/

39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 1

வெள்ளெருக்கம் பூக்களும் பாம்பும்

Updated On :1 அக்டோபர் 2016, 11:02 am


(புள்ளிருக்குவேளூர் - குறுந்தொகை)

பின்னணி
சீர்காழி தலத்தில் திருஞானசம்பந்தப் பெருமானை சந்தித்த அப்பர் பிரான், சம்பந்தர் விரும்பியவாறு சீர்காழி தலத்து இறைவனை குறித்து மூன்று பதிகங்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். பின்னர் இருவருமாக, அருகில் உள்ள கோலக்கா தலம் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. கோலக்காவிலிருந்து சீர்காழி திரும்பிய பின்னர், சம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு, பல சோழநாட்டு திருப்பதிகளைக் காண அப்பர் பிரான் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். கருப்பறியலூர், புன்கூர், மற்றும் நீடூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராண குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் இந்த தலங்களின் அருகில் உள்ள புள்ளிருக்குவேளூர் சென்றதாக பெரியபுராணத்தில் குறிப்புகள் ஏதும் இல்லை. எனினும் இந்த தலத்தின் மீது இரண்டு பதிகங்கள் அப்பர் பிரான் அருளியிருப்பதால், கருப்பறியலூர், புன்கூர், நீடூர் ஆகிய தலங்கள் சென்றபோது, புள்ளிருக்குவேளூர் தலத்திற்கும் சென்றிருக்க வேண்டும் என்று நாம் கருதலாம்.

பாடல் 1

வெள்ளெருக்கு அரவம் விரவும் சடைப்
புள்ளிருக்குவேளூர் அரன் பொற்கழல்
உள்ளிருக்கும் உணர்ச்சி இல்லாதவர்
நள்ளிருப்பர் நரகக் குழியிலே

விளக்கம்

விரவும் = கலந்து இருக்கும். நள்ளிருப்பர் = நடுவில் இருப்பார்கள்; பெருமானின் திருவடிகளை மனதினில் நினையாதவர், நரகத்தில் வீழ்வார்கள் என்று அப்பர்பிரான் இந்த பதிகத்தில் கூறுகின்றார்.

பொழிப்புரை

வெள்ளெருக்கம் பூக்களும் பாம்பும் ஒன்றுடன் ஒன்றுகலந்து பெருமானது சடையில் காணப்படுகின்றன. இவ்வாறு காட்சி தரும், புள்ளிருக்குவேளூர் தலத்தின் இறைவனது பொற்கழல்களை, தங்களது மனதினில் நினைத்து பக்தி உணர்வுடன் அவரை வணங்காத மாந்தர்கள் நரகக் குழியில் சென்று வீழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.