மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பதச் சேதம்

சொற் பொருள்

மன கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே

 

வகைக்கும்: வகையாக (முறையாக) உள்ள; மநு நூல்: நீதி நூல்;

வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி

 

மனேரதம்: மனத்தின் விருப்பம்; தொகை படியினால்: கணக்கின் படியினால்;

வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே

 

துகைத்து: விலக்கி, நீக்கி; வகையால் நினைந்து: முறையாக நினைத்து; மிகுத்த பொருள்: மேலான பொருள்;

வெகுட்சி தனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வர வேணும்

 

வெகுட்சி: சினம்;

மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள்

 

 

வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா

 

வரர்: உயர்ந்தோர்; மருட்டி வரு: அச்சுறுத்தி வந்த;

தினை புனம் மு(ன்)னே நடந்து குற கொடியையே மணந்து செகத்தை முழுது  ஆள வந்த பெரியோனே

 

 

செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திருப்பழநி வாழ வந்த பெருமாளே.

 

 

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே... மனத்திலே ஒரு கவலையும் இல்லாமல் உனக்குத் தொண்டுசெய்துகொண்டு, முறையாக அமைந்துள்ள நீதிநூல்கள் சொல்லியுள்ள முறைமையிலிருநது தவறாதபடியும்;

வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி... மனத்தின் விருப்பங்கள் (வரையறை செய்யப்பட்ட) கணக்கின்படி அமைந்து; வேதம் சொல்கின்ற பொருளை ஐயம் திரிபற* தேடி உணர்ந்தும்;

(* ஒன்றின் பொருள் இதுவா அதுவா என்று தெரியாமல் மயங்குவது ஐயம்; தவறான பொருளையே சரி என்று புரிந்துகொள்வது திரிபு.)

வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) உவகை யால் நினைந்து மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே... வினைகளைத் தரக்கூடிய பாவச் செயல்களை முற்றிலும் விலக்கியும்; உன்னை உவகையோடு எண்ணி, தியானித்து; மேலான பொருளைச் சொல்வதான ஆகமங்களில் கூறப்பட்டுள்ள முறைகளின்படி,

வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்... சினத்தை அடியோடு நீக்கி; எப்போதும் மகிழ்ச்சியோடு இருந்து; மேலானவனான உன்னையே வணங்குவதற்கான (அருளைத் தர) நீ என்னெதிரிலே தோன்றவேண்டும்.

மனத்தில்வருவோனெ என்(று) உன் அடைக்கலம் அதாக வந்து மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்... (ஆழ்ந்து சிந்தித்தால்) மனத்துக்குள்ள வருபவனே என்று கருதி, உன்னை அடைக்கலமாகப் புகுந்து உன் மலர்ப்பாதத்தையே பணிந்த முனிவர்களுக்கும்;

வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும் மனமேயிரங்கி மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா... மற்ற மேலோர்களுக்கும் தேவர்களுக்கும் மனமிரங்கி, அவர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரர்களைப் போரில் வென்ற கூரான முனையையுடைய வேலனே!

தினைப்புனமுனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுதாள வந்த பெரியோனே... முன்னொரு காலத்தில் தினைப்புனத்துக்குச் சென்று; குறவர் குலக்கொடியான வள்ளியை மணந்துகொண்டு; ஜகம் முழுவதையும் ஆண்டுகொண்ட பெரியோனே!

செழித்தவளமே சிறந்த மலர்ப்பொழில்களே நிறைந்த திருப்பழநி வாழவந்த பெருமாளே.... செழிப்பும் வளமும் நிறைந்த மலர்ச்சோலைகள் மிகுந்துள்ள திருப்பழனியில் வீற்றிருக்கின்ற பெருமாளே! 

சுருக்க உரை

ஆழ்ந்து சிந்திப்பவர்கள் மனத்துக்குள்ளே வருபவன் நீ என்று உன்னிடத்திலே அடைக்கலம் புகுந்து உன் பாதங்களையே வணங்குகின்ற முனிவர்களுக்கும் மற்ற மேலானவர்களுக்கும் தேவர்களுக்கும் இரக்கம் கொண்டு அவர்களை அச்சுறுத்தி வந்த சூரர்களைப் போரில் அழித்த வேலனே!  அன்றொருநாள் தினைப்புனத்துக்குச் சென்று குறவர் குலக்கொடியான வள்ளியை மணந்துகொண்டு உலகனைத்தையும் ஆண்டுகொண்ட பெரியோனே!  செழிப்பும் வளமும் நிறைந்த மலர்சோலைகள் மிகுந்த பழனிப் பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மனத்திலே எந்தக் கவலையும் இல்லாமல் உனக்குத் தொண்டு செய்வதிலே நாட்டம் கொண்டும்; முறையான நீதிநூல்களில் சொல்லியுள்ளபடி மனத்தின் விருப்பங்கள் முறைப்படியாக அமைந்தும்; வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருளை ஐயம் திரிபு இல்லாமல் உணர்ந்தும்; வினைகளுக்குள் செலுத்துவதான பாவகாரியங்களை அறவே நீக்கியும்; மேலான பொருளைச் சொல்கின்ற ஆகமங்களின்படி சினத்தை முற்றிலும் நீக்கியும்—மேலானவனான உன்னையே வணங்குவதற்கான அருளைத் தருவதற்காக அடியேன் முன்னே தோன்றியருள வேண்டும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.