நெல்லுக்கிறைத்த நீர் - கவிஞர். கு. நா. கவின்முருகு

Updated on
1 min read

வளஞ்சேர்க்கும் நீர்வயல்போல் இன்றும் உண்டோ
...        மாலைதனில் மயங்கியாட வயலும் உண்டோ
களங்குவித்த மணிகளெல்லாம் வீடு காண
...        காவலுக்கு படுத்திருக்க கட்டில் உண்டோ
தளந்தளமாய் மாடிகளாம் வயலில் கட்டி
...        சாகின்ற சாபமேனோ உழவர்க் கிங்கே
அளர்நிலமாய் மாற்றிவிட்ட கேடு காண்க
...        ஆலைகளின் கழிவுகளே நிலத்தை கொல்ல!
ஆட்சியிலே இருப்பவர்க்கி லாப மேதோ
...        அதைகொண்டு வயிற்றடிப்பார் வாழ்வு மேது
மாட்சிமைகள் தெரியாது உழவை மாய்க்கும்
...        மந்திகளே தலைவரென்று உள்ளா ரிங்கு
காட்சிகளாய் கனவுகளாய் போன வாழ்வு
...        கல்மனத்தார் காசுக்கு வாய்பி ளக்க
சாட்சியங்க ளில்லாமல் கயமை செய்ய
...        தாளாது ஒடிந்துபோக சாவும் செத்து!
நெல்லுக்கி றைத்தநீரும் வழிந்தே ஓட
...        நிலஞ்செழிக்கும் என்றெண்ணும் நல்லா ரிங்கு
புல்லுக்கும் பாய்ந்தோட விட்டார்! பங்கு
...      பூனைக்கு அப்பம்போல் பிரித்த பாங்கு
சொல்லுக்கு விவசாய மில்லை நாட்டில்
...        சோற்றுக்கு வழியேது நாளை யிங்கு
அல்லோலம் படும்பாட்டை உணரா திங்கு
...        அறிவியலின் பாதையிலே செய்வார் யாது?
வயலெல்லாம் அயர்நிலமாய் போக நாளும்
...        வாய்காலில் உவர்நீரே யோடு திங்கே
பயிறுக்கும் மானியங்க ளில்லை நாட்டில்
...        பங்கிட்டு மிச்சமென்ன திண்ற பின்னே
உயிர்வளியும் மாசாகிப் போன திங்கு
...      உததமர்காள் யாருளரோ காக்க யிங்கு
கயிறினிலே உயிர்கொன்று உழவன் சாக
...        கஞ்சிகூட மிஞ்சவில்லை ஊழல் சேர
திண்றனரே காசுபணம் சுரண்டி யெல்லாம் 
...        சீர்குலைத்து விவசாயி உயிரின் மேலே!
எண்ணற்ற நிலங்களெல்லாம் அழித்து விட்டு 
...        ஏற்றமிகு நாட்டினையே கூறு போடும்
கண்கட்டி நாடகமாய் நலிந்து போக
...        காடுகளும் மிஞ்சவில்லை அழித்து தீர்க்க
தண்ணீர்விட் டாவளர்த்தோம் நாட்டை காக்க
...        கண்ணீரில் மிதக்கக்காண் உழவும் நோக்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com