திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 7

பவளம் போன்று சிவந்த தனது

Updated On :17 டிசம்பர் 2016, 6:30 pm

பட்டுடுத்துப் பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம்
        கொண்டு அணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்கு எவ்வூரீர்
        எம்பெருமான் என்றேன் ஆவி
விட்டிடுமாறு அது செய்து விரைந்து நோக்கி வேறோர் பதி
            புகக் போவார் போல
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு
            அங்கே மன்னினாரே

விளக்கம்

வேறோர் ஊர் புகுவார்போல வலம்புரமே புகுந்தார் என்று சொல்வதன் மூலம், அப்பர் நாயகி தன்னை வலம்புரத்து அடியாரில் ஒருவராக கருதுகின்றாள் என்பது புலனாகின்றது. பசுஞ்சாந்து = குளிர்ந்த சந்தனம். வட்டணைகள் = சுழன்று சுழன்று. தனது ஊர் வலம்புரம் அல்ல என்பதை உணர்த்திய பெருமான், இறுதியில் வலம்புரம் தலத்தில் புகுந்தது, தன்னைத் தவிர்க்க வேண்டும் என்று நோக்கத்துடன் செயல்பட்டது என்ற முடிவுக்கு வந்த அப்பர் நாயகி, பெருமானது பேச்சினை மாயப் பேச்சு என்று சுட்டிக் காட்டுகின்றாள்.

பொழிப்புரை

பட்டாடையினை உடுத்தியவராய், பவளம் போன்று சிவந்த தனது மேனியில் சந்தனம் பூசியவராய், தனது திருவடிகள் வருந்துமாறு தனது பாதங்களை ஊன்றியும் தூக்கியவராக நடனம் ஆடிய பெருமான், இந்த தலம் வந்தபோது அவரைக் கண்ட நான், அடிகளே உமது ஊர் எந்த ஊர் என்று கேட்டேன்.

அவ்வாறு கேட்ட என்னை விழித்துப் பார்த்து எனது உள்ளத்தினை கொள்ளைகொண்ட பெருமான், எனக்கு விடை ஏதும் சொல்லாமல், தனது ஊர் வலம்புரம் அல்ல என்பதை உணர்த்துவார் போன்று, மிகவும் வேகமாக நடந்து, மற்றொரு ஊருக்குச் செல்வதாக எனக்கு போக்கு காட்டினார். சுழன்று சுழன்று, மிகவும் வேகமாக வேறோர் தலத்திற்குச் செல்வதாக அவர் செயல்பட்ட விதம், எனது வருத்தத்தை அதிகரித்தது; அவரது பிரிவால் எனது உயிர் உடலிலிருந்து பிரியும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனால் அவரோ, பல மாயங்கள் பேசி, இறுதியில் வலம்புரம் தலத்தில் புகுந்து நிலையாக நிலை பெற்று உறைகின்றார். எனவே, தனது ஊர் வலம்புரம் அல்ல என்று என்னிடம் பேசியது, என்னைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசிய மாயமான பேச்சுகள் தாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.