வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னைப்
புள்ளி வரி நாகம் பூண்டான் தன்னைப் பொன் பிதிர்ந்து அன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை வாரா உலகு அருள வல்லான் தன்னை
எள்க இடு பிச்சை ஏற்பான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

வில்வலான் = மன்மதன்: தனது கரும்பு வில்லினைக் கொண்டு அனைவரின் மனதிலும் காம உணர்வினைத் தூண்டுவதில் தோல்வி அடையாதவன் என்பதால் வல்லமையாக வில்லினைக் கையாளும் திறமை கொண்டவன் என்று மன்மதன் புகழப்படுகின்றான். அவனது திறமையில் நம்பிக்கை கொண்ட தேவர்கள், அவனால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்து, அவர் மனதில் உமையம்மையை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்துடன், மன்மதனை சிவபெருமான் மீது மலரம்புகளை விடுமாறு கட்டளை இட்டார்கள். ஆனால் பலரையும் தனது கரும்பு வில்லாலும் மலர்க் கணைகளாலும் வெற்றி கொண்ட மன்மதனின் திறமை சிவபெருமானால் அழிக்கப்பட்டது. வில்வட்டம் = வில்லினைக் கையாளும் திறமை.

வாரா உலகு = மீண்டும் திரும்பி வரவேண்டிய அவசியம் இல்லாத உலகு, முக்தி உலகம். பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கவல்ல சிவபெருமான் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். மணிவாசகரும் கீர்த்தித் திருவகலில், மீண்டு வாரா வழி அருள் புரிபவன் என்று இதே கருத்தை வலியுறுத்துகின்றார். சம்பந்தர் தென்திருமுல்லை வாயில் பதிகத்தின் மூன்றாவது பாடலில் (2.88.3) சிவபெருமானை வாராத நாடன் என்று அழைத்து, சிவபெருமான் அருளும் முக்தி நிலையை, மீண்டும் வாராத பேரின்பம் என்று குறிப்பிடுகின்றார். நெதி = நிதி, செல்வம்; வில்லின் உரு = வானத்தில் தோன்றும் வானவில் போன்று, சிறிது காலமே இருந்து மறையும் உடல்.

வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத இன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு திருமுல்லை வாயில் இதுவே

அப்பர் பிரானும் இதே கருத்தினை, திருவையாறு பதிகத்தின் (6.38.9) பாடலில் மீண்டு வாராத உலகு அருள வல்லவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார்.

எண் திசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டு இசைக்கும் நறும் கொன்றைத் தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூமலர்ச் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கு ஒர் சரம் கூட்ட வல்லாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

மணிவாசகர் திருவம்மானைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில், சிவபெருமானை வாரா வழி அருளியவன் என்று குறிப்பிடுகின்றார். ஆசை வாரியன் = அன்புக் கடலாக உள்ளவன்; இந்த பாடலிலும் திருவாசகத்தின் வேறு பல பாடல்களிலும், மணிவாசகர் சிவபெருமானை தென்னன் என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். வேத காலத்திற்கு முன்னமே, தமிழகத்தில் சிவ வழிபாடு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த கருத்தினை ஒட்டியே, மணிவாசகர் சிவபெருமானை தென்னாட்டிற்கு உரிய கடவுளாக சித்தரிக்கின்றார். மேலும் பாண்டிய மன்னன் மலயதுவஜனின் மகளாகிய மீனாட்சியை மணந்துகொண்டு சோமசுந்தரராக பாண்டிய நாட்டை ஆண்ட பெருமானை தென்னன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம்தானே.

பாரார் விசும்புள்ளார் பாதளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அறியான் எமக்கு எளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்து
ஆரா அமுதாய் அலைகடல் வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய்

திருமூலரும் சிவபெருமானை வாரா வழி தந்த மாநந்தி என்று கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.

வாரா வழி தந்த மாநந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்த ஆனந்த பேர் நந்தி
பேராயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே

பொழிப்புரை

வெள்ளி மலை போன்று உயர்ந்தும் வெண்மை நிறத்திலும் காட்சியளிக்கும் இடபத்தினை வாகனமாகக் கொண்டவனும், கரும்பு வில்லினைத் திறமையுடன் பயன்படுத்தும் மன்மதனைக் காய்ந்தவனும், படத்தில் புள்ளிகளையும் உடலில் கோடுகளையும் உடைய பாம்பினை அணிகலனாக அணிந்தவனும், பொன்னிழைகள் போன்று ஒளி வீசும் செஞ்சடையை உடையவனும், வள்ளிக்கொடி போன்று அழகான தோள்களில் வளையல்களை அணிந்தவனும், நாம் மீண்டும் பிறந்து உலக வாழ்க்கையில் சிக்காத வண்ணம் முக்தி நிலையினை நமக்கு தந்தருள வல்லவனும், பலர் தன்னை இகழ்வதையும் பொருட்படுத்தாது பிச்சை ஏற்பவனும் ஆகிய சிவபெருமானின் பெருமைகளை அறிந்துகொள்ளாமல் அறிவிலியாக இருந்த நான், அவனை முன்னாளில் இகழ்ந்தேன். அந்த செயல் தகாத செயலாகும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை