சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 875

உயர்ந்தோங்கிய, பரிசுத்தமான கோபுர வாயிலில் வீற்றிருப்பவனே!

News image
Updated On :23 ஜூலை 2018, 7:44 am

பதச் சேதம்

சொற் பொருள்

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி

 

ஊண்: உணவு; பசும்பை: புதிய பை; கூன் குடம்பை: கூன்விழுந்த, கோணலான கூடு; பொதும்பு: குகை; அகித(ம்): தகாதது, தீமை; வாரி: கடல்;

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு

 

இடைதிரி: (கடலுக்கு) நடுவிலே திரியும்; சோங்கு: மரக்கலம்; கந்தம்: மலச்சேறு; மது: நீர் (சிறுநீர்); கும்பம்: குடம்;

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று

 

அஞ்சும் மருவிய கூண்டு: ஐம்புலன்களும் பொருந்தியிருக்கிற கூடு; குரம்பை: சிறுகுடில்;

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ

 

ஏன்றுகொண்ட: ஏற்றுக்கொண்ட; கரும பிராந்தி: வினை மயக்கம்; உபய: இரண்டு; பதாம்புயங்கள்: திருவடித் தாமரைகள்;

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்

 

அருணை: திருவண்ணாமலை; துங்க: தூய; சிகரம்: மலை; கராம்புயங்கள்: கர அம்புயங்கள்—கரமாகிய தாமரைகள்;

அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே

 

பாங்க: தோழனே; பண்டு புகல்: முற்காலத்திலிருந்து சொல்லப்படுகின்ற; அபிநவ: புதுமையான; சார்ங்க: சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய; கண்டன்: வீரன் (திருமால்);

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்

 

ம்ருகேந்த்ர: மிருகசிரேஷ்டரான வியாக்ரபாதர்—புலிக்கால் முனிவர்; உரகேந்த்ரர்: (உரகம்: பாம்பு) பாம்பு வடிவான—பதஞ்சலி முனிவர்; நடேந்த்ரர்: நடனத்தின் தலைவன்—நடராஜன்; வரை சாடும்: மலைகளைத் தூளாக்கும்;

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.

 

கலபக: தோகையை உடைய—மயில்வாகனனே!; கேந்த்ர தந்த்ர: நூல்களில் வல்லவனான; நிசேந்த்ர: நிஜ இந்த்ர—சத்தியத்தின் தலைவனே; குலிசகர: வஜ்ராயுதத்தை ஏந்திய;

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு... இருவினைகளும் தின்பதற்கான உணவை அடக்கிய புதுவிதமான பையும்; கரு வளர்வதற்கு இடமான வளைசலான பாத்திரமும்; துன்பங்களையே அடைத்து வைத்திருக்கிறதும், பாழடையப் போவதுமான குகையும்;

அகித வாரி இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம்... தகாதனவாகிய கடலுக்கு நடுவே திரிகின்ற மரக்கலமும்; மலமும் மூத்திரமும் நிரம்பியுள்ள குடமும்;

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல் பாண்டம்... இரவிலே தூங்குகின்ற பிணமானதும்; நோவே வடிவாக அமைந்ததுமான பாத்திரமும்;

அஞ்சும் மருவிய கூண்டு... ஐம்பூதங்களும் பொருந்தியிருக்கிற கூடும்;

நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று... என் மனமும் உயிரும் குடியிருக்கும் சிறு குடிலுமான இந்த உடல் அழியாமல் நிலைத்து நிற்குமென்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ... வினைப் பயனால் வருவதும்; உலகத்தாரிடம் நான் ஏற்றுக்கொண்டுள்ளதுமான மயக்கம் நீங்கப்பெற்று உன்னுடைய இரு திருவடித் தாமரைகளை அடையப்பெறுவேனோ? (உன் திருப்பாதங்களை அடியேன் அடைய வேண்டும்.)

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க .... திருவண்ணாமலையில் ஓங்கி நிற்கின்ற, தூயதான கோபுரத்தைச் சூழ்ந்திருக்கும் தேவர்கள், தங்கள் தாமரைக் கரங்களைக் குவித்து வணங்குகின்றவனே! அடியார்கள் தோழனே!

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே... சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் முன்னொரு காலத்தில் விழுங்கியவனும்; புதுமை நிறைந்த சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனுமான திருமாலின் மருகனே!

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த... கருணை நிறைந்தவரான புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரும்; சர்ப்ப உத்தமரான பதஞ்சலி முனிவரும் தரிசிக்கும்படியாக* நடனமாடிய நடராஜரின் மைந்தனே!

(* சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் கண்டு தரிசிக்கும்படியாக இறைவன் நடமாடியருளினான் என்பது புராணம்.)

வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.... மலைகளைப் பொடியாக்கும் தோகையை உடைய மயிலை வாகனமாகக் கொண்டவனே! நூல்களில் வல்லவனே! அரசே! சத்தியத்தின் தலைவனே! கந்தனே! கையிலே வஜ்ராயுதத்தைத் தாங்குபவனான இந்திரனுடைய தலைவனாகிய பெருமாளே!

சுருக்க உரை

திருவண்ணாமலையில் உயர்ந்தோங்கிய, பரிசுத்தமான கோபுர வாயிலில் வீற்றிருப்பவனே! தேவர்கள் தங்கள் தாமரையைப் போன்ற கைகளைக் குவித்துத் தொழுகின்றவனே! அடியவர் தோழனே!  முன்னொரு காலத்தில் எல்லா அண்டங்களையும் உண்டவனும் புதுமையான சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டவனுமான திருமால் மருகனே! கருணை நிறைந்த வியாக்ரபாதரும் பதஞ்சலியும் கண்டு தரிசிக்கும்படி நடனம் புரிந்தருளிய நடராஜரின் மைந்தனே!  மலைகளைத் தூளடிக்கின்ற தோகையை உடைய மயிலை வாகனமாகக் கொண்டவனே! சத்தியத்தின் தலைவனே! கந்தனே!  கையிலே வஜ்ரப் படையைத் தாங்கியிருக்கின்ற இந்திரனுடைய தலைவனான பெருமாளே!

இருவினைகளுக்கு உணவாக அமைந்திருக்கின்ற பையும்; கரு வளர்வதற்கு இடமான கோணலான பாத்திரமும்; துன்பங்களையே அடைத்து வைத்திருப்பதும் பாழாய்ப் போவதுமான குகையும்; தகாதனவையாகிய கடலுக்கு நடுவே செல்கின்ற மரக்கலமும்; மலத்தாலும் மூத்திரத்தாலும் நிறைந்துள்ள குடமும்; இரவிலே தூங்குகின்ற பிணம்போன்ற நோய்க்க உருவாக அமைந்த பாத்திரமும்; ஐந்து பூதங்களும் பொருந்தியிருக்கின்ற கூடும்; உயிரும் மனமும் குடியிருக்கும் சிறுகுடிலுமான இந்த உடல் அழியாமல் நிலைத்திருக்குமென்று இந்த உலகத்தாரோடு நான் ஏற்றுக்கொண்டுள்ள வினையின் பயனால் வருகின்ற மயக்கத்தை ஒழித்து அடியேன் உன்னுடைய திருவடித் தாமரைகளை அடைவேனோ? (அடியேன் உன்னுடைய திருவடித் தாமரைகளை அடையுமாறு அருளவேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.