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்குகாட்டில்
ஏஉண்ட பன்றிக்கு இரங்கி ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி அன்று
கேவலம் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்புஅறிவார் எம்பிரான் ஆவாரே.
பொருளின்பம்
தேவர்கள் வந்து வணங்கிப் போற்ற, உயர்ந்த கருணைக்கடலாகத் திகழ்கிறவன், அடியவர்களுடைய பற்றுகள் விண்டுபோகும்படி அருளும் எங்கள் பரமன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் முதல்வன், சிவபெருமான்,
மேலே எழுந்து பரவுகிற அலைகளைக் கொண்ட கடலைக் கடந்திருக்கிற, மதிலால் சூழப்பட்ட நகரம் இலங்கை, பந்தைப் பற்றுகிற மென்மையான விரல்களைக் கொண்ட மண்டோதரி அங்கே வாழ்ந்துவந்தாள், அவளுக்கு அருள் செய்தவன் எம்பெருமான்,
அந்த அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
*
முப்புரங்களும் வெந்துபோகும்படி வென்ற வில்லாளன், வேடனாக உருவெடுத்துக் காட்டில் நடந்தான், கடிக்கின்ற நாய்கள் அவனைச் சூழ்ந்து வந்தன, தேவர்கள் ஏவல் செய்து பின்னே வந்தார்கள், அத்தகைய எம்பெருமான், நம் தந்தை, அனைத்துக்கும் முதல்வன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவன், சிவபெருமான்,
அவன் வேடனாக உருவெடுத்து வந்தபோது, அந்தக் காட்டில் ஒரு பன்றி அம்பால் தாக்கப்பட்டுக் கிடந்தது, அருகே அதன் பன்றிக்குட்டிகள் பசியோடு தவித்துக்கொண்டிருந்தன, உடனே, எம்பெருமான் தாய்ப்பன்றியாக அவதாரம் எடுத்து அவற்றுக்குப் பாலூட்டினான்,
அந்த அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
சொல்லின்பம்
இமையோர்கள்: தேவர்கள்
ஏத்த: போற்ற
மா கருணை: உயர்ந்த கருணை
பந்தனை விண்டு அற நல்கும்: பற்றுகள் அறுந்துபோகச்செய்யும்
ஆதி: அனைத்துக்கும் முதல்வன்
உந்து திரை: மேலே எழுந்து பரவுகிற அலை
ஓங்கும் மதில்: உயர்ந்த மதில் சுவர்
பந்து அணை மெல் விரலாள்: பந்தைப் பற்றுகிற மெல்லிய விரல்களைக் கொண்டவள்
பரிசு: தன்மை
பிரான்: தலைவன்
வேவ: வெந்துபோக
செற்ற வில்லி: அழித்த வில்லாளன்
வேடுவனாய்: வேடனாக
ஏ: அம்பு
எந்தை: நம் தந்தை
கேழல்: பன்றி
கிடப்பு: தன்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...