மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 527

தாடகையின் கோபத்தை ஒரே அம்பால் அடக்கி

Updated On :7 ஏப்ரல் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள் துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொ(ள்)ளு மாதர்

 

தொடுத்த வாள்: வீசப்படும் வாள்; மேகலை: புடைவை (ஒட்டியாணம் என்றும் புடைவை என்றும் பொருளுண்டு); கலை: ஆடை; மா இயல்: நல்லொழுக்கம்;

சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொ(ண்)டு வழியே போய்

 

சுகித்த:சுகித்து; துவர்த்த: சிவந்த; வாய்சுருள்: வெற்றிலைச் சுருள் (சந்தத்துக்காக ஒற்று மிகாமல் நின்றது); மால் கொண்டு: மயக்கம் ஏற்பட்டு;

படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ் கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே

 

பாயல்: படுக்கை;

பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின்(னும்) நாய் என பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ

 

பலித்து: பலித்த, உண்டான; மலத்தினாய் என: மலம் தின்(னும்) நாய் என;

வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே

 

வெடுத்த: வெடுவெடுப்பு, கோபம், கோபித்த; வார்சிலை: நீண்ட வில்;

விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா

 

விதித்து: சிருஷ்டித்து, படைத்து; வேதனை: வேதன்—பிரமன், பிரமனை; ஓர்முடி: ஒரு தலையை; கரத்து உலா: கரத்தில் உலவும்படி, நிற்கும்படி;

அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா

 

அடுத்த: வரிசையான; பணாமுடி: படங்களைக் கொண்ட தலை; கவடு: வஞ்சக;

அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையோடு அருக்கொணா மலை தருக்கு உலாவிய பெருமாளே.

 

அணி குறத்தி: வள்ளி; யானையொடு: தேவானையோடு; தருக்குலாவிய: தரு குலாவிய, மரங்கள் நிறைந்த;

தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள்... வீசப்படுகின்ற வாளைப் போன்ற கண்களால் பார்த்து; மார்பகத்தை அசைத்து; சேலையால் மறைத்து மூடி;

துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொ(ள்)ளு மாதர்... பதறிப்போய் சீராக இருக்கிற ஆடையைத் தளர்த்தி (ஆண்களுடைய) நல்லொழுக்கத்தைப் பறித்துக் கொள்கின்ற பெண்கள்,

சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொ(ண்)டு வழியே போய்... சுகித்தும்; ‘ஹா’ என்று சிரித்தும்; மேலே விழுந்தும்; முடித்திருக்கிற நீண்ட கூந்தலை விரித்துக்கொண்டும்; சிவந்த உதடுகளைக் கொண்ட வாய்க்குள் வெற்றிலைச் சுருளை அடக்கிக் கொண்டும் மயக்கத்தைத் தருகின்றதான (அவர்களுடைய) வழியிலே சென்று,

படுத்த பாயலில் அணைத்து மா முலை பிடித்து மார்பொடும் அழுத்தி வாய் இதழ் கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே... படுத்திருக்கும் மெத்தையில் தழுவிக் கொண்டு தங்களுடைய மார்பகத்தை மார்போடு சேருமாறு அழுத்தியும்; உதடுகளைக் கவ்வியும் வெட்கத்தை அடியோடு தொலைத்தும் இருக்கின்ற பாவிகள் (விரித்திருக்கின்ற) வலையினாலே,

பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மல(ம்) தின்(னும்) நாய் என பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ... உண்டாகியிருப்பதான நோயாலும் பிணியாலும் பாயில் கிடந்து; உடல் வெளுத்து; வாயெல்லாம் மலம் தின்னும் நாயைப் போல் நாற்றம் வீச; பசியாலும் தாகத்தாலும் வாடி, இவ்வகையாக நான் எடுத்திருக்கிற இந்த உயிரோடு (பிறவியோடு) அலைந்து திரிவேனோ.  (திரியாமல் காக்க வேண்டும்)

வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே... பெருஞ்சினத்தோடு வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்பைத் தொடுத்து அழித்தவனும்; (விஸ்வாமித்திரருடைய) வேள்வியை நடத்திக் கொடுத்தவனும்; சிவதனுசாகிய நீண்ட வில்லை முறித்தவனுமான திருமாலின் மருகனே! 

விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா... உலகத்தைப் படைத்தளித்தவனான பிரமனை அதிரச் செய்து; அவனுடைய ஒரு தலையைக் கிள்ளியெடுத்து; அதைக் கையில் கொண்டு உலவியரும்; நெற்றிவிழியாலே மன்மதனை எரித்தவரும்; தந்தையுமான சிவபெருமானுடைய குருநாதனே!

அடுத்த ஆயிர விடப் பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா... வரிசையானதும் விஷமுள்ளதுமான ஆயிரம் படங்களைக் கொண்ட ஆதிசேஷன் நடுக்கமுறவும்; கிரெளஞ்ச மலை பிளவுபடவும்; வஞ்சகர்களான அரக்கர்களுடைய பெரிய தலைகள் பதறும்படியாகவும் போரிட்ட மயில் வீரனே!

அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையோடு அருக்கொணா மலை தருக்கு உலாவிய பெருமாளே.... அறங்களை வளர்த்தபடி இருப்பவளான உமையம்மை மகிழும்படியாக ஆறு திருமுகங்களோடும்; அழகியும் குறத்தியுமான வள்ளியோடும் தேவானையோடும் மரங்கள் நிறைந்ததாகிய அருக்கொணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

பெருஞ்சினத்தோடு வந்தவளான தாடகையின் கோபத்தை ஒரே அம்பால் அடக்கி; விஸ்வாமித்திரருடைய வேள்வியைக் காத்து; சிவதனுசை முறித்தவரான திருமாலுடைய மருகனே!  இந்த உலகத்தைப் படைத்தவனான பிரமனுடைய ஒரு தலையைக் கிள்ளி, கையில் அந்தக் கபாலத்தோடு உலவியவரும்; மன்மதனை நெற்றிவிழியால் எரித்தவரும்; தந்தையுமான சிவனுடைய குருநாதனே!   அறங்களை வளர்ப்பவரான உமையம்மையார் மகிழும்படியாக ஆறு திருமுகங்களுடனும்; வள்னி தேவானையுடனும் மரங்கள் நிறைந்ததான அருக்கொணா மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வீசப்படும் வாள் எனத்தக்க கண்களால் விழித்துப் பார்த்து; மார்பகத்தை அசைத்து; சேலையைத் தளர்த்தி ஆடவருடைய நல்லொழுக்கத்தைப் பறித்துக் கொள்பவர்களும்; சுகித்தும்; களிப்போடு நகைத்தும்; மேலே விழுந்தும்; முடிந்த கூந்தலை விரித்தும்; மெத்தையில் மார்புறத் தழுவியும் செய்கின்ற நாணமில்லாத பாவியருமான பெண்களோடுடைய வலையில் விழுவதால் நோயுற்று, பாயில் கிடந்து உடல் வெளுத்து வாய் நாறி இந்த உயிரைச் சுமந்து திரிவேனோ.  (அவ்வாறு திரியாமல் காத்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.