/

இறைவன் குருநாதரை ஆட்கொண்டருளி, பாடுவதற்கு அடியெடுத்துக் கொடுத்த பிறகு ‘வயலூருக்கு வா’ என்று கூறியருளினான்.  இதை

“நாள்சில கழிந்தபினர் நம்பன் திருமகனார்
ஆட்சி அருளாலே அல்லல்தீர் மைந்தாநீ
மாட்சிமிக நாம்வாழ் வயலூருக்(கு) எய்திடென
நீட்சிமிகு சொற்கள் நேர்ந்த அசரீரியதா..”

என்று வாரியார் சுவாமிகள் தன்னுடைய அருணகிரிநாத சுவாமிகள் புராணத்தில் பாடுகிறார்.  இந்த நிகழ்ச்சியைத்தான் குருநாதர் ‘வாவென அழைத்த’ வாரம் (அன்பை) என்றும் மறவேன் என்று இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் கணக்கில் சேராத ஒரு வல்லொற்றுடன் இரண்டு குற்றெழுத்துகளைக் கொண்டவை.

தானதன தத்த தானதன தத்த
      தானதன தத்த                      தனதான

தாமரையின் மட்டு வாசமல ரொத்த
         தாளிணைநி னைப்பி             லடியேனைத்
      தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
         தாருவென மெத்தி               யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
         வாவெனஅ ழைத்தென்           மனதாசை  
      மாசினைய றுத்து ஞானமுத ளித்த
         வாரமினி நித்த                   மறவேனே
காமனையெ ரித்த தீநயன நெற்றி
         காதியசு வர்க்க                   நதிவேணி 
      கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
         காதுடைய அப்பர்                 குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
         சோலைபுடை சுற்று              வயலூரா 
      சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து 
         சூர்தலை துணித்த               பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.