பொன்னாடாய் நம்நாடும் பொலிவுற்று விளக்கமுற
என்னாடு துணிவுறுமாம் எதிர்நிற்க ? ---- என்றென்றும்
நல்லோரைத் தேர்ந்திட்டு நாடாளக் காண்பதன்றோ
நெல்லுக்கு இறைக்கின்ற நீர் ?
ஒருமுகமாய் நாட்டுமக்கள் உத்தமரைத் தேராக்கால்
சிறப்பற்று நாடிதுவும் சீரழியும் ! ---- பொறுப்பற்று
கல்லாரைத் தேராதீர் ! காலத்தில் உணர்ந்திடுவீர் !
நெல்லுக்கே இறைத்திடுவீர் நீர் !
செல்லாதக் காசுக்குச் சிறப்பில்லை , பெருமையில்லை ;
பொல்லாதார் ஆட்சியெனப் புனர்வாழ்வும் ---- இல்லையாம் !
நல்லதுவோ விழலுக்கு நாமிறைத்து ஓய்வதுவும் ?
நெல்லுக்கே இறைத்திடுவீர் நீர் !
சொல்லிவந்த தனைமறந்து சுகமதனைப் பெற்றுய்யும்
பொல்லார்க்கு வாக்குதனைப் போட்டோமே ! ---- நல்லதுவோ ?
அல்லலையேக் காண்கின்றோம் ! அவலமதே பரிசாச்சே !
நெல்லுக்கோ இறைத்திட்டோம் நீர் ?
வீடெல்லாம் மாட்சிகண்டு விளக்கமுறும் கல்விபெற ,
நாடிதனின் புகழ்பரவும் நாற்திசையும் ! ----நாடெங்கும்
கல்விதரும் சாலைகளை கணக்கற்றுப் பெருக்குவதே
நெல்லுக்கு இறைக்கின்ற நீர் !
அல்லும் பகலுமென அயராமல் சலிக்காமல்
கல்விதனைக் கற்றுக் கரைதேர, ---- நல்விதமாய்
செல்வவளம் பெருகிவரும் ; சீர்பெறுவோம் ! இதுவன்றோ
நெல்லுக்கு இறைக்கின்ற நீர் !
நெல்லுக்கு இறைக்கும்நீர் தவறாமல் நமக்கெல்லாம்
நிச்சயம் பலனைத் தரும் ;
நிலமகள் பொய்க்காமல் வளமதனை ஊட்டுவாள்
நெஞ்சமதும் மகிழச் செய்வாள் !
அல்லும் பகலுமாய் சளைக்காமல் ஏர்வுழவர்
அனுதினமும் நீர் இறைக்க ,
அளப்பரிய விளைச்சல்தனை நிலமகள் தந்திட்டு
அருளுவாள் அவர்கட்க் கெல்லாம் !
புல்லதுவும் செழித்தோங்கி வளருமாம் ; இதுயிறைவன்
பொதுவான கருணை அன்றோ ?
போற்றிடத் தக்கதே அன்னவனின் செய்கையும் ,
பொறாமைக்கு இடமும் உண்டோ ?
செல்வமதை வாரியே வழங்கிடும் பெருமைதனை
சிறப்பிக்கும் வகையில் தானே ,
செங்கரும் போடுநல் இனிக்கின்றப் பொங்கல்தனை
சிரத்தையுடன் படைப்ப தெல்லாம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.