21. பொன்னார் திருவடிக்கொன்று - பாடல் 2

முதல் பாடலில் சிவக்கொழுந்தே என்று இறைவனை அழைத்த அப்பர் பிரான் இங்கே, புண்ணியனே என்று அழைக்கின்றார்.

Updated On :18 ஏப்ரல் 2016, 5:45 am

பாடல் 2

ஆவா சிறுத்தொண்டன் என் நினைந்தான் என்று அரும்பிணி நோய்
காவாது ஒழியில் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார்
தேவா திருவடி நீறு என்னைப் பூசு செந்தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் புண்ணியனே

விளக்கம்

அடியார்களில் கடையவன் என்ற பொருள்பட, சிறுத்தொண்டன் என்று தன்னை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தூய்மையற்ற உடலைத் தாங்கி நின்றமையால் அவ்வாறு கருதினார் போலும்.

பொழிப்புரை

இந்த பாடலில் சிவபெருமானின் திருவடியில் படிந்துள்ள திருநீற்றினை தன் மேல் பூசுமாறு அப்பர் பிரான் விண்ணப்பிக்கின்றார். முதல் பாடலில் உள்ள விண்ணப்பமும் (மூவிலைச் சூல அடியாளம் பொறித்தல்) கடைப் பாடலில் உள்ள விண்ணப்பமும் (இடபத்தின் குறி பொறித்தல்) ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பெரியபுராண பாடல் தெரிவிக்கின்றது. இந்த பாடலில் உள்ள கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறித்து தகவல் ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை எனினும், இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று நாம் நம்பலாம்.

அரும்பிணி = அகற்றுவதற்கு அரிய பிணி. தனது உடலின் தூய்மை கேட்டுப் போன தன்மையை ஒரு நோயாக அப்பர் பிரான் கருதுகின்றார். என் நினைந்தான் = என்னவென்று நினைத்துக்கொண்டான். தனது தகுதிக்கு மீறிய வேண்டுகோளை விடுப்பதாக எண்ணி சிவபிரான், தனது வேண்டுகோளை ஏற்காமல் இருப்பாரோ என்ற ஐயம் அப்பர் பிரானுக்கு வருகின்றது. என்ன நினைத்து இந்தத் தொண்டன் இவ்வாறு வேண்டுகின்றான் என்று நினைத்து இறைவன் சும்மா இருந்துவிட்டால், சிவபிரான் மேல் பழி சூழும் என்று எச்சரிக்கையினை அப்பர் பிரான் விடுக்கின்றார். தேவன் என்ற சொல் தலைவன் என்ற பொருளில் இங்கே வருகின்றது. தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாவர் தம் கடன் என்று கூற்றாயினவாறு எனத் தொடங்கும் பதிகத்தில் பாடிய அப்பர் பிரான் இங்கே, அன்பு கொண்டு பணியும் அடியார்களின் தலைவன் என்று சிவபிரானை குறிப்பிடுகின்றார்.

முதல் பாடலில் சிவக்கொழுந்தே என்று இறைவனை அழைத்த அப்பர் பிரான் இங்கே, புண்ணியனே என்று அழைக்கின்றார். புண்ணியன் என்றால் பழி பாவங்கள் ஏதுமின்றி புண்ணியங்கள் நிறைந்து செய்தவன் என்று பொருள். புண்ணியன் என்று அழைப்பதன் மூலம், தனது வேண்டுகோளை நிறைவேற்றாது போனால் ஏற்படும் பழியினைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை சிவபிரானுக்கு மிகவும் நயமாக உணர்த்துகின்றார்.

செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையில் உள்ள தூங்கானைமாடத்துக் கோயிலில் உறையும் எம் புண்ணியனே, தொண்டர்களில் மிகவும் சிறியவனான இந்தச் சிறுதொண்டன் தனது தகுதிக்கு மீறி ஆசைப்படுகின்றான் என்று நினைந்து நீ எனது உடலினைத் தூய்மை செய்யாது, சமண மதத்தைச் சார்ந்து இருந்ததனால் எனக்கு ஏற்பட்ட பிணியினை நீக்காமால் விட்டுவிட்டால் புண்ணியனாகிய உனக்கு பழிபாவம் வந்து சேரும். ஆதலால் உன்னை விரும்பி வழிபடும் அடியார்களின் தலைவனாகிய நீ, உனது திருவடிகள் தோய்ந்த திருநீற்றினை எனது உடலின் மீது பூசுவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.