/

பகுதி - 395

மயிலாகிய குதிரையின்மேலேறி

Updated On :2 நவம்பர் 2016, 6:31 am

பதச் சேதம்

சொற் பொருள்

கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும்

 

கழை: மூங்கில்; கழைமுத்து: மூங்கில் தரும் முத்து; புயல்முத்து: மேகம் தரும் முத்து; கரி: யானை; கரிமுத்து: யானை(த் தந்தத்திலிருந்து பிறக்கும்) முத்து; மலைமேவும்: மலையில் கிடக்கும்;

கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும்

 

கடி: சிறப்பு மிகுந்த; வளை: சங்கு; வளைமுத்து: சங்கிலிருந்து பிறக்கும் முத்து; கடல்முத்து: கடலில் சிப்பியிலிருந்து தோன்றும் முத்து; அரவு ஈனும்: பாம்பிலிருந்து பிறக்கின்ற;

அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன்

 

அழல்: தகிக்கின்ற; அழல்முத்து: தகிக்கின்ற முத்து; இவைமுற்று(ம்); இவையனைத்தும்; அடைவு: முறைமை (Order, manner, course); அடைவு ஒத்து: முறையாகப் பொருந்தி; உலாவ: (மாலை உலாவ என்றால்) புரண்டசைய;

அடர் பச்சை மாவில் அருளில் பெ(ண்)ணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே

 

அடர்பச்சை மா: அடர்ந்த பச்சை நிறமுள்ள குதிரையாகிய மயில்; மா: குதிரை; அருளில்; அருள்சுரந்து; பெண்ணோடும்: வள்ளி தேவானையோடும்; அடிமை குழாமொடு: அடியவர் கூட்டத்தோடும்;.

மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும்

 

மழைஒத்த: மேகத்தை ஒத்த; சோதிக் குயில், தத்தை: சுடர்விடுபவளும், குயிலையும் கிளியையும் போன்றவளும்; ஆயி: தாய், உமை; எமை ஈனும்: நம் அனைவரையும் பெற்றவளான;

மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே

 

மதமத்தம்: பொன் ஊமத்தை; நீலகள(ம்): நீலகண்டம்; களம்: கழுத்து; நித்த நாதர்: நிர்த்தமிடும் நாதர், நடராசர்;

செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா

 

செழுமுத்து: செழிப்பான முத்து; அமுதத் தெய்வானை: அமுதவல்லியாக இருந்த தெய்வானை; திருமுத்தி மாது: முக்தியைத் தருபவளான மாது;

சிறையிட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே.

 

சிறையிட்ட: தேவர்களைச் சிறையிலே இட்ட; தளை: விலங்கு;

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை... மூங்கிலிலிருந்து பிறந்த முத்துக்களாலான மாலையும்; மேகத்திலிருந்து பிறந்த முத்துக்களாலான மாலையும்;

கரிமுத்து மாலை... யானைத் தந்தத்திலிருந்து பிறந்த முத்துக்களாலான மாலையும்;

மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை... மலைகளின்மேல் கிடக்கும் சிறப்பான முத்துக்களாலான மாலையும்; சங்கிலிருந்து பிறக்கும் முத்துக்களாலான மாலையும்; கடலில் சிப்பியிலிருந்து தோன்றும் முத்துக்களாலான மாலையும்;

அரவீனும் அழல்முத்து மாலை... பாம்பிலிருந்து பிறப்பதும் தகிப்பதுமான நாக முத்துக்களாலான மாலையும் என,

இவைமுற்று மார்பின் அடைவொத்து உலாவ... இத்தனைவகையான முத்துமாலைகளும் உன் மார்பிலே முறையாகப் பொருந்திப் புரள;

அடியேன்முன் அடர்பச்சை மாவில்... அடியேனுக்கு முன்னாலே, அடர்ந்த பச்சை நிறம் கொண்ட குதிரையான மயில்மீது,

அருளிற்பெணோடும் அடிமைக்கு ழாமொடு அருள்வாயே... அருள்பெருக, வள்ளி தேவானையோடும், அடியார் கூட்டத்தோடும் தோன் அருள்புரிய வேண்டும்.

மழையொத்த சோதி குயில்தத்தை போலு மழலைச்சொல் ஆயி யெமையீனு... முகில் வண்ணத்தைக் கொண்டவளும்; ஜோதி ஸ்வரூபியும்; குயிலையும் கிளியையும் போல மழலைச்சொல் பேசுபவளும்; எம்மைப் பெற்ற தாயும்;

மதமத்த நீல களநித்த நாதர் மகிழ்சத்தி யீனு முருகோனே... (சடாமுடியில்) பொன் ஊமத்தை மலரை அணிந்தவரும்; நீலகண்டரும்; நடனமாடும் நாதருமான சிவபிரான் மகிழ்பவளுமான உமையம்மை பெற்றெடுத்த முருகனே!

செழுமுத்து மார்பின் அமுதத்தெய்வானை திருமுத்தி மாதின் மணவாளா... செழிப்பான முத்துமாலையை அணிகின்ற மார்பை உடையவளும்; அமுதவல்லி என்ற பெயர் கொண்டவளும்; முக்தியைத் தரவல்லவளுமான தெய்வானையம்மையின் மணவாளனே!

சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான திருமுட்ட மேவு பெருமாளே... தேவர்களைச் சிறையிலே அடைத்த சூரர்கள் அவர்களுக்கு இட்ட விலங்கை உடைத்தவனே!  ஞான வடிவினனே!  திருமுட்டத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

முகில்வண்ணம் கொண்டவளும்; ஒளிபடைத்தவளும்; குயிலையும் கிளியையும் போல மழலை மிழற்றுபவளும்; எம்மைப் பெற்ற தாயும்; பொன்னூமத்தம் பூவைச் சடையில் சூடுபவரும் நீலகண்டரும் நடராசருமான சிவனார் மனம் மகிழ்பவளுமான உமையம்மை பெற்ற முருகனே!  செழித்த முத்துமாலையை அணிந்த மார்பை உடையவளும்; அமுதவல்லி என்ற பெயர்கொண்டவளும்; முத்தியைத் தரவல்லவளுமான தேவானையுடைய நாயகனே!  தேவர்களைச் சிறையிலிட்ட சூரர்கள் அவர்களுக்கிட்ட கால்விலங்கை உடைத்தவனே!  ஞான மூர்த்தியே!  திருமுட்டம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

மூங்கிலிலிருந்தும்; மேகத்திலிருந்தும்; யானைத் தந்தத்திலிருந்தும்; மலையிலிருந்தும்; சங்கிலிருந்தும்; கடலில் சிப்பியிலிருந்தும்; பாம்பின் தலையிலிருந்தும் பிறக்கின்ற பலவகையான முத்துகளாலான மாலைகள் மார்பிலே புரண்டசைய; அடர்ந்த பச்சை நிறமுடையதான உன்னுடைய மயிலாகிய குதிரையின்மேலேறி, உன் தேவியரான வள்ளி தேவானையரும் அடியாரும் புடைசூழ அடியேன் முன்னே தோன்றிக் காட்சி தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.