தமிழ்க் கடவுள்!
கவிஞர் வாலி கந்த புராணத்தை எளிய புதுக்கவிதை நடையில் எழுதியுள்ள நூலின் பெயர்தான் இது. கடந்த வாரம் சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சரவணனும் திரைப்பட இயக்குநர் பாலசந்தரும் பெற்றுக் கொண்டனர்.
÷தலைமையுரையாற்றிய நீதியரசர் "இந்த நூலை சத்தியமாக ஒருவர் மட்டுமே எழுதியிருக்க முடியாது' என்று கூறி அவையோரை - வாலி உள்பட- ஒரு கணம் திடுக்கிட வைத்து, பின் அந்தப் பழனி முருகனே வாலி உள்ளத்திலிருந்து எழுத வைத்திருக்கிறான் என நிம்மதியை ஏற்படுத்தினார்.
÷பேராசிரியர் செல்வகணபதி (இவர் இந்த நூலுக்கு ஒரு சிறந்த அணிந்துரையும் வழங்கியுள்ளார்.) நூலின் ஒன்றிரண்டு பகுதிகளை மட்டும் தொட்டுக் காட்டிவிட்டு வைணவரான வாலி சைவக் கடவுளான முருகன் வரலாறை எழுதியிருப்பதை மகிழ்வுடனும் வியப்புடனும் குறிப்பிட்டார்.
÷இளையராஜா பேசும்போது, "இந்த நல்ல விழாவில் கலந்து கொள்ள முடியாமல் நான் வெளிநாடு சென்றுவிடுவேனோ என்று கவலைப்பட்டேன். அந்த முருகனே எனக்கு விசா கிடைப்பதை தாமதப்படுத்தி என்னை இந்த விழாவில் கலந்து கொள்ள வைத்துவிட்டான். அருள் என்பது கடவுளின் சுபாவம்' என்று கூறி வாலிக்கும் தமக்குமான நட்பை உணர்வு பூர்வமாக விவரித்தார்.
÷பாலசந்தர் பேசும்போது தனது படங்களில் வாலி பாடல் எழுதும்போது ஏற்பட்ட சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
÷இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் பேசும்போது தமிழ்க் கடவுள் நூலைப் பற்றி மற்றொரு விழாவில் மூன்று மணி நேரம் பேசுவதற்கு வாய்ப்பு தரவேண்டும் என்று வாலியிடம் கூறிவிட்டு முக்கால் மணி நேரம் இளையராஜாவையும் அவருடைய வெண்பா இயற்றும் திறமையையும் வியந்து வியந்து பாராட்டினார்.
÷நடிகர் பார்த்திபன் பேசும்போது பல அறிஞர்களுடன் இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணமே தமிழ்க்கடவுள் அருள் தமக்கு இருப்பதுதான் என்றுகூறி "வாலி, வாளி, வாழி' என்று வாழ்த்தினார்.
÷இறுதியாக வாலி ஏற்புரையாற்றினார்.
"விழா தொடக்கத்திலேயே பி.பி.ஸ்ரீநிவாஸ், பூவை செங்குட்டுவன், கவிஞர் ஞானச் செல்வன், எம்பார் வேதம் போன்ற தனக்கு ஆரம்ப நாள்களில் உதவி செய்த சிலருக்கு வாலி பணமுடிப்பு வழங்கி கெüரவித்தார்.
÷கவிஞரின் கையெழுத்திலேயே அச்சிடப்பட்டிருக்கும் முதல் நூல் இது என்பது தமிழ் கடவுளின் கூடுதல் சிறப்பு'.
விழா குறித்து..... ஒரு வருத்தம்:
வாலி தனது ஏற்புரையில் எனது பாடல்களை ரசிக்கும்போதெல்லாம் கவிஞர் கண்ணதாசன் எனக்குப் பிடித்த வாட் சிக்ஸ்ட்டி நைன் மது பாட்டிலை எனக்கு அனுப்பி வைப்பார் என்று கூறியதும், பார்த்திபன் பேசும்போது இன்றுதான் கந்த புராணம் புத்தகத்தைப் புரட்டினேன். அதில் முதலில் உற்பத்தி காண்டம் என்று போட்டிருந்தது. எனக்குப் புரியவில்லை. உற்பத்தியைத் தடுப்பதுதானே காண்டம்? என்று பேசியதும் ஓர் அக்மார்க் ஆன்மிக நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இல்லையே?
ஒரு சங்கடம்:
நெல்லை கண்ணன் இளையராஜாவின் வெண்பாக்களை வாயார புகழ்ந்தாலும் ஒவ்வொரு வெண்பாவையும் சொல்லி இந்த கருத்து பட்டினத்தார் சொன்னதுதான், இது பத்திரக்கிரியார் சொன்னதுதான், இதை கபிலர் சொல்லிட்டாரு, இதைத்தான் காளமேகம் அன்னைக்கே சொன்னான் என்று புட்டுப் புட்டு வைக்கலாமா?
ஒரு யோசனை:
அடுத்த கூட்டத்திலாவது நூலை முழுவதும் படித்துவிட்டு சிறப்பாக வாசகர்களுக்கு நூலை அறிமுகப்படுத்தும் சொற்பொழிவாளர்களைத் தேடிப் பிடிக்கவும். (பெண்களுக்கு முப்பத்தி மூன்று போதாது என்று பேசப்படுகிற நேரத்தில் பேருக்குக்கூட
ஒரு பெண் பிரதிநிதி இல்லையே- இரு பெண்களோடு வாழும் தமிழ்க்கடவுள் விழாவில்)
ஒரு ஐயம்:
தனக்கு ஒரு வேளை உணவு அளித்தவர்களையும் ஒருநாள் தங்க இடம் அளித்தவர்களையும் தேடிப்பிடித்து மேடையில் மரியாதை செலுத்திய வாலி "எனது திரையுலக வாழ்க்கையே எம்.எஸ்.வி. போட்ட பிச்சை' என்றும் "விசுவநாதன் அண்ணனை சந்திக்கும் வரை எனக்கு சாப்பிட சாப்பாடு இல்லை, அவரைச் சந்தித்த பின் எனக்குச் சாப்பிட நேரமில்லை' என்றும் பல மேடைகளில் பேசிவிட்டு, இந்த நல்ல மேடையில் அவரை (விழாவுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் வந்திருந்தும்) கெüரவிக்காதது ஏனோ?
ஒரு வேண்டுகோள்:
எப்படிப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் இரவு ஒன்பது மணிக்குள் முடித்துவிடுங்கள் சுவாமி. (விழா முடியும்போது 10.20) நிகழ்ச்சிக்கு வரும் எல்லோருக்கும் கார் இல்லை. சென்னையில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பல இடங்களுக்கு பஸ் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


