(கழிப்பாலை - நேரிசை)
முன்னுரை
சிதம்பரத்திலிருந்து, அருகில் இருந்த வேட்களம் சென்ற அப்பர் பிரான், அங்கிருந்து கழிப்பாலை தலத்திற்கும் சென்றார். அங்கு ஐந்து திருப்பதிகங்கள் பாடிய பின்னர் மீண்டும் தில்லைக்குத் திரும்பினார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மண்ணுலகத்தார் நன்றாக வாழும் பொருட்டு பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். நாம் அனைவரும் அப்பர் பிரானைப் பின்பற்றி அவர் அருளிய பாடல்களைப் பாடி உய்வினை அடைய வேண்டும் என்ற செய்தியை சேக்கிழார் இங்கே கூறுகின்றார்.
மேவிய பணிகள் செய்து விளங்கு நாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியங்கண்டர் மன்னும் திருக்கழிப்பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ
மேலும் அன்பு மேலீட்டினால் பாடப்பட்ட பதிகங்கள் என்றும் சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். பலப்பல வளங்கள் நிறைந்த பாடல்கள் என்பதால், தமிழுக்கே உரித்தான அகப்பொருள் கருத்தினை அமைத்துப் பாடிய பதிகம் உடையதால், வண்தமிழ் பாடல்கள் என்று கூறுகின்றார். வனபவள வாய் திறந்து என்று தொடங்கும் பதிகமும் (4.06) வண்ணமும் வடிவும் (5.40) என்று தொடங்கும் பதிகமும் அகத்துறை கருத்து உடைய பதிகங்கள். நங்கையை பாகம் வைத்தார் என்று தொடங்கும் நேரிசைப் பாடல் (4.30) பெருமானின் சிறப்பினை உணர்த்தும் பாடல். நெய்தல் குருகு என்று தொடங்கும் விருத்தப் பாடல் (4.106) இயற்கை அழகினை விவரிக்கும் பாடல். ஊனுடுத்து ஒன்பது வாசல் என்று தொடங்கும் திருத்தாண்டகம் (6.12), சைவ சித்தாந்த கொள்கையினை உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது.
சினவிடை ஏறுகந்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகமுடன் அன்புறு வண்டமிழ் பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார்
நாம் இங்கே சிந்திக்க இருக்கும் பதிகம், நங்கையை பாகம் வைத்தார் என்று தொடங்கும் நேரிசைப் பதிகமாகும். இந்த பதிகத்தில் எந்தெந்த பொருட்களை எங்கு எவ்வாறு வைத்துள்ளார் என்ற விவரமும், எவரெவரை எவ்வாறு பெருமான் செயல்பட வைக்கின்றார் என்ற செய்தியும் காணப்படுகின்றது. மேலும் இந்த உலகத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளுக்கு சிவபெருமானே காரணம் என்பது இந்த பாடல்களில் உணர்த்தப்படுகின்றது. பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் வைத்தார் என்றார் சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கங்கையைச் சடையுள் என்று தொடங்கும் திருவையாறு தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்திலும் (4.38) வைத்தார் என்ற சொல் மீண்டும் மீண்டும் கையாளப்பட்டு, இந்த பதிகத்தினைப் போன்று அமைந்துள்ளது.
இந்த கோயில் பண்டைய நாட்களில் சிதம்பரத்திற்கு தெற்கே பதினோரு கி.மீ. தொலையில் கடற்கரையின் அருகில், கொள்ளிடத்தின் வடகரையில் காரமேடு என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்தது. கொள்ளிடத்தில் வந்த வெள்ளத்தினால் இந்த கோயில் பாதிக்கப்படவே, இந்த கோயில் இருந்த சிலைகளை சிவபுரி என்று அழைக்கப்படும் இடத்தில் புதிய கோயிலை கட்டி, இந்த சிலைகளை நிறுவியுள்ளனர். சேர்ப்பனார் என்றால் கடற்கரைத் தலைவர் என்று பொருள். கடற்கரைக்கு மிகவும் அருகில் இருந்ததால் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் சேர்ப்பனார் என்று இறைவனை அழைக்கின்றார்.
பாடல் 1
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையில் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

நங்கை = உமையம்மை. நவிலுதல் = நாவால் சொல்லி பயிலுதல். அங்கை என்பதற்கு உள்ளங்கை என்றும் அழகிய கை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தங்கை = தம்+கை. தாமரை மலர் அந்தணர்க்கு உரிய அடையாளமாக கருதப்படுகின்றது. பொதுவாக தாமரையான், தாமரை மேலான் என்று குறிப்பிட்டால் அது பிரமனை குறிப்பதாகும். எப்போதும் வேதம் படித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் பிரமனுக்கு ஈடாக அந்தணர்களை கூறுவது வழக்கம். புள்ளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.16.1), பிரமனைப் போன்று வேதத் திறமையில் சிறந்து விளங்கும் அந்தணர்கள் நிறைந்த தலம் என்று சம்பந்தர் இந்த தலத்தை குறிப்பிடுகின்றார். பாலினில் மறைந்து இருக்கும் பெருமான் வெண்ணெய் போன்று திரண்டு வருவான் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். சிவபெருமான் அந்தணனாக வந்து ஆண்டு கொண்டதாக திருவாசகத்தில் பல இடங்களில் மணிவாசகர் குறிப்பிடுவதை நாம் இங்கே நினைவு கொள்ளலாம்.

பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்
போலும் திறலவர் வாழ் தரு பொழில் சூழ் புளமங்கைக்
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்
ஆலந்துறை தொழுவார் தமை அடையா வினை தானே
ஆக்கூர் தான்தோன்றி மாடம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில், அப்பர் பிரான். சிவபெருமானைத் தனது முடியில் தாமரை மலர் அணிந்த மூர்த்தி என்று கூறுகின்றார். இந்த பாடலின் நான்கு அடிகளிலும் தாமரை மலரை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாமரை மலரைப் போன்ற கண்ணினை உடையவர் என்றும், தம்மை அர்ச்சனை செய்து வணங்குவதற்காக காடு போன்று அடர்ந்து வளர்ந்திருக்கும் தாமரைக் கூட்டங்களை நாடும் அடியார்களைக் கொண்டவர் என்றும், தமது மலரடிகளை அடியார்களின் உள்ளத் தாமரையில் வைத்தவர் என்றும், தாமரை மலருடன் இறைவனை தொடர்பு படுத்தி நயமாக உரைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.

முடித்தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூவுலகும் தாமாகி நின்றார் போலும்
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தாமரைக் காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

தாமரை மலரை ஆசனமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று வலஞ்சுழி கொட்டையூர் தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.9) அப்பர் பிரான் குறிப்பிடுவதையும் நாம் இங்கே காணலாம். ஆசனம் என்ற வடமொழிச் சொல், ஆதனம் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. அசைவு = பழி. அரக்கன் இராவணனைக் கொன்ற பாவம் தீர, இராமபிரான் கொட்டையூரில் சிவபெருமானை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது.

தளம் கிளரும் தாமரை = இதழ்கள் நிறைந்த தாமரை மலர்.

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம் பிறையும் முதிர்சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டெட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய்
வளம் கிளர் நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிகள் தொழுது எழு பொற்கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

தாமரை மலர் என்பது, நமது தலைக்கு மேலே இருக்கும் சகஸ்ரதளம் என்பதை குறிப்பதாக, தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும்போது முனைவர் ஒருவரால் கூறப்பட்டது. நமது உடலில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி, அதனை ஒவ்வொரு ஆதாரத்தையும் கடக்குமாறு செய்து, புருவ மத்தியில் உள்ள ஆறாவது ஆதாரத்தை அடைந்த பின்னர், அதனையும் தாண்டி சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்றால் ஆனந்த நிலையினை அடையலாம் என்று சித்தர்கள் கூறுகின்றனர். சகஸ்ரதளம் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராக உருவகிக்கப் படுகின்றது. அந்த சகஸ்ர தளத்தை வைத்து நாம் அனைவரும் அந்த ஆனந்த நிலையினை அடைய வழி வகுத்த பெருமான், என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை

கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைத் தலைவராக விளங்கும் சிவபெருமான், பார்வதி நங்கையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்தவர்; நாம் அனைவரும் சிவஞானத்தை உணர்ந்து சொல்லுமாறு, முனிவர்கள் மூலம் உபதேசம் செய்தவர், தனது அழகிய கையினில் தீப்பிழம்பை வைத்து நடனம் ஆடுபவர்; தன்னைக் கொல்ல வந்த மதயானையைக் கொன்று அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக வைத்தவர்; தனது கையினில் யாழை வைத்துள்ளவர்; தனது முடியில் தாமரை மலரை வைத்தவர், மற்றும் கங்கையைத் தனது சடையில் வைத்தவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு