வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: எங்கே இணைந்தன மனங்கள்?

ஐ.நா. சபையின் அரசியல் ஆலோசகர், (தற்போது கொசோவா நாட்டில் பணிபுரியும்) ஆர்.கண்ணன். பூடான் நாட்டின் இந்தியத் தூதர் பவன் கே. வர்மா. இவர்களின் சந்திப்புக்கு "இந்தியனாக இருப்பது' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:30 pm

சாருகேசி

ஐ.நா. சபையின் அரசியல் ஆலோசகர், (தற்போது கொசோவா நாட்டில் பணிபுரியும்) ஆர்.கண்ணன். பூடான் நாட்டின் இந்தியத் தூதர் பவன் கே. வர்மா. இவர்களின் சந்திப்புக்கு "இந்தியனாக இருப்பது' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், இவர்களின் இருக்கைக்குப் பின் "மனங்களின் சந்திப்பு' என்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் பளிச்சிட்டன.

சுமார் 15 நூல்களுக்கு ஆசிரியர் பவன் வர்மா. தூதர் பொறுப்பு ஏற்கும் முன் இந்தியக் கலாசார கவுன்சிலின் தலைவர் பதவியை வகித்தவர். எனவே இவர் பேச்சில் கலை, கலாசாரம், பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. காசியிலிருந்து கன்னியாக்குமரி வரை கடைப்பிடிக்கப்படும் பூசை மந்திரங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவை இந்தியாவை ஒரே நாடாகக் காண்பிப்பதாக பவன் சர்மா கூறினார். விடுதலைக்குப் பின்னர் மக்களின் நாகரிகத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதையும், மத்தியதர மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறித்துக் காட்டும் அக்கறையைத் தாம் சிறந்த குடிமக்களாக இருக்கவேண்டும் என்பதில் காண்பிப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார். காளிதாசனின் காவியங்கள் பற்றிய பெருமித உணர்வு யாரிடமும் காணப்படவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பவன் வர்மா.

"மத்தியதர வர்க்கமாவது கம்ப்யூட்டர் தயவில் ஒரு சிறு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றாலும், கீழ்த்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையே உணவு முதற்கொண்டு எல்லாமே பிரச்னையாக இருக்கையில், காளிதாசனை வைத்துக் கொண்டு என்ன செய்வது?' என்றார் கண்ணன். ("அண்ணா'வின் வாழ்க்கை வரலாற்றை அலசி ஆராய்ந்து ஆங்கிலத்தில் நூலாக எழுதியிருப்பவர் இவர்) நடுவராக இருந்த ரஞ்சனி மணியன், "ஏன் அண்ணா பற்றி எழுதினீர்கள்?' என்ற கேள்வியை எழுப்பினார். ""வட இந்தியத் தலைவர்கள் பற்றி ஏராளமான நூல்கள் இருக்கின்றன. தென்னிந்தியத் தலைவர்கள் பற்றி அதிகம் வெளியே அறியப்பட்டதில்லை. எனவே "அண்ணா' வெளியாயிற்று'' என்றார் கண்ணன்.

""அர்த்த சாஸ்திரம், வியாகரணம், நாட்டிய சாஸ்திரம், உபநிஷத்துகள் - எல்லாமே இந்தியச் சிந்தனையாளர்களின் உயர்வைக் காட்டும் படைப்புகள். வெறும் என்ஜினீயர்களையும் டாக்டர்களையும் வைத்துக் கொண்டு நாங்கள் மிகப் பெரிய அதிகார சக்தி படைத்தவர்கள் என்று சொல்வது போதாது. எத்தனை பேருக்கு நமது எழுத்தாளர்களையும் சரித்திர ஆசிரியர்களையம் தெரியும்?'' என்றார் வர்மா.

பவன் வர்மாவும் கண்ணனும் வெளியுறவுத் துறையில் ஒன்றாகப் பணியாற்றியதால் குடும்ப நண்பர்கள். "நான் ஒன்றும் கண்ணன் அழைத்து வரவில்லை. அவர் மனைவி உஷா கண்ணன் அழைத்ததால்தான் வந்தேன்!' என்று துவக்கத்தில் கண்ணனைக் கிண்டலடித்தார், பவன் வர்மா!

பார்க் ஷெரட்டன் ஓட்டலும், குளோபல் அட்ஜஸ்ட்மென்ட்டும், இந்தியா இம்மெர்ஷன் சென்டரும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் அயல்நாட்டிலிருந்து சென்னைக்கு வந்து குடியேறியிருக்கும் குடும்பத்தினரும், கான்சுலேட் அதிகாரிகளும் பெருமளவில் வந்திருந்தனர், மேற்கத்திய உடையில்.

கண்ணன் மட்டும் அழகான வெள்ளை வேட்டியில் வந்திருந்ததால், தனித்துத் தெரிந்தார்! தன் கருத்தைத் தெரிவிப்பதிலும் பவனிடமிருந்து மாறுபட்டிருந்தார். அதனால் இருவர் மனங்களும் சந்தித்ததாகத் தெரியவில்லை!

வி.ஸ்ரீராம் பாரம்பரியப் பாதுகாவலர். கர்நாடக இசைக் கலைஞர்களைப் பற்றி ஆராய்ந்து எழுதுவதில் வல்லவர். பாரம்பரியப் பெருமை வாய்ந்த இடங்களுக்கு இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்களை அழைத்துச் சென்று விளக்கம் சொல்பவர்.

அவருக்கு ராமு அறக்கட்டளையின் வேதவல்லி நினைவுப் பாரம்பரிய விருது முதன் முதலாக வழங்கப்பட்டபோது, எஸ்.முத்தையா, ""ஸ்ரீராமை நான் இதற்காக எல்லாம் பாராட்டவில்லை. அவருக்கு வயது 50-க்கும் குறைவு. அதற்காகத்தான் பாராட்டுகிறேன் என்றார். இளைய தலைமுறை பாரம்பரியத்தைப் பராமரிப்பதில் அக்கறை காட்டவேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் "ஹெரிடேஜ் கிளப்' இருக்கவேண்டும்!'' என்று வற்புறுத்தினார்.

ஸ்ரீராம் அன்று பேசிய பேச்சு - "சென்னையும், கர்நாடக இசையும்' என்ற தலைப்பில். நகைச்சுவையை அங்கங்கே தெளித்து ஸ்ரீராம் பேசும்போது, நேரம் போவதே தெரியாது. பெயர்கள், வருடங்கள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். 1700-களிலேயே, சென்னைக்கு தியாகராஜரின் குரு வெங்கடரமணய்யா வந்தபோது, அவரைப் பாராட்டி கெüரவிக்க, அவரை யானை மீது அமரவைத்து அழைத்து வந்தார்களாம்! ஆங்கிலேயரின் இசை அமைப்பைப் போலவே தீட்சிதரும், தியாகராஜரும் கூட சில பாடல்களை இயற்றியிருப்பதை உதாரணத்துடன் விளக்கினார் ஸ்ரீராம்.

சுப்பராம தீட்சிதர் "சங்கீத சம்ப்ரதாய பிரதர்சனி' என்ற நூலை வெளியிட, சென்னை, அரசாங்கத்தில் பணிபுரிந்த ஏ.எம். சின்னசாமி முதலியார் என்ற கிறிஸ்தவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அவர் தன் சொத்து முழுவதையும் இழந்த போதும்கூட, பின்னர் எட்டயபுரம் மன்னரிடம் சென்று அந்த நூலை முடித்து அச்சிட்டு வெளியிடப் பாடுபட்டதையும் குறிப்பிட்டார் ஸ்ரீராம். எட்டயபுரத்திலிருந்து சுப்புராம தீட்சிதரும், சென்னையிலிருந்து சின்னசாமி முதலியாரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அன்றைய (19-ம் நூற்றாண்டுத் துவக்க கால)  "ஹிந்து' நாளிதழ்தான் உதவியதாம்!

சென்னை இசை அரங்குகள் பற்றிக் குறிப்பிட்ட ஸ்ரீராம், ஒரு காலத்தில் இசை-நடனக் கலைக்குப் பெயர் பெற்றிருந்த தஞ்சையிலிருந்து அவை சென்னைக்கு வந்து விட்டதைச் சொல்லி, இனி அமெரிக்கா- குறிப்பாக க்ளீவ்லேந்து- கர்நாடக இசை, நடனம் ஆகியவற்றை அங்கே கொண்டு போய் விடுமோ என்று அஞ்சுவதாகச் சொன்னார்.

சொற்பொழிவின் முடிவில், எம்.எஸ்.படத்தைக் காண்பித்து, "கர்நாடக இசையின் முகம் இதுதான்' என்றவர், எம்.எஸ்., ஐ.நா.சபையில் பாடிய ஆங்கிலப் பாடலை ஒலிபரப்பியது இசைக்கு மொழி இல்லை என்பதைக் காட்டுவது போல் இருந்தது.

சஞ்சய் சுப்பிரமணியனின் கச்சேரி கேட்டுச் சில மாதங்கள் ஆகிவிட்டன என்பதாலோ என்னவோ, சத்குரு ஞானானந்த சங்கீத சம்மேளனத்தில் மாலையில் அவர் நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம்.

கானமூர்த்தே (கானமூர்த்தி ராகம்), எவரிகை அவதாரம் (தேவமனோகரி ராகம்), சாமிக்கு (பேகடா ராகம்), கஜவதன (தோடி ராகம்) என்று சஞ்சய் அசத்தினார் அன்று. அதிலும் தோடி ஆலாபனையில் அவர் கற்பனை சிறகடித்துப் பறந்தது. அவர் அனாயாசமாகச் செய்த சஞ்சாரங்களும், அபூர்வமான "பிடி'களும் "ஆகா!' போடவைத்தன. நிறைவாக ஒரு புரந்தரதாசர் பாடலும், எம்.டி.ராமநாதனின் தில்லானாவும் அமைய, ரசிகர்களின் திருப்தி நீண்ட கைத்தட்டலாக வெளிப்பட்டது.

வருடம் தோறும் சம்மேளனத்தில் ஒரு மூத்த இசைக் கலைஞருக்கு விருது அளித்து, பதக்கம் அணிவித்து கெüரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்த வாய்ப்பைப் பெற்றவர் மூத்த கர்நாடக இசைப் பாடகி, சுகுணா புருஷோத்தமன். பெற்ற விருது: "சங்கீத சிரேஷ்ட'. பழைய கடம் வித்துவான் புதுக்கோட்டை ராமச்சந்திரன் "சங்கீத மணி' விருது பெற்றார். மூத்த வயலின் கலைஞர் திருவாரூர் சந்தானம் மற்றும் மிருதங்க வித்துவான் செங்கோட்டை ராஜாமணியும் கெüரவிக்கப்பட்டனர். இந்த இசை விழாவில் இசைக் கலைஞர்களே இணைந்து திட்டமிட்டு நடத்துவதுதான் புதுமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.