மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 473

தாராகாசுரன் சரிந்து விழுந்து

Updated On :7 பிப்ரவரி 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

தாரகா சுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன்

 

பறிந்து: பறித்து; சாதி பூதரம்: சிறந்த மலை (மேருமலை); முதுமீன்: முதிர்ந்த மீன், பெரிய மீன்கள்;

அம் சாகர(ம்) ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை

 

அம்: அழகிய; சாகரம்: கடல்; ஓதை: ஓசை; கொளுந்த: கொளுத்த, தீப்பற்ற; தாரை வேல்: கூரிய வேல்; கடம்ப: கடம்ப மாலை அணிந்தவனே; மததாரை: மதநீர்ப் பெருக்கு;

ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானையாளு(ம்) நின்ற குன்ற மற மானும்

 

உம்பர்: தேவலோகத்து; கும்ப: மத்தகம்; வாரண அசலம்: மலை  போன்ற யானை—ஐராவதம்; பொருந்து மானை ஆளும்: (ஐராவதத்தின் மேலே) பொருந்தியிருக்கும் தேவயானையும்;  குன்ற மறமானும்: வள்ளியும் ;

ஆசை கூரு(ம்) நண்ப என்று(ம்) மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ

 

மயூர: மயில்;

பாரம் ஆர் தழும்பர் செம் பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி

 

பாரம்: தனபாரம், மார்பு; ஆர் தழும்பர்: நிறைந்த தழும்பை உடையவர்; சிறுதாளி: ஒருவகைச் செடி, செடியின் பூ;

பார மாசுணங்கள் சிந்து வார(ம்) ஆரம்  என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே

 

பார: கனத்த; மாசுணம்: பாம்பு; சிந்து ஆரம்: நொச்சி மாலை; என்பு: எலும்பு; அடம்பு: ஒருவகைக் கொடி(யின் பூ); பானல்: கருங்குவளை; கூவிளம்: வில்வம்; கரந்தை: திருநீற்றுப் பச்சை; அறுகு: அறுகம் புல்;

சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெரு வாழ்வே

 

சீதள: குளிர்ந்த; அரவிந்த: தாமரை; அரவிந்த வஞ்சி: தாமரையைப் போன்ற (முகத்தையுடைய) உமை;

தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு(ம்) தேவனூர் விளங்க வந்த பெருமாளே.

 

 

தாரகாசுரன்சரிந்து வீழ வேருடன்பறிந்து சாதி பூதரம் குலுங்க... தாரகாசுரன் சரிந்து வீழும்படியும்; உயர்ந்த மேருமலையானது வேரோடு பிடுங்கப்பட்டு குலுங்கும்படியும்;

முதுமீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த அன்று தாரை வேல்தொ டுங்கடம்ப... பெரிய மீன்களையும் அழகையும் ஓசையையும் உடைய கடல் கலங்கும்படியாக அதில் தீப்பற்றிக் கொள்ளும்படியும் முன்னொரு நாளில் கூரிய வேலை எறிந்தவனே!  கடம்ப மாலையை அணிந்தவனே!

மததாரை ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை யாளு நின்ற குன்ற மறமானும்... ஒழுகுகின்ற மதநீர்ப் பெருக்கையும் ஆரவாரத்தையும் மத்தகத்தையும் உடையதும்; மலைபோலப் பெரியதுமான ஐராவதத்தின் மேலே பொருந்திருப்பளான தேவயானையும்; குன்றங்களைச் சேர்ந்த வேடர்களுடைய குலத்தில் வந்த வள்ளியும்,

ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ... அன்பு பாராட்டுகின்ற தோழனே என்றும்; சிறந்த மயிலை வாகனமாக உடையவனே என்றும்; கந்தனே என்றும் என்னுடைய ஆவல் தீரும்படியாக என்றைக்கு மனம் ஒருமித்து நிற்கும்படியாகப் புகழ்வேனோ.

பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி... (உமையம்மையில்) பாரமான மார்புகளினால் ஏற்பட்ட தழும்பை உடையவரும்; செம்பொன்னைப் போன்ற மேனியைக் கொண்டவரும்; கங்கையையும் வெள்ளையான கபால மாலையையும் கொன்றையையும் தும்பையையும் சிறுதாளிப் பூவையும்,

பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே... கனமான பாம்புகளையும்; நொச்சியையும் மாலையாக அணிந்தவரும்; அடம்பு, கருங்குவளை, வில்வம்,  திருநீற்றுப் பச்சை, அறுகம்புல் ஆகியவை,

சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே... ஒன்றாகச் சேர்ந்து மணக்கின்ற பெருமானான ஈசனுடைய இடது பாகத்தில் விளங்குபவளும்; குளிர்ந்த தாமரையைப் போன்ற முகதை உடையவளும் கொடிபோன்றவளுமான உமையம்மையின் பெருஞ்செல்வமே!

தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு தேவனூர்விளங்க வந்த பெருமாளே... தேவர்கள் எல்லோரும் திரண்டு பூமிக்கு வந்து வணங்குபவனே!  தேவனூர் விளங்கும்படியாக நின்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உமையம்மையின் பாரமான மார்புகள் அழுந்திய தழும்புகளைப் பெற்றிருப்பவரும்; செம்பொன்னைப் போன்ற திருமேனியை உடையவரும்; கங்கை; கபால மாலை; கொன்றை; தும்பை; சிறுதாளி; கனம் நிறைந்த பாம்புகள்; நொச்சி மாலை; கடம்பு; எலும்பு; அடம்பு எனப்படும் கொடிப் பூ; கருங்குவளை; வில்வம்; கரந்தை; அறுகம் புல் என இவையெல்லாமும் சேர்ந்து மணக்கின்றவரான ஈசனுடைய இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளும்; குளிர்ந்த தாமரையைப் போன்ற முகத்தை உடையவளுமான பார்வதியம்மையின் பெருஞ் செல்வமே!  தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி பூமிக்கு இறங்கிவந்து வழிபடும் தேவனூர் விளங்கும்படியாக நிற்கின்ற பெருமாளே!

தாராகாசுரன் சரிந்து விழுந்து இறந்துபடும்படியும்; மேருமலை வேரோடு பறிக்கப்பட்டு நடுக்கமுறும்படியும்ம்; ஆராவாரத்துடன் ஒலிக்கின்ற கடல் கலங்கும்படியாக அதிலே பெரிதாகத் தீப்பற்றும்படியும் முன்னொரு நாளில் கூரிய வேலை வீசியவனே!  தேவலோகத்தைச் சேர்ந்ததும்; ஆரவாரத்தையுடையதும்; மத்தகத்தைக் கொண்ட மலைபோன்ற ஐராவதத்தின் மீது அமர்ந்து வருபவரான தேவானையும்; மலைகளைச் சேர்ந்த வேட்டுவர் குலத்திலுதித்த வள்ளியும் விரும்புகின்ற அன்பனே!  மயில் வாகனனே!  கந்தனே

--என்றெல்லாம் என்னுடைய ஆவல் தீரும்படியாக மனமொன்றி என்று நான் உன்னைப் புகழ்வேன்!  (நான் இவ்வாறெல்லாம் புகழ்ந்து பாடும்படியாக எனக்கு அருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.