பாடல் 10
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைககளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள் கோன் சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும் அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பதென்னே
விளக்கம்
இரண்டாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரை, இறைவனின் அங்கங்களை முறைப்படி பாதாதி கேச வர்ணனையாக நமக்கு அளித்த அப்பர் பிரான், இந்த பாடலில் அரக்கன் இராவணனை நெரித்த கால் பெருவிரலை சுட்டிக் காட்டுகிறார். இரண்டாவது பாடலில் திருவடியின் அழகினை குறிப்பிட்ட அப்பர் பிரான் ஏன் மறுபடியும், திருவடியை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் நமக்கு எழலாம். இறைவனின் அழகை அங்கம் அங்கமாக ரசித்த நாம் உய்யவேண்டும் என்று விரும்பினால் அதற்காக பற்றிக்கொள்ள வேண்டியது அவனது திருப்பாதங்கள் தாமே. இதனை நினைவூட்டும் வகையில், அப்பர் பிரான், இந்த பதிகத்தின் கடைப் பாடலில் திருவடியில் உள்ள பெருவிரலின் அழகுடன் முடிக்கிறார்.
தருக்கு = உடல் வலிமை குறித்த செருக்கு. உன்னி = நினைத்து. தடவரை = பெரிய மலை. வரைக்கை = மலை போன்று பருத்த கைகள்.
பொழிப்புரை
தனது தோள் வலிமையை மிகவும் பெரிதாக கருதிய அரக்கன் இராவணன், செருக்குடன் தனது மலை போன்ற கைகளால் கயிலை மலையினை மிகுந்த ஆரவாரத்துடன் பேர்த்தேடுக்க முயற்சி செய்தான். அதனைக் கண்ட மலைமகள் பார்வதியின் தலைவனாகிய சிவபெருமான், சிரித்தபடியே, மணிமுடிகள் அணிந்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளையும், தனது கால் பெருவிரலால் நெருக்கி மிதித்தான். தில்லைச் சிற்றம்பலத்து இறைவனின் வலிமை கொண்ட விரலினைக் கண்ட பின்னர், நாம் காண்பதற்கு அதனை விட மேலான பொருள் ஏதும் உள்ளதோ, இல்லை.
முடிவுரை
ஒன்பதாம் திருமுறையில் உள்ள இரண்டு பாடல்கள் அப்பர் பிரானின் இந்த பதிகத்தினைப் போன்று பாதாதிகேச வர்ணனையாக அமைந்துள்ளன. திருமாளிகைத் தேவர் அருளிய உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகம் முதல் பதிகமாகும். இந்த பதிகத்தில் திருமாளிகை தேவர், சிற்றம்பலக்கூத்தனின் திருவடிகள், காற்சிலம்பு, கணைக்கால், குறங்கு (தொடை), புலியதள் ஆடை மற்றும் அதற்கு காப்பாக உள்ள கச்சு நூல், வயிற்றுக் கொப்பூழ், உருத்திராக்க மாலை, ஒளிவீசும் பற்களைக் கொண்ட பவளவாய், செஞ்சடையில் தவழும் மதியம் என்பவை தனது கருத்தைக் கவர்ந்தாக கூறுகிறார். இவரும் அப்பர் பிரானைப்போல், கடைப் பாடலில் சிவபிரானின் திருவடியினை குறிப்பிடுகிறார்.
திரு வாலியமுதனார் அருளிய மையல் மாதொரு கூறன் என்று தொடங்கும் பாடலும், மேற்கண்ட பாடலைப் போன்று சிவபிரானின் திருவுருவச் சிறப்பினை, பாதாதி கேசமாக கூறுவதாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் பாடல்களில் திருவாலியமுதனார், நடராஜப் பெருமானின் திருப்பாதங்கள், காற்சிலம்பு, துடைகள், இடுப்பில் அணிந்துள்ள கச்சு, வயிற்றுக் கொப்பூழின் அழகிய சுழி, பெருமானின் வயிற்றில் மேல் அணிந்துள்ள ஆபரணங்கள், நான்கு திருக்கைகள், அணிகலன்கள் பூண்ட அகன்ற மார்பு, தோள்கள், விடம் உண்ட கறையினை உடைய கழுத்து, புன்முறுவல் பூக்கும் வாய், குழையும் தோடும் அணிந்த காதுகள், திருமுகம், நெற்றியில் காணப்படும் கண், ஊமத்தம் பூக்கள் மற்றும் பிறைச் சந்திரனை உடைய சடை ஆகியவை தனது கருத்தினைக் கவர்ந்ததாக, கூறுகின்றார். இந்தப் பாடலை பாடும் அடியார்கள் சிவபிரானின் திருவடிகளை மறுமையில் அடைவார்கள் என்று திருக்கடைகாப்பில் ஆசிரியர் கூறுகின்றார். இவ்வாறு இவர்கள் இருவரும் பாடுவதற்கு அப்பர் பிரானின் இந்தப் பதிகம்தான் முன்னோடியாகும்.
நமசிவாய மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களை குறிப்பது எவற்றை என்று கூறும் உண்மை விளக்கம் (பதினான்கு சைவ சித்தாந்த நூல்களில் ஒன்று) நூலின் ஒரு பாடலை இங்கே நாம் காணலாம். இந்த ஐந்து எழுத்துகள், முறையே பாதம், உந்தி, தோள், முகம் மற்றும் தலையை குறிக்கும் என்று இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது. இதே வரிசையில் அப்பர் பெருமானும் இந்தப் பதிகத்தில் கூறுவது நாம் உணர்ந்து மகிழத்தக்கது.
ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் கூடு
மகரம் உதரம் வளர் தொல் சிகரம்
பகரம் முகம் வ முடி யப்பேர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய சா்ஃப்பிங்: சிவராஜ், கமலி மூா்த்திக்கு பட்டம்!

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

