/

பகுதி - 363

குறமகளான வள்ளியை மணமுடித்த பெருமாளே

Updated On :14 செப்டம்பர் 2016, 5:08 am

பதச் சேதம்

சொற் பொருள்

சி(ன்)ன திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா(து)

 

சின: சின்ன; திலம்: எள்; செறித்தது: நிறைத்தது;  சிலை: முழக்கம், ஓசை; செனித்தது: பிறந்தது;

செ(ன்)மித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ

 

சென்மித்தது: ஜன்மமெடுத்தது, பிறந்தது; சிறுதனம்: அற்பமான மார்பக(த்துக்கு); செடத்தில்: சடத்தில், உடலெடுத்த;

மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல்

 

விதிகரம்: விதியின் போக்கு; ஒழியாமல்: மாறாமல்;

வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை

மலர் பதத்தினில் உருகவும் இனி அருள் புரிவாயே

 

மசகன்: கொசுவைப் போன்றவன் (மசகு: கொசு); முருடன்: பிடிவாதக்காரன்; மடைக் குலத்தன்: மடையர்களுடைய குலத்தைச் சேர்ந்தவன்; விரகன்: வல்லவன் (கேலியாகச் சொல்லப்படுவதால் வல்லமை கெட்டவன்);

தனத்த... டுடுடுடு

 

 

தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தமித்த மத்தள தமருகம் விருது ஒலி கடல் போல

தமித்த: தனித்துவம் மிக்க; தமருகம்: டமருகம், உடுக்கை; விருது ஒலி: வெற்றி முழக்கம்;

சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை

தெறித்திட கழு நரி தி(ன்)ன நிணம் மிசை பொரும் வேலா

 

செரு: போர்; இமிழ்த்திட: ஒலியோடு பெருகிட; கரி: யானை; கழு நரி: கழுகும் நரியும்; நிணம்: கொழுப்பு, மாமிசம்;

செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி திருத்தணி பதி மருவிய குற மகள் பெருமாளே.

 

 

சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல் செறித்த(து) எத்தனை... சிறிய எள், தினை, மணல் அளவிலான உடல்களை எடுத்த பிறவிகள் எத்தனையோ;

சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல ... முழங்குகின்ற கடலில் (பெரிய திமிங்கிலம் முதல் மிகச்சிறிய பிராணி வரை) எடுத்த பிறவிகள் எத்தனையோ;

அதுபோதா ... அவையெல்லாம் போதாது என்று, 

செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை ... உலகிலுள்ள மலைகளிலும் சுனைகளிலும் எடுத்த பிறவிகள் எத்தனையோ;

செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தில் எத்தனை...  பற்பல உடல்களோடு பிறவியெடுத்து, அற்பமான கொங்கையின்மீது மையல்கொண்டு திரிந்த பிறவிகள் எத்தனையோ;

நமனுயிர் பறிகொள்வது அளவேதோ ... பற்பல பிறவிகளிலும் யமன் (மீண்டும் மீண்டும்) பறித்துக்கொண்ட உயிர்களுக்கு அளவிருக்கிறதா?

மனத்தி லெத்தனை நினைகவடுகள் ... இந்த மனத்தில்தான் எத்தனையெத்தனை கபடமான எண்ணங்கள்!

குடி கெடுத்த தெத்தனை ... மற்றவர்களுடைய குடியைக் கெடுத்த செயல்கள்தாம் எத்தனையெத்தனை!

மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை ... மிருகங்களைப் போல மற்ற உயிர்களைத் துன்புறுத்தியதுதான் எத்தனையெத்தனை!

அளவிலை ... (இவை எல்லாவற்றுக்கும்) அளவே இல்லை.

விதிகரம் ஒழியாமல் வகுத்த தெத்தனை ...விதியுடைய போக்கின்படி நடந்த நிகழ்ச்சிகள்தாம் எத்தனையெத்தனை!

மசகனை முருடனை மடைக்குலத்தனை மதியழி விரகனை... கொசுவைப் போன்ற அற்பனும்; பிடிவாதக்காரனும்; மூடர்குலத்தவனும்; அறிவிழந்து (ஆசைகொண்டு) திரிவதில் வல்லவனுமான என்னை,

மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே ... உன்னுடை மலர்ப்பாதத்தில் நெஞ்சுருகி நிற்கும்படியாக இனியேனும் நீ அருள்புரிய வேண்டும்.

தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி      தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு ... என்ற பலவிதமான ஓசைகளோடு,

தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போல ... தனிச்சிறப்பு கொண்ட மத்தளமும் உடுக்கையும் கடலின் முழக்கதைப்போல (ஆர்ப்பரிக்கவும்));

சினத்தமர்க்கள செருதிகழ் குருதியது இமிழ்த்திட ... கோபம் மிகுந்ததான போர்க்களத்தில் இரத்தம் கொப்புளிக்கவும்;

கரி யசுரர்கள் பரி சிலை தெறித்திட ... (அந்தப் போர்க்களத்திலே) யானைகளும் அசுரர்களும் குதிரைகளும் விற்களும் தெறித்துச் சிதறி விழவும்;

கழு நரிதின நிணமிசை பொரும்வேலா ... கழுகும் நரியும் தின்னுகின்ற பிணக்குவியல்களின் நிணத்தின்மேல் நின்றபடி (சூரனோடு) போரிட்ட வேலா!

செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ முநிக்கணத்தவர் ... (செழிக்கும்: ஏராளமான) ஏராளமான உத்தம சிவனடியார்களும் தபோமுனிவர்களின் கூட்டங்களும்;

மதுமலர் கொடுபணி . திருத்தணிப்பதி மருவிய.. தேன் ததும்பும் பூக்களைக் கொண்டு துதிது வணங்குகின்ற திருத்தணியில் வீற்றிருப்பவனே!

குறமகள் பெருமாளே. ... குறமகளான வள்ளியை மணமுடித்த பெருமாளே!

​ ​

சுருக்க உரை

தனத் தனத்தன தரித்தரித்தரி தரிரிரிரிரி என்று பலவிதமான ஓசைகளில் வெற்றி முழக்கத்தை எழுப்பும் மத்தளங்களும் உடுக்கைகளும் ஒலிக்க; கோபத்தோடு நடக்கின்ற போரில் ரத்தம் ஓசையோடு கொப்புளிக்க; அந்தப் போர்க்களத்தில் யானைகளும் அசுரர்களும் குதிரைகளும் விற்களும் தெறித்துச் சிதறிவிழ; கழுகுகளும் நரிகளும் தின்னும் பிணக்குவியல்களின்மீது நின்றபடி சூரனோடு போர்புரிந்த வேலனே!  உத்தமர்களான சிவனடியார்களும் தபோமுனிவர்களும் தேன் ததும்பும் மலர்களைக் கொண்டு பணிகின்ற திருத்தணியில் வீற்றிருப்பவனே!  குறமகளான வள்ளியை மணமுடித்த பெருமாளே! 

எள் அளவானதும்; சிறிய தினை, மணல் ஆகியவற்றின் அளவானதுமான உடல்களில் எத்தனைப் பிறவிகள் எடுத்துவிட்டேன்!  முழங்குகின்ற கடலிலும் மலைக்கூட்டங்களிலும் சுனைகளிலும் எத்தனைப் பிறவிகள் எடுத்துவிட்டேன்!  இத்தனைப் பிறவிகளிலும் எவ்வாறெல்லாம் மாதர் கொங்கையை மோகித்துத் திரிந்திருக்கிறேன்!  ஒவ்வொரு பிறவியிலும் யமன் பறித்துப்போன உயிர்களைக் கணக்கிடவும் முடியுமோ!

மனிதனாகப் பிறந்தபின்னாலும் இந்த மனத்தில்தான் வஞ்சக எண்ணங்கள்! எத்தனைவிதங்கள்!  நான் கெடுத்த குடிகள் எத்தனை!  மிருகத்தைப் போல பிற உயிர்களைத் துன்புறுத்தியதுதான் எத்தனை!  விதியுடைய போக்கின்படியாக நடந்தேறிய நிகழ்வுகள்தாம் எத்தனை!  இவ்வாறெல்லாம் பிறப்பெடுத்தவனும்; கொசுவைப் போன்ற அற்பனும்; பிடிவாதக்காரனும்; மூடர் கூட்டத்தைச் சேர்ந்தவனுமான அடியேன் இனியேனும் உன் மலரடியில் அன்புவைத்து மனமுருகும்படி அருள்புரிய வேண்டும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.