மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

42. ஆதியில் பிரமனார் - பாடல் 3

சிவ பூஜைக்கு இடையூறு செய்தவரை தந்தை

Updated On :4 நவம்பர் 2016, 6:30 pm

தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்டக் கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெரும் கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே

விளக்கம்

இந்த பாடல் சண்டீச நாயனார் சரித்திரத்தை குறிப்பிடுகின்றது. பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியும் பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது.

தாபரம் = திருவுருவம். சிவகருமம் சிதைத்தவன் தந்தையே ஆனாலும், அந்தணனாக இருந்தாலும் அவனைத் தண்டிப்பது குற்றம் ஆகாது என்று மணிவாசகர் தனது திருவாசகம் தோணோக்கம் பதிகத்தில் கூறுகின்றார். வீடுபேற்றினை இங்கே சோறு என்று மணிவாசகர் குறிக்கின்றார்,

தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதை தனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

திருப்பல்லாண்டுப் பதிகத்தில், சேந்தனார் சிவபெருமான் சண்டீசருக்கு அருளியதை, பாதகத்துக்குப் பரிசு வைத்த செய்கையாக குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தொண்டர்க்கு நாயகன் என்ற பதவியும், தனது தலையில் சூடியிருந்த கொன்றை மலரை சிவபெருமான் சண்டீசரின் தலையில் சூடியதும் குறிப்பிடப்படுகின்றது.

தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு அவ்வண்டத்தொடும் உடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே சண்டீசர் அடைந்த பேற்றினை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயரிட்டு அழைத்த அடியார்களில் சண்டீசரும் ஒருவர்.

மற்றவர்கள், கண்ணப்பர், ராவணன், திருநாவுக்கரசர், மணிவாசகர்.

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தடமுடிக்குத்
துண்டமதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்

சுந்தரர் தான் அருளிய திருநின்றியூர் பதிகத்தின் (பதிக எண் 7.65) ஐந்தாவது பாடலில், அகத்தியர் சிவபெருமானின் உருவத்தை அமைத்து, வழிபாடு செய்ததை, தாபரம் நிறுத்தி என்று குறிப்பிடுகின்றார். மூன்று காலங்களில் அகத்தியர் வழிபட்டதை, சந்தி மூன்றிலும், என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். இரவும் காலையும் சந்திக்கும் விடியல் நேரம், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் நண்பகல் நேரம் மற்றும் மாலையும் இரவும் சந்திக்கும் பொழுது சாயும் நேரம், என்று மூன்று காலங்கள் உணர்த்தப்படுகின்றன. சகளி என்றால் கலை என்று பொருள். லிங்கத் திருமேனியில் கலை உருவத்தை பாவனையாக அமைத்து அகத்தியர் வழிபட்டார் என்று நாம் கொள்ள வேண்டும். பொதிகை மலையில் இருந்த குற்றாலம் ஒரு காலத்தில் பெருமாள் கோயிலாக இருந்தது என்றும், அகத்தியர், பெருமாள் சிலையின் உச்சியில் தனது உள்ளங்கையினை வைத்து, குறுகுக குறுகுக என்று வேண்டவே பெருமாள் சிலை லிங்கமாக மாறியது என்றும், லிங்கத்தின் உச்சியில் அகத்தியர் கை வைத்த அடையாளம் பதிந்துள்ளது என்றும் செவி வழிச் செய்தியாக கூறப்படுகின்றது. பொதிகை மலை பொதி என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சும் அகத்தியன் தனக்குச்
சிந்து மாமணி அணி திருப்பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடியேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும் செல்வத் தென்திருநின்றியூரானே

பொழிப்புரை

தழைகள் நிரம்பிய ஆத்தி மரத்தின் கீழே மணலால் லிங்கம் செய்து, சிவபிரானின் திருநாமங்களைக் கூறி விசாரசருமன் பசுவினை அழைக்க, அந்த பசுவும் அங்கே வந்து லிங்கத்தின் மீது பாலைப் பொழிந்தது. இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த விசாரசருமனின் தந்தை எச்சதத்தன், தனது மகன் செய்தது தவறு எனக் கருதி, மனம் பொறுக்காமல், பால் வைத்திருந்த குடத்தை எட்டி உதைத்தான். தனது தந்தை செய்த தவறினைக் கண்ட விசாரசருமர், தந்தையைத் தடுக்க எண்ணி தனது கையில் இருந்த கோலை வீச, அந்த கோல் மழுவாக மாறி அவரது தந்தையின் கால்களை வெட்டியது. இவ்வாறு சிவபிரானின் வழிபாட்டில் ஆழ்ந்திருந்து, சிவ பூஜைக்கு இடையூறு செய்தவரை தந்தை என்றும் பாராமல் தண்டித்த விசாரசருமனுக்கு, சிவானந்தம் ஆகிய அமுதத்தைக் குழைத்துக் கொடுத்தவர் குறுக்கை வீரட்டத்து இறைவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.