/

பகுதி - 599

ஆணவக்காரர்களால் அறிய முடியாதவனே! 

News image
Updated On :5 ஜூலை 2017, 6:51 am

பதச் சேதம்

சொற் பொருள்

வண்டு போல் சாரத்து அருள் தேடி

 

சாரத்து: சாரத்தின் (மலரின் சாரமான தேனை);

மந்தி போல் கால பிணி சாடி

 

காலப் பிணி: யமனுடைய பாசக் கயிற்றின் பிணிப்பு;

செண்டு போல் பாசத்துடன் ஆடி

 

செண்டு: செண்டாயுதம்; பாசத்துடன்: பாச, பந்தங்களுடன்;

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே

 

சித்து அருள்வாய்: மெய்யறிவை அருள்வாய்;

தொண்டரால் காண பெறுவோனே

 

 

துங்க வேற்கானத்து உறைவோனே

 

துங்க: தூய; வேற்கானம்: திருவேற்காடு;

மிண்டரால் காண கிடையானே

 

மிண்டர்: மதங்கொண்டவர்கள், ஆணவமானவர்கள்; கிடையோனே: கிடைக்காதவனே;

வெஞ்ச மா கூடல் பெருமாளே.

 

 

 

 


வண்டுபோற் சாரத்து அருள்தேடி... தேனைத் தேடி அலையும் வண்டைப் போல உன்னுடைய அருளை நான் தேடிப் பெறவும்;

மந்திபோற் காலப் பிணிசாடி... (கிளைக்குக் கிளை தாவக்கூடிய) குரங்கைப் போல, (யமனுடைய) பாசக் கயிற்றின் பிணிப்புக்கு அகப்படாமல் தாவவும்;

செண்டுபோற் பாசத்துடனாடி... வீசப்படுகின்ற செண்டு எவ்வாறு பகையை அறுக்கிறதோ அவ்வாறு நான் பாச பந்தங்களை அறுக்க வல்லவனாகவும்;

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே... நில்லாமல் ஓடுகின்ற இந்த மனத்தை நாசம் செய்து (சும்மா இருக்கும் சுகம் பெற்று) மெய்யறிவை அடையுமாறு அருள வேண்டும்.

தொண்டராற் காணப் பெறுவோனே... அடியவர்களால் பார்க்க முடிந்தவனே!

துங்க வேற் கானத்து உறைவோனே... பரிசுத்தமான திருவேற்காட்டில் உறைபவனே! 

மிண்டராற் காணக் கிடையானே... ஆணவம் நிறைந்தவர்களால் காண முடியாதவனே! 

வெஞ்சமாக் கூடற் பெருமாளே.... திருவெஞ்சமாக்கூடலிலே வீற்றிருக்கின்ற பெருமாளே! 

சுருக்க உரை

அடியார்களுக்குக் காட்சியளிப்பவனே!  பரிசுத்தமான திருவேற்காட்டில் உறைபவனே!  ஆணவக்காரர்களால் அறிய முடியாதவனே!  திருவெஞ்சமாக் கூடலே வீற்றிருக்கின்ற பெருமாளே! 

தேனைத் தேடித் திரியும் வண்டைப் போல உன்னுடைய அருளைத் தேடித் திரிபவனாகவும்; மரக்கிளைகளைத் தாண்டும் குரங்கைப் போல, யமபாசத்துக்கு அகப்படாமல் தாண்டுபவனாகவும்; வீசிய செண்டாயுதம் பகையை வேரறுப்பதைப் போல நான் பாச பந்தங்களை வேரறுக்கவும்,

ஓயாது அலைகின்ற இந்த மனத்தை நாசம் செய்து சும்மா இருக்கும் நிலையக் கொடுத்தருளி மெய்யறிவைத் தந்தருள வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.