விடியல்' என்கிற கலாசார சமூக அமைப்பு "விடுதலைக்குப்பின் தமிழ் இலக்கியம்- சமுதாய மாற்றங்கள்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்ற அந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி, பேரா.முகிலை இராசபாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தலைமையுரையாற்றிய இந்திரா பார்த்தசாரதி "விடுதலைக்குப்பின் ஏராளமான பத்திரிகைகள் இன்றுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தாலும் சமூக மாற்றத்திற்குப் பணிபுரிந்தவை என்று பார்த்தால் அவை சிற்றிதழ்களே. புதுமைப்பித்தன், டி.எஸ். ராமையா போன்ற பல சிறந்த எழுத்தாளர்கள் சிறு பத்திரிகை மூலம் அறிமுகமானவர்களே. சரஸ்வதி, தாமரை போன்ற பத்திரிகைகள் இலக்கிய நோக்கத்துடன் உருவானவை. வணிகப் பத்திரிகைகள் வியாபார வெற்றியை கருத்தில் கொண்டு நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது. ஆயினும் சமூகத்தில் நடைபெறும் முக்கியமான கலாசார, பொருளாதார, சமூக நிகழ்வுகளைப் பற்றி பல தரப்பினரும் விவாதிக்க அவற்றில் ஒர் இடம் ஒதுக்கப்படவேண்டும். மலையாளப் பத்திரிகைகளில் அப்படிப்பட்ட விவரங்கள் வருகின்றன. தமிழில் சிறு பத்திரிகைகளில் மட்டுமே இது சாத்தியம்' என்றார்.
கவிஞர் தமிழச்சி பேசும்போது, "எனது சாம்ராஜ்யம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்' என்று ஒரு ஆங்கிலேயன் கூறினால் "கடவுள் இருட்டில் ஆங்கிலேயனை நம்பத் தயாரில்லை என்று ஒரு இந்தியன் கூறுவான்'- இது ஒரு மேல்நாட்டு அறிஞர் கூறியது.
விடுதலைக்குப்பின் தமிழ் சிற்றிதழ்களின் பங்கு விமர்சனத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதேயாகும். எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வெளிவந்த விமர்சனங்கள் அதுவரை தமிழ் இலக்கியத்தில் இருந்து வந்த புனிதங்களையும் உன்னதங்களையும் கட்டுடைப்பதாக அமைந்தன. இந்தத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர்களான அ.மார்க்ஸ், ரவிகுமார், பொ.வேல்சாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்று மணிக்கொடி தொடங்கப்பட்ட 1933-ஆம் ஆண்டைக் கூறலாம். பதினெட்டாம் நூற்றாண்டுவரை அறிவுத்துறை ஆதிக்க சமூகத்திற்கு மட்டுமே உரிமையுள்ளதாயிருந்தது. பின்னர் சுந்தரம் பிள்ளை, மறைமலை அடிகள், மு.வ., அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு, டி.கே. சீனிவாசன் போன்றோரின் கலை இலக்கிய முயற்சிகளால் தமிழ் மாற்றப்பட்டது. பின்னர், ஜி. நாகராஜன், பூமணி, பொன்னீலன், கி.ரா, செ. கணேசலிங்கன், எஸ்.பொ, டேனியல் போன்ற பலரும் ஒடுக்கப்பட்டவர்களின் உலகத்தை எழுத்தில் கொண்டு வந்தார்கள். இன்று நாம் அயோத்திதாச பண்டிதரை அறிந்து கொண்டிருப்பதற்குக் காரணம் சிறு பத்திரிகைகளே என்பதை மறுக்க முடியாது' என்றார்.
அடுத்து பேசிய பேராசிரியர் முகிலை இராசபாண்டியன், "இந்தியாவில் 1870-ல் முதல் பத்திரிகை வெளிவந்தது என்றாலும் அதற்கு முன்பே செய்தி பரிமாற்றம் இருந்துள்ளது. வழிபாட்டு தலங்களின் மணியோசையைக் கேட்டு அங்கு வழிபாடு நடப்பதை அறியலாம். கிராமங்களில் தகவல்களை ஓடி ஓடி தெரிவிக்க ஓட்டக்காரன் என்று ஒருவன் இருப்பான். பின்னர் குதிரையில் செல்லும் வீரர்கள் செய்திகளை எடுத்து சென்றார்கள்.
இந்தியாவின் முதல் அச்சுக்கூடம் மலபார் கடற்கரையான கோவாவில் வந்தது. அங்கு முதலில் அச்சிடப்பட்டது ஒரு தமிழ் நூல்தான். 1929-ல் மதுவின் கொடுமையை வலியுறுத்துவதற்காகவே ராஜாஜி "விமோசனம்' என்ற மாத பத்திரிகையை தொடங்கினார். அதன் ஆசிரியர் கல்கி. பத்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த அந்த இதழில் மதுவிலக்குக்கு ஆதரவாக 21 சிறுகதைகள் வெளிவந்தன. அவற்றில் 8 கதைகளை கல்கியே எழுதியிருந்தார். அப்போதே இந்த இதழ் ஆயிரம் பிரதிகள் விற்பனையானது ஒரு குறிப்பிடத்தக்க செய்திதான்.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த 1942-ல் மதுரையில் தொடங்கப்பட்ட "தந்தி' பத்திரிகை 1948-ல் சென்னைக்கு வந்தது. சி.பா. ஆதித்தனார் "தமிழன்' என்கிற இலக்கிய இதழை தொடங்கினார். பதினோரு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. தொடர்ந்து "தென்றல்', "திங்கள்', "எழுத்தாளன்', "எழுத்து', "தமிழ்ச்செல்வி', "வானம்பாடி' போன்ற இலக்கிய இதழ்கள் வெளிவந்தன. தற்போது இதழ்களில் வணிக நோக்கமே மேலோங்கி இருக்கிறது. காந்தியடிகள் விளம்பர ஆதரவு வேண்டாம் என்று பிடிவாதமாக நடத்திய "யங் இண்டியா' பத்திரிகை அன்றைக்கே 34,000 பிரதிகள் விற்பனையானதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றார்.
திருப்பூர் கிருஷ்ணன், தமிழில் பல்வேறு இலக்கியப் போக்குகள் உருவானது சிறு பத்திரிகையில்தான். அவற்றின் வாசக எண்ணிக்கை அளவில் குறைவாயிருப்பினும் அவர்கள் தீவிர வாசிப்பனுபவம் உள்ளவர்கள். "தீபம்' இலக்கிய இதழை நா. பார்த்தசாரதி இருபத்து நான்கு ஆண்டுகள் நடத்தினார். ஒரு முறை பொருளாதார இடர்பாடு வந்தபோது அந்த பத்திரிகையை நிறுத்தப் போவதாக தலையங்கம் எழுதினார். மறுநாளே ஒரு வாசகியிடமிருந்து ஒரு ஜோடி தங்க வளையல்கள் பார்சலில் வந்தன. நெகிழ்ந்து போன நா.பா. நான் இறக்கும்வரை தீபத்தை நடத்துவேன் என்று கூறினார்.
சிறுபத்திரிகை ஆசிரியர்களின் போக்கு மற்றவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஏ.கே. செட்டியார் நடத்திய "குமரிமலர்' இதழைப் படித்துவிட்டு எனக்கு இதழ் அனுப்பி வைக்கும்படி அவருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் ஏற்கெனவே 500 பிரதி அடிக்கிறோம். உங்களுக்காக 501 அடிக்க முடியாது. உங்கள் ஊரில் கந்தசாமி கவுண்டருக்கு அனுப்புகிறேன். அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நீங்கள் அவரிடம் வாங்கிப் படித்துவிட்டு பத்திரமாக திருப்பித் தந்துவிடுங்கள் என்று எனக்குக் கடிதம் எழுதினார்.
சிற்றிதழ்கள் கதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஆற்றியுள்ள பணிகள் மகத்தானவை. இவற்றோடு ஒப்பிடுகையில் நாவல் இலக்கியத்தில் சிற்றிதழ்களின் பங்களிப்பு குறைவானதே. இலக்கியத்தில் பல உத்திகளை முயன்று பார்க்க இடமளித்தது சிறுபத்திரிகைகளே. அவ்வகையில் முயன்று வெற்றி பெற்றவர்கள் என்று கோபி கிருஷ்ணன், விமலாதித்த மாமல்லன், சுஜாதா போன்ற பலரைக் குறிப்பிடலாம். குறிப்பாக "கணையாழி'யில் வெளிவந்த சுஜாதாவின் இருகடிதங்கள் உத்தி அப்போது பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
புதுக்கவிதையை ஏற்க மறுத்த நா.பா.வின் மனதை மாற்றியவர் சி.சு.செல்லப்பா. "கண்ணதாசன்' இறுதிவரை புதுக்கவிதையை ஏற்கவில்லை. சிறந்த புதுக்கவிஞர்களான பிரமிள், ஞானக்கூத்தன், மனுஷ்யபுத்திரன் போன்றோர் சிறுபத்திரிகை மூலமே அறியப்பட்டனர்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


