12.11.1946: பண்டிட் மதன் மோகன் மாளவியா நினைவு தினம் இன்று!

மதன் மோகன் மாளவியா உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் டிசம்பர் 25, 1861 அன்று பிரிஜ்நாத், மூனாதேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
12.11.1946: பண்டிட் மதன் மோகன் மாளவியா நினைவு தினம் இன்று!
Updated on
1 min read

மதன் மோகன் மாளவியா உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் டிசம்பர் 25, 1861 அன்று பிரிஜ்நாத், மூனாதேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது மூதாதையர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாதலால் மாள்வியாக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

மாளவியா ஐந்து வயதிலேயே சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். அலகாபாத் சில்லா பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழதி பள்ளி இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியிட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அலகாபாத் சில்லா பள்ளியில் ஓர் ஆசிரியராகத் தம் பணி வாழ்வைத் தொடங்கினார். பின்னர் அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார். தமது சட்டத்துறையில் பணிவாழ்வை 1891இல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கினார். பின்னர் 1893ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொடர்ந்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் கட்சித்தலைவராக 1909, 1918, 1930 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பேற்றார்.

இன்று நாட்டின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை 1916இல் அன்னி பெசண்ட் அம்மையார்   துணையுடன் நிறுவினார்

இந்திய சுதந்தர போராட்டத்தில் பங்கேற்று, பல்வேறு வகைகளில் பணிபுரிந்த மாளவியா நவம்பர் 12, 1946ஆம் அன்று மரணமடைந்தார்.

மதன் மோகன் மாளவியா இறந்து 68 ஆண்டுகளுக்கு  பின்னர் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான  'பாரத் ரத்னா' விருது அவருக்கு வழங்கப்பட்டது. 30.03.2015 அன்று மாளவியாவின் வாரிசுகள் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com