31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 7

இந்த பாடலில் கணம்புல்ல நாயனார் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இருக்குவேளூர் என்ற ஊரினைச் சார்ந்த கணம்புல்லர்

Updated On :20 ஜூலை 2016, 11:01 am

பாடல் 7

பிணம் புல்கு பீரல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் எண்தோளர் எண்ணிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சியுள்ளார் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

விளக்கம்

இந்த பாடலில் கணம்புல்ல நாயனார் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இருக்குவேளூர் என்ற ஊரினைச் சார்ந்த கணம்புல்லர், தில்லையில் உள்ள திருப்புலீச்சரம் திருக்கோயிலில் நெய்விளக்கு ஏற்றும் திருப்பணியை செய்து வந்தார். தான் வறுமை அடைந்த நிலையிலும் புற்களை அரிந்து அதனை விற்று வரும் பணத்தினைக்கொண்டு தனது திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். கையில் செல்வம் இல்லாத நிலையில், அடுத்தவரிடம் இரந்து பணம் பெற்றுத் தனது தொண்டினைச் செய்வதற்கு பதிலாக, தனது உழைப்பில் வரும் பணத்தினைக் கொண்டு திருப்பணி செய்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

ஆய செயல் மாண்டதன் பின் அயலவர் பால் இரப்பு அஞ்சிக்
காய முயற்சியில் அரிந்த கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய் மாறித்
தூய திருவிளக்கு எரித்தார் துளக்கு அறு மெய்த் தொண்டனார்

ஒருநாள் தான் அரிந்துகொண்டு வந்த புற்கட்டு விற்காமல் போகவே, கணம்புல்லர் அந்த புல்லினை திருவிளக்கு ஏற்ற பயன்படுத்தினார். ஆனால் புல் மிகவும் விரைவில் எரிந்துபோனதால், அதிகமான நேரம் விளக்கு எரிய வேண்டும் என்பதற்காக, தனது திருமுடியையே விளக்காக எரித்தார். இவ்வாறு திருவிளக்கு எரித்து திருப்பணி செய்த நாயனார், நல்வினை தீவினை என்று பிறவிகள்தோறும் தொடர்ந்து வரும் இருவினைகளின் தொடர்பினை எரித்தார் என்று சேக்கிழார் நயமாகக் கூறும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பு திருவிளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல்
மென்புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார்

பிணம் புல்கு = அழியக்கூடிய பிணமாக ஒரு நாள் பொருந்த இருக்கும். பீறல் குரம்பை = ஓட்டைக் குடிசை. நிணம் புல்கு = தசைகள் பொருந்தும். கணம்புல்லன் கருத்து உகந்தார் என்று தனது தலைமுடியை திருக்கோயிலில் எரித்தது தவறான செய்கை என்றாலும், திருவிளக்கு நின்று நெடுநேரம் எரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்த செய்கையால், நாயனாரது செயலைக் குற்றமாக கருதாது, அதனை விரும்பி பெருமான் ஏற்றார் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு சுந்தரரின் திருநின்றியூர் பதிகத்தின் நான்காவது பாடலை (7.65.4) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், சுந்தரர், ஞானசம்பந்தர், அப்பர் பிரான், மூர்க்க நாயனார், சாக்கியர், சிலந்தி, கணம்புல்லர், நந்தனார், கண்ணப்பர் ஆகிய அடியார்கள், குற்றம் செய்தவர்களாக மற்றவர்களால் கருதப் பட்டாலும், அவர்களின் செயல்களை குணமாக ஏற்றுக் கொண்ட பெருமான் என்று சிவபெருமானை குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன் நாவினுக்கு அரையன் நாளைப் போவானும்
கற்ற நல் சூதன் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன்
பொன் திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப்புன்கூர் உளானே

குற்றம் செய்யினும் என்று உம்மைத் தொகை சேர்த்திருப்பதிலிருந்து இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள அருளாளர்கள் எவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று சுந்தரர் கருதுகிறார் என்பது புலனாகிறது. ஆனால் சிலரின் கண்ணோட்டத்தில் இந்த அருளாளர்கள் செய்த தவறுகள் பின்வருமாறு: சம்பந்தர், தனது தகப்பனார் வேள்வி செய்ய பொருள் தேவை என கூறவே அப்போது இடைமருது ஈசனிடம் பொருள் கேட்டு பாடியபோது சந்தேகத்துடன் பதிகம் பாடியது, அப்பர் பிரான், சில காலம் சமண சமயத்தில் சார்ந்து இருந்து சிவபிரானை மறந்து இருந்தது; நந்தனார், ஆழ்ந்த பக்தி இருந்தும் கோயிலுக்குள் செல்லத் தயங்கியது; சூதன் என்று அழைக்கப்பட்ட மூர்க்கன், சூதாட்டம் மூலம் சிவத்தொண்டுக்கு பணம் சேர்த்தது; சாக்கியன் கல்லால் பூஜை செய்தது; சிலந்தி தனது உமிழ்நீரால் சிவபிரான் மேல் வலை பின்னியது; கண்ணப்பர், வாயால் நீரை எடுத்து உமிழ்ந்தது, புலால் உணவு இறைவனுக்கு படைத்தது, மற்றும் செருப்புக் காலால் சிவபிரானை தீண்டியது, கணம்புல்லர் கோயிலுள் தனது முடியால் விளக்கு எரித்தது முதலிய செயல்கள் சிலர் பார்வையில் குற்றமாக கருதப்பட்டாலும், அவை எவையும் குற்றம் இல்லை என்று சுந்தரர் கூறுகிறார். மேலே கூறப்பட்ட அருளாளர்களுக்கு அருள் புரிந்த திறம் கருதி தான் இறைவனது திருவடி அடைந்ததாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை

என்றேனும் பிணத்தின் நிலையினை அடையப் போகும் நிலையற்ற உடலினை, ஓட்டைகள் நிறைந்த குடிசையாகிய உடலினை, நிலையானது என்று தவறாக கருதும் பேதை மாந்தர்களே, தசைப் பகுதிகள் தங்கும் மூவிலை சூலத்தினை உடையவரும், நீலகண்டராக விளங்குபவரும், எட்டு தோள்களைக் கொண்டவரும், எண்ணற்ற நற்குணங்களை உடையவரும் ஆகிய சிவபெருமான், தனது முடியினைக் கொண்டு திருவிளக்கு ஏற்றிய கணம்புல்லனின் செய்கையினை மிகவும் விரும்பி ஏற்று மகிழ்ந்தார். எனவே நீங்களும் உள்ளன்புடன் அவருக்குத் தொண்டுகள் செய்து அவருக்கு விருப்பமானவர்களாக மாறுவீர்களாக; அவர் காஞ்சித் தலத்திலும் கழிப்பாலைத் தலத்திலும் உறைகின்றார். நாற்றத்தினை மறைப்பதற்காக நறுமணப் பொருட்கள் பூசப்படும் உடலினை விட்டு ஆன்மாக்கள் நீங்கி முக்தி நிலை அடைவதற்கான வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.