பதச் சேதம் | சொற் பொருள் |
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே
| சந்த: அழகிய; இயலாலே: இயல்பாலே; |
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே
| குழைக்கும்: குழையை அணிந்த காது; குண்: நிறமுள்ள; குமிழ்க்கும்: குமிழம்பூவைப் போன்ற மூக்கு; சிங்கியர்: நாணமற்றவர்கள்; (சிங்கி: நாணமற்றவள்); |
உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டு உண்டு உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே
| உழைக்கும்: உழைக்கின்ற; துன்பன்: துன்பத்தை உடையவன்; |
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டு உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய்
| ப்ரபைக்கு: ஒளிக்கு; தண்டு: தண்டை; உயர்க்கும்: உயர்வான; சேராய்: சேர்த்துக்கொள்வாய்; |
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும் தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்
| அண்ட: சேர்த்து; அங்கி: அக்கினி; |
தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும் சங்கரிக்கு என்றும் பெரு வாழ்வே
| தனிப்பங்கின்: ஒப்பற்றதான பங்கில், பாகத்தில்; செம்பரத்தின்: சிறந்த பர மண்டலத்தில்; பங்கயத்தில் சஞ்சரிக்கும் சங்கரி: தாமரையில் வீற்றிருக்கும் சங்கரி (‘அம்புயமேல் திருந்திய சுந்தரி’ என்றார் அபிராமி பட்டரும்); |
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும் கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே
| கழைக்கும்: கோலுக்கும், அங்குசத்துக்கும்; குஞ்சரக் கொம்பு: தேவானை; கலைக் கொம்பு: (கலை=மான்) வள்ளி; கதித்து: மகிழ்ந்து; |
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே.
| கொண்டலில்: மேகத்தைப் போல; |
குழைக்கும் சந்தனச் செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் குலுக்கும் பைங்கொடிக்கு என்று... குழைத்திருக்கின்ற சந்தனக் கலவையையும் சிவந்த குங்குமச் சாந்தையும் பூசியதும்; அழகிய, பெரிய குன்றத்தை ஒத்த மார்பகங்களைக் குலுக்குகிற பசிய கொடியைப்போலக் காட்சியளித்து,
இங்கு இயலாலே குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண்... இயல்பாகவே, குண்டலம் தரித்த காதினிடத்திலும் குமிழம் பூவைப் போன்ற நிறமுள்ள மூக்கினிடத்திலும் சென்று பேசுவதைப் போன்ற சிவந்த, கயல் போன்ற கண்களைக்,
கொண்டு அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே... கொண்டு அழைக்கின்றவர்களும்; இசையைப் போல ஒலிக்கும் குரல்வளத்தையுடைய, நாணமற்ற பெண்களின் காரணமாக,
உழைக்கும் சங்கடத் துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டு உண்டு... உழைத்து (அவதியுறுவதால்) வருகின்ற சங்கடங்களையும் துன்பங்களையும் அடைந்திருப்பவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்துத் தின்று தின்று,
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே... உடலாகிய பிண்டம் பருத்துப் போய் இந்த உலகத்தில் கிடந்து உழலாமல்,
உதிக்கும் செம் கதிர்ச் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டு... உதிக்கின்ற சிவந்த சூரியன் வீசுகின்ற ஒளிக்கு ஒப்பானதான தண்டையணிந்து சிவந்ததும்,
உயர்க்கும் கிண்கிணிச் செம் பஞ்சு அடி சேராய்... மேன்மையுடைய கிண்கிணியை அணிந்ததும், செம்பஞ்சுபோலச் சிவந்ததுமான பாதத்திலே என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தழைக்கும் கொன்றையைச் செம்பொன் சடைக்கு அண்ட அங்கியைத் தங்கும் தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்... தழைத்திருப்பதான கொன்றைப் பூவைச் செம்பொன்னை ஒத்த சடையிலே சேர்த்துக்கொண்டு; சிவந்த கையிலே தீயை ஏந்துபவரான சிவபெருமானுடைய,
தனிப் பங்கின் புறத்தின் செம் பரத்தின் பங்கயத்தின் சஞ்சரிக்கும் சங்கரிக்கு என்றும் பெரு வாழ்வே... ஒப்பில்லாத இடது பக்கத்திலும்; சிறந்த பரமண்டலத்திலும்; தாமரையிலே இருந்தபடியும் இருப்பவரான சங்கரியுடைய நல்ல மகனே!
கழைக்கும் குஞ்சரக் கொம்பும் கலைக் கொம்பும் கதித்து என்றும் கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே... அங்குசத்தால் அடக்கப்படும் ஐராவதம் வளர்த்த கொடியைப் போன்ற தேவானைக்கும்; மானிடத்திலே பிறந்த வள்ளிக்கும் அவர்களையை மீன்போன்ற கண்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற திண்மையான தோள்களை உடையவனே!
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே.... கார்மேகத்தைப் போலப் பொங்கியெழுந்து; சங்குகளைக் கரையிலே கொண்டுவந்து கொட்டுகிற (கடல் சூழ்ந்த) திருச்செந்தூரில் அன்போடு வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
தழைத்திருக்கின்ற கொன்றையைத் தன் சிவந்த சடையில் சூட்டியவரும்; தேன் கரத்திலே அக்கினியை ஏந்துபவருமான சிவபெருமானுடைய இடது பாகத்திலும்; பரமண்டலங்களிலும்; தாமரைப் பூவிலும் இருப்பவரான சங்கரி மனம்மகிழும் சிறந்த மகனே! அங்குசத்தால் அடக்கப்படும் ஐராவதம் வளர்த்தவரான தேவானையும்; மானிடத்திலே பிறந்தவரான வள்ளியும் அவர்களுடை கண்கள் மகிழ்ச்சியால் பூரிக்கும் வண்ணம் திண்மையான தோள்களை உடையவனே! கார்மேகத்தைப் போலப் பொங்கியெழும் கடல், கரையிலே சங்குகளைக் கொண்டுவந்து கொட்டுகின்ற திருச்செந்தூரில் அன்போடு வீற்றிருக்கின்ற பெருமாளே!
சந்தனத்தையும் குங்குமத்தையும் பூசிய மார்பகங்களை அசைக்கின்ற பூங்கொடிகளைப் போன்றவர்களும்; குழைபூண்ட செவிகளிடத்திலும் குமிழம்பூவைப் போன்ற நிறத்தையுடைய நாசியிடத்திலும் சென்று பேசுவதைப் போல பரந்திருக்கிற கண்களை உடைய நாணமற்றவர்களான விலைமாதர்களின் காரணத்தாலே நான் உலகத்தில் பல துன்பங்களையும் அடைந்து வீணில் அலையாமல், தண்டையும் கிண்கிணியும் கொஞ்சும் உன்னுடைய திருவடிகளிலே என்னைச் சேர்த்துக்கொண்டு அருள்வாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

