/

பகுதி - 573

பாம்பைக் காதணியாக அணிந்திருக்கின்ற

Updated On :2 ஜூன் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பு இல் அடியேனை

 

மட்டு: தேன்;

தாது அவிழ் கடுக்கை நாக(ம்) மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி

 

தாது: மகரந்தம்; கடுக்கை: கொன்றை; நாகம்: மகிழ்: மகிழ மரம்; கற்ப தாரு: கற்பக விருட்சம்; மெத்திய: நிறைந்துள்ள;

மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை

 

 

மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே

 

வாரம்: அன்பு; நித்தம்: தினமும்—எப்போதும்;

காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி

 

காதிய: (எதையும்) அழிக்க வல்ல; சுவர்க்க நதி: ஆகாய கங்கை; வேணி: சடாமுடி;

கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா

 

பணி: பாம்பு; அப்பர்: (இங்கே) சிவனார்;

சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா

 

சோமன்: சந்திரன்; அருக்கன்: சூரியன்; மீன்: நட்சத்திரங்கள்; புடைசுற்று: பக்கங்களில் சூழ்ந்துள்ள;

சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே.

 

சூடிய தடக்கை: தடக்கையில் சூடிய என்று மாற்றுக; வேல் கொடுவித்து: வேலைக் கொண்டு, செலுத்தி;

மரையின் மட்டு வாசமல ரொத்த தாளிணை நினைப்பில் அடியேனை... தேன்ததும்பும் தாமரையாகிய நறுமணம் நிறைந்த மலரையொத்த உன்னுடைய இரு திருவடிவகளையும் நினைக்கவே செய்யாத அடியேனை;

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப தாருவென மெத்திய விராலி மாமலையில்... (மலர்கள்) விரிவதால் ‘மகரந்தம் கொட்டுகின்ற கொன்றையும்; சுரபுன்னையும்; மகிழ மரமும் கற்பக விருட்சங்களைப்போல வளர்ந்து நிறைந்திருக்கின்ற விராலி என்னும் அழகிய மலையிலே,

நிற்ப நீகருதி யுற்று வாவென அழைத்து என்மனதாசை மாசினை அறுத்து ஞானமுது அளித்த வாரம்... ‘நாம் நிற்போம்.  அதைக் கருத்தில்கொண்டு நீ அங்கே வா’ என்று என்னை அழைத்து, என் மனத்திலேயுள்ள ஆசையாகிய அழுக்கைப் போக்கி, ஞானாமிர்தத்தைப் புகட்டிய அன்பை,

இனி நித்த மறவேனே... இனி என்றென்றும் நான் மறக்கமாட்டேன்.

காமனை யெரித்த தீநயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி... மன்மதனைப் பொசுக்கிய நெற்றியின் நெருப்புவிழியையும்; எதையும் அழித்துவிடும் (வேகத்தோடு) வந்த ஆகாய கங்கையை அடக்கிய சடாமுடியையும்;

கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட காது உடைய அப்பர் குருநாதா... காட்டில் இருப்பதும்; புற்றில் வாழ்வதும்; படமெடுத்து ஆடுவதுமான பாம்பை(க் காதணியாக) அணிந்த செவிகளையுடைய சிவனாருடைய குருநாதனே!  (பாம்புகளைக் காதணியாக அணிந்த திருச்செவிகளில்தான் பிரணவத்தின் பொருள் ஓதப்பட்டது என்பது குறிப்பு.)

சோமனொடு அருக்கன் மீனுலவு மிக்க சோலை புடைசுற்று வயலூரா... சந்திரன், சூரியன், விண்மீன்கள் எல்லாமும் (தம்மிடையே) உலவும் வண்ணமாக உயர்ந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்துள்ள வயலூரனே! 

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து சூர்தலை துணித்த பெருமாளே.... தடக்கையிலே தரித்திருக்கின்ற வேலைக்கொண்டு—செலுத்தி—சூரனுடைய தலையை வெட்டி வீழ்த்திய பெருமாளே!

சுருக்க உரை

மன்மதனைப் பொசுக்கிய நெற்றி விழியையும்; எதையும் அழிக்கும் வேகத்தோடு வந்த ஆகாய கங்கையை அடக்கிய சடாமுடியையும்; காட்டிலே உள்ள புற்றுகளில் வாழ்வதும்; படமெடுத்து ஆடுவதுமான பாம்பைக் காதணியாக அணிந்திருக்கின்ற சிவனாருடைய குருநாதனே!  சந்திரனும் சூரியனும் நட்சத்திரங்களும் தம்மிடையே உலவும் அளவுக்கு உயரமாக வளர்ந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்திருக்கும் வயலூரனே!  திருக்கையில் தாங்கியிருக்கின்ற வேலைக் கொண்டு சூரனுடைய தலையைக் கொய்த பெருமாளே!

தேன் நிறைந்த தாமரையின் நறுமணத்தை நிகர்த்த உன்னுடைய இரு திருவடி மலர்களையும் நினைத்தே அறியாத அடியேனை, ‘மகரந்தங்கள் சிந்துகின்ற கொன்றை மரமும்; சுரபுன்னை மரமும்; மகிழ மரமும் கற்பக விருட்சங்களைப் போல செழித்து வளர்ந்திருக்கின்ற விராலி என்னும் அழகிய மலையில் யாம் நிற்போம்.  அதனைக் கருத்தில் கொண்டு அங்கு வருக’ என்று அழைத்து, அடியேனுடைய மனத்திலிருந்த ஆசை என்னும் அழுக்கைப் போக்கி, ஞானாமுதத்தை ஊட்டிய அன்பை இனி ஒருபோதும் மறவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.