பதச் சேதம் | சொற் பொருள் |
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே
| மயல் பெருக: மயக்கம் பெருக; உரையும் அற: பேச்சும் நின்றுபோக; அனல் அவிய: உடலின் வெப்பம் அடங்கவும்; |
அனையு மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே
| அனையு: அன்னையும்; மனை: மனையாளும்; அருகில் உற: பக்கத்தில் இருந்து; வெருவி அழ: பயந்து அழ; அழலின் நிகர்: நெருப்பை நிகர்த்த; மறலி: யமன்; |
செறியும் இரு வினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே
| செறியும்: நெருங்கும்; இருவினை: நல்வினை, தீவினை; கரணம்: (புலன் என்றும் மனம் என்றும் பொருள்; இங்கே) மனம்; மருவு புலன்: பொருந்தியிருக்கும் ஐம்புலன்களும்; |
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே
| சிவனை நிகர்: சிவனை ஒத்த; பொதியவரை முனிவன்: அகத்தியன்; |
நெறி தவறி அலரி மதி நடுவன் மகபதி முளரி நிருதி நிதிபதி கரிய வன மாலி
| அலரி: சூரியன்; மதி: சந்திரன்; நடுவன்: யமன்; மகபதி: இந்திரன்; முளரி: அக்கினி; நிருதி: தென்மேற்கு திசைக்குரிய திக்கு பாலகன்; நிதிபதி: குபேரன்; கரிய வனமாலி: கரியவனும் துளசிமாலை அணிந்தவனுமான திருமால்; |
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசு உரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே
| நிலவு மறையவன்: பொருந்திய பிரமன்; நிருதன்: அரக்கன், சூரபத்மன்; உரம்: மார்பு; அற: பிளக்க; அயிலை: வேலை; |
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே
| மறி: மான்; பரசு: கோடரி; கரம் இலகு பரமன்: கரத்தில் வைத்துள்ள சிவன்; |
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே.
| மதலை: மரக்கலம்; உததி: கடல்; தரள(ம்): முத்து; புளினம்: மணல் திட்டு, மணல் மேடு; |
அறிவழிய மயல் பெருக உரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக...... அறிவு அழியவும்; மயக்கம் பெருகவும்; பேச்சு நின்று போகவும்; கண்கள் சுழலவும்; உடலின் சூடு தணிந்துபோகவும்; மலம், தானாகவே ஒழுகவும்;
அகலாதே அனையுமனை அருகிலுற வெருவியழ உறவுமழ அழலினிகர் மறலி யெனை அழையாதே... அருகிலிருந்து போகாமல் அன்னையும் மனைவியும் பக்கதிலிருந்தபடி பயந்து அழவும்; உறவினரும் அழவும்; நெருப்பை ஒத்தவனான யமன் என்னை அழைத்துச் செல்லாதபடி,
செறியுமிரு வினை கரண மருவுபுலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே... என்னை நெருங்கிருப்பதான நல்வினையும் தீவினையும்; மனமும்; பொருந்தியிருக்கின்ற ஐம்புலன்களும் யாவும் ஒழிந்துபோகும்படியாகவும்; உன்னுடைய உயர்ந்த திருவடிகளை அணுகும்படியாகவும் அடியேனுக்கு வரம் தந்தருள வேண்டும்.
சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே... சிவனை ஒத்தவரான பொதிய மலையைச் சேர்ந்த அகதிய முனிவனுடைய உள்ளம் மகிழும்படியும்; இரண்டு செவிகளும் குளிரும்படியும் இனிய தமிழைச் சொன்னவனே!
நெறிதவறி... அவரவருக்கு உரிய வழியிலிருந்து தவறி,
அலரி மதி நடுவன்...சூரியனும்; சந்திரனும்; யமனும்;
மகபதி முளரி... இந்திரனும்; அக்கினியும்;
நிருதி நிதிபதி... தென்மேற்கு திசையின் காவலனான நிருதியும்; குபேரனும்;
கரிய வனமாலி நிலவுமறையவன் இவர்கள் அலைய... கரிய நிறத்தையுடையவனும் துளசி மாலையை அணிந்திருப்பவனுமான திருமாலும்; பொருந்தியிருக்கும் பிரமனும் ஆகியோர்கள் அலைந்து திரியும்படியாக,
அரசுரிமை புரி நிருதனுரம் அற அயிலை விடுவோனே... ஆட்சி செலுத்திவந்த சூரபத்மனுடைய மார்பு பிளக்கும்படியாக வேலை விடுத்தவனே!
மறிபரசு கரமிலகு பரமனுமை இருவிழியு மகிழமடி மிசை வளரும் இளையோனே... மானையும் கோடரியையும் கரங்களில் ஏந்தியுள்ள பரமசிவனும் உமையம்மையும் தங்கள் விழிகளில் மகிழ்ச்சி பூக்கும்படியாக அவர்களுடை மடியின்மேல் வளர்கின்ற இளைய குமாரனே!
மதலைதவழ் உததியிடை வருதரள மணி புளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே... மரக்கலங்கள் தவழுகின்ற கடலிலிருந்து வருகின்ற முத்துகள், கரையிலுள்ள பெரிய மணல்மேடுகளை மறைத்து மூடும்படியாக வந்து இறைகின்ற திருச்செந்தூரின் கடற்கரையில் வீற்றிருக்கும் பெருமாளே!
சுருக்க உரை
சிவனை ஒத்தவரும் பொதியமலை முனிவருமான அகத்தியரின் உள்ளம் மகிழும்படியாகவும் இரு செவிகளும் குளிர்ச்சியடையும்படியாகவும் இனிய தமிழை ஓதியவனே! சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், துளசி மாலையை அணிந்த கரிய திருமால், பிரமன் இவர்கள் அனைவருமே தத்தமக்குரிய வழிகளைவிட்டு அலைந்து திரியும்படியாக அரசாண்ட சூரனுடைய மார்பைப் பிளப்பதற்காக வேலை வீசியவனே! மானையும் மழுவையும் (கோடரியையும்) கரங்களில் ஏந்திய பரமசிவனார், உமையம்மை ஆகியோரின் உள்ளம் மகிழும்படியாக அவர்களுடை மடியின்மேல் வளர்கின்ற இளையவனே! மரக்கலங்கள் தவழும் கடலிலிருந்து வருகின்ற முத்துகள், கரையிலுள்ள மணல்மேடுகளை மறைக்கும் வண்ணம் விழுந்து இறைபடுகின்ற திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருருக்கும் பெருமாளே!
அறிவு அழியவும்; மயக்கம் பெருகவும்; பேச்சு அடைத்துப் போகவும்; கண்கள் சுழலவும்; உடலின் வெப்பம் தணியவும்; கட்டுப்பாடில்லாமல் மலம் ஒழுகவும்; தாயும் மனைவியும் அருகிலேயே இருந்தபடி பயத்தால் அழவும்; உறவினர்களும் அழவும்; தீயை ஒத்த எமன் என்னை அழைத்துச் செல்லாதிருக்கவும்; எப்போதும் என்னை நெருங்கியிருக்கும் என் இருவினைப் பயன்களும்; என் மனமும்; பொருந்தியிருப்பதான என் ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியும்; உனது திருவடியை அணுகவும் எனக்கு வரம் தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

