பகுதி - 517

இந்த உடலையே சுகமென்று நினைத்து
Updated on
3 min read

பதச் சேதம்

சொற் பொருள்

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் ச(ன்)னி சூலை மகோதரம் மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம்

 

வாதம்: வாயு; மிடா: பானை; மிடா வயிறு: பானைபோன்ற வயிறு; ஈளை: கோழை, க்ஷயரோகம் (TB); சீதம்: சீதபேதி; பல்சனி: பல(நோய்களாலே ஏற்படும்) ஜன்னி; சூலை: கீல்வாதம், முடக்குவாதம் போன்ற rheumatism சார்ந்த நோய்கள்; மகோதரம்: பெரு வயிறு; மாசு அங்கண்: அங்கண் மாசு என்றுகூட்டி, கண்ணில் ஏற்படும் நோய்களெக் கொள்க; குளிர்காசம்: கோழையால் ஏற்படும் இழுப்பு—ஆஸ்துமா;

மாறும் கக்கலோடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு  அறுவாரும் சுற்றினில் வாழ் சதி காரர்கள் வெகு மோகர்

 

மாறும்: அடுத்தடுத்து; கக்கல்: வாந்தி;

சூழ் துன் சித்ர கபாயை மூ ஆசை கொண்டு ஏதும் சற்று உணராமலே மாயை செய் சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி

 

சூழ்: சூழ்ந்திருக்கும்; துன்: துர், கெட்ட; கபாயை: கபாய் என்றால் கவசம் என்று பொருள்—உருதுச் சொல் (பதச்சேதத்தின் கீழே தரப்பட்டுள்ள மேற்கோளையும் கூடுதல் விளக்கத்தையும் காண்க) இங்கே ஆகுபெயராக உடல் என்று பொருள்; மூஆசை: மண், பெண், பொன்னாசைகள்;

தூசின் பொன் சரமோடு குலாய் உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள் தாராய்

 

தூசு: ஆடை; பொற்சரம்: பொன் சங்கிலி—கழுத்தணி; குலாய்: குலாவி; தூஅம் சுத்த அடியார்: தூய்மை வாய்ந்த, உயர்ந்த, சுத்தமுள்ள அடியார்கள்;

தீதந்தித்திமி.........என பேரி

 

 

சேடன் சொக்கிட வேலை கடாகம் எ(ல்)லாம் அஞ்சு உற்றிடவே அசுரார் கிரி தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா

 

சொக்கிட: மயக்கமடைய; வேலை: கடல்; கடாகம்: அண்ட கோளங்கள்; அஞ்சு உற்றிடவே: அச்சம் கொள்ளவே; அசுரார் கிரி: அசுரர்கள் ஒளிந்திருந்த மலைகள்; பொட்டெழவே: பொடிபடவே;

வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற் குருவாய் அவர் காதினில் மேவும் பற்று அலர் பேறருள் ஓதிய முருகோனே

 

வேதன்: பிரமன்; கடாவி: செலுத்தி—இங்கே குட்டி; பேறருள்: பெறத்தக்கதாகிய அருள்;

வேஷம் கட்டி பின் ஏகி மகா வ(ள்)ளி மாலின் பித்து உறவாகி வி(ண்)ணோர் பணி வீரம் கொட்ட பழனா புரி மேவிய பெருமாளே.

 

 



கபாய்:
கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த
அம்பொற் புயத்தாற் கமைந்ததால் - அம்பை
முலையானைக் கோடணிந்த மார்பு
.

என்பது குமரகுருபரருடைய சிதம்பரச் செய்யுட் கோவையில் வரும் பாடல்.  களிற்றின் கபாய் அணிந்த என்பதற்கு ‘யானையின் தோலை (உரித்துப்) போர்த்திய சிவன்’ என்பது பொருள்.  இது ஒரு உருதுச் சொல்.  அருணகிரி நாதருடைய பாடல்களில் ‘சலாம்’ என்ற உருதுச் சொல் இரண்டு இடங்களில் பயன்பட்டிருப்பதை முன்னர் சுட்டியிருக்கிறோம்.  இவர்களுடைய காலத்தில் உருதுச் சொற்கள் மக்களுடைய பரவலான பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்று புரிந்துகொள்கிறோம்.  (இந்தச் சொல்லுக்குச் சூட்டிறைச்சி என்றும் பொருளுண்டு.  இன்று அதனை கபாப்—Kebab—என்கிறோம்.)

வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள் சீதம் பற்சனி சூலை மகோதரம்... வாயுவினாலும் பித்தத்தாலும் வரும் நோய்களும்; பானையைப் போன்ற வயிறு; க்ஷயரோகம்; சீதபேதி; பலவகையான நோய்களால் ஏற்படும் ஜன்னி; பெருவயிறு;

மாசு அங்கண் பெரு மூலவி யாதிகள் குளிர்காசம்... கண்ணிலே ஏற்படக்கூடிய குறைபாடுகள், நோய்கள்; மூலத்தைப் போன்ற பெரிய வியாதிகள்; குளிர்ச்சியால் இழுப்பை ஏற்படுத்தும் (ஆஸ்துமா போன்ற) நோய்கள்;

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடும் தத்துவ காரர் தொணூற்று வாருஞ் சுற்றினில் வாழ் சதி காரர்கள் வெகுமோகர்.. தொடர்ச்சியாக ஏற்படும் வாந்தியோடு இன்னும் சில நோய்களோடும் பிணிகளோடும்; தொண்ணூற்றாறு வகைத் தத்துவங்கள் புடைசூழ வாழ்கின்ற சதிகாரர்களும் பேராசைக்காரர்களுமான (ஐம்புலன்களால்),

சூழ்துன் சித்ர கபாயை முவாசைகொடு ஏதுஞ் சற்றுணராமலெ மாயைசெய்... சூழப்பட்ட; கெட்ட; விசித்திரமான தேகத்தின் மேலும், மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மேலும் ஆசையை வைத்து; எந்த ஒன்றையும் சிறிதும் உணராமல் மாயையை ஏற்படுத்துகின்ற,

சோரம் பொய்க்குடிலே சுகமாமென இதின்மேவி தூசின் பொற்சரமோடு குலாய்... கள்ளத்தனத்தையும்ம் பொய்ம்மையையுமே உடைய இந்த உடலே பெரிய சுகம் என்று கருதிக்கொண்டு இதைப் போற்றியும்; இதற்கு நல்ல ஆடைகளையும் அணிகலன்களையும் அணிவித்தும்;

உலகேழும் பிற்படவோடிடு மூடனை... ஏழு உலகங்களும் பின்தங்குமாறு அவற்றை முந்திக் கொண்டு ஓடுகின்ற மூடனாகிய என்னை

தூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய்… தூயவரும் பெரியவரும் சுத்தமானவருமான உன்னுடைய அடியார்களுடைய திருவடிகளைச் சேருமாறு அருள்புரிய வேண்டும்.

தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி... தீதந் தித்திமி என்ற பலவிதமான ஓசைகளேடு பேரிகைகள் முழங்க;

சேடன் சொக்கிட வேலைக டாகமெலாமஞ் சுற்றிடவே அசு ரார்கிரி தீவும் பொட்டெழவே அனல் வேல்விடு மயில்வீரா... ஆதிசேஷன் மயக்கமடையும்படியும்; கடலும் அண்டங்களும் அச்சம்கொள்ளும்படியும்; அரக்கர்கள் இருந்த மலைகளெல்லாம் பொடிபட்டுத் தூள்பறக்கும்படியும் தீயாகத் தகிக்கின்ற வேலை வீசிய மயில் வீரனே! 

வேதன் பொற்சிர மீதுகடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே... பிரமனுடைய தலையின் மீது (கையைச் செலுத்திக்) குட்டியும்; ஈசனுக்கு சற்குருவாக அமைந்து அவருடைய காதிலே பற்றற்றவர்கள் பெறத்தக்கதாகிய பிரணவப் பொருளை ஓதிய முருகனே!

வேஷங் கட்டிபின் ஏகி மகாவ(ள்)ளி மாலின் பித்துறவாகி... வேலன், வேடன், விருத்தன் என்றெல்லாம் பல வேடங்களைத் தரித்தும்; தினைப்புனத்துக்குச் சென்றும்; வள்ளியின் பேரில் மயக்கம் கொண்டும் பித்துப் பிடித்தும் (நின்றவனும்);

விணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே.... தேவர்கள் வணங்குகின்றதும்; பராக்கிரமம் நிறைந்ததுமான பழநியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தீதந்தித்திமி என்று பலவகையான ஓசைகளோடு பேரிகைகள் முழக்கமிட; ஆதிசேஷன் கலக்கத்தால் மயக்கமடையவும்; கடலும் அண்டகோளங்களும் அச்சம் கொள்ளவும்; அசுரர்கள் இருந்த மலைகள் பொடியாகித் தூள் பறக்குமாறும்; அனல் பறக்கின்ற வேலை வீசிய மயில் வீரனே! பிரமனுடைய தலையில் குட்டியவனே!  பற்றற்ற மேலோர் நாடுகின்ற பிரணவப் பொருளை ஈசனாருக்கு அவருடைய திருச்செவிகளில் எடுத்தோதிய முருகனே!  வேடன், வேலன், விருத்தன் என்று பல வேடங்களைத் தரித்து தினைப்புனத்துக்குச் சென்று வள்ளியின் மீது மோகம்கொண்டவனே!  தேவர்கள் வந்து வணங்கும் பெருமாளே!  பராக்ரமம் நிறைந்த பெருமாளே!  பழனாபுரியாகிய பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே!

வாதம்; பித்தம்; பானை வயிறு; க்ஷயரோகம்; சீதபேதி; ஜன்னி; முடக்குவாதம் முதலானவை; பெருவயிறு; கண்களில் உண்டாகும் குறைபாடுகள்; கோழையால் ஏற்படும் இழுப்பு; தொடர்ந்து ஏற்படுகின்ற வாந்தி; இன்னபிற நோய்களோடும்; தொண்ணூற்றாறு வகைத் தத்துவங்களின் நடுவிலே வாழுகின்ற வஞ்சகர்களும் பேராசைக்காரருமான ஐம்புலன்களோடும் இணைந்துள்ள இந்த உடலின்மேல் ஏற்பட்ட ஆசையையும்; மண், பெண், பொன் ஆசைகளையும் கொண்டு எந்தவிதமான நல்லதையும் சற்றும் உணராமல் மாயையையே விளைவிக்கின்ற கள்ளத்தனமும் பொய்மையையுமே கொண்ட இந்த உடலையே சுகமென்று நினைத்துக்கொண்டு, இதற்கு—

நல்ல ஆடை அணிகலன்களை அணிவித்தும் அலங்கரித்தும் மகிழ்ந்துபோய்; அந்த மகிழ்ச்சியாலே ஏழு உலகங்களும் பின்தங்குமாறு முந்திக்கொண்டு ஓடுகின்ற மூடனாகிய எனக்கு, பரிசுத்தமும் மேன்மையும் வாய்ந்த உன் அடியார்களுடைய திருப்பாதங்களைச் சேர்வதற்கான திருவருளைச் செய்தருள வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com