மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 9

கையிலிருந்த சோற்றிலிருந்து நெய் ஒழுகுவதை

Updated On :26 அக்டோபர் 2016, 12:20 pm

கை எலாம் நெய் பாயக் கழுத்தே கிட்டக் கால் நிமிர்த்து நின்று
                                                           உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதி புக்குப் புள்ளுவரால் அகப்படாது
                                                            உய்யப் போந்தேன்
செய்யெலாம் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய
                                                           சிவலோகனை
நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே
                                                           நான் நினையாவாறே

விளக்கம்

படப்பை = தோட்டம். தான் அத்தனை நாட்கள் நினையாது இருந்த தன்மைக்கு வருந்தும் அப்பர் பிரான், அவ்வாறு இருந்த நிலைக்கு காரணம் ஆராய்ந்தார் போலும். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், தான் சமணர்களுடன் இருந்த காலத்தை நினைத்து, சமண் சமயத்தின் பிடியில் இருந்து தப்பி உய்ந்த விதத்தை வேடன் கையில் அகப்பட்ட பறவை தப்பியதுபோல் என்று கூறி அப்பர் பிரான் பெருமிதம் கொள்கிறார். புள்ளுவர் என்றால் வேடன் என்று பொருள். சமணர்களது பொய்யான கொள்கைகளை மெய்யாக நம்பியதையும் இந்த பாடலில் கூறுகிறார். சமணர்களை குறிக்கும் போது அவர்கள் சாப்பிடும் முறையை, கை இருக்கும் இடத்திற்கு தலையை தாழ்த்தி சென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் என்று அப்பர் பிரான் கூறுகிறார். கையிலிருக்கும் நெய் கலந்த சோற்றில் உள்ள நெய் கீழே வழிந்து விடுவதை தடுக்க, தலையை தாழ்த்தி உணவு உண்ணும் பழக்கம் உடையவர்கள், நிலை குலையாமல் இருப்பதற்காக கால்களை அகற்றி வைத்து நிற்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகிறார். கலத்தினில் உண்ணாமல் கையினில் உணவு உட்கொள்ளுதல் ஒரு பொருளின் மேல் பற்றற்று வாழும் தன்மையையும் நின்று உண்பது ஒரு இடத்தின் மீதும் பற்று கொள்ளாமல் வாழும் கொள்கையையும் உணர்த்துவது ஆகும். சமணர்களுடன் சில காலம் தங்கி இருந்த காரணத்தால் அவர்களில் வாழ்க்கை முறையினை நன்கு அறிந்தவர் அல்லவா அப்பர் பிரான்?.

பொய் நெறியினை மெய் நெறியாக கருதி, தான் புகுந்த நெறி என்று சமண சமயத்தை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் நாம், சமண சமயம் புகுந்தமை குறித்து, சேக்கிழார் குறிப்பிடும் பாடல் நினைவுகூரத்தக்கது. கொளுவுதல் = புகட்டுதல். சமண சமய நெறிதான் வீடுபேற்றினை அடையும் நெறி எனும் பொய்யினை மெய் போல் உணர்த்தினார்கள் என்று இங்கே சேக்கிழார் கூறுகின்றார்.

பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடு அணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூட வரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்

பொழிப்புரை

தங்களது கையிலிருந்த சோற்றிலிருந்து நெய் ஒழுகுவதை தடுக்கும் வண்ணம், சோறு தாங்கிய கைகளை மேலே தூக்கிச் செல்லாமல், தங்களது கழுத்தினை வளைத்து கைகளின் அருகே கொண்டு செல்லும் வழக்கத்தினை உடைய சமணர்கள், அவ்வாறு தாங்கள் நின்றவாறு உணவு உண்ணும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்கும் பொருட்டு, கால்களை அகட்டி வைத்துகொள்ளும் சமணர்கள் சொன்ன பொய்களை உண்மை என்று நினைத்து வாழ்ந்து வந்த அடியேன், அவர்களது வலையிலிருந்து தப்பி, சைவ நெறியினை அடைந்த பின்னர் வாழ்வினில் உய்வினை அடைந்தேன். இவ்வாறு வேடனின் கையில் சிக்கிய பறவை உயிர் தப்பியது போன்று, சமணர்களின் வலையிலிருந்து தப்பி வாழ்வினில் உய்வினை அடைந்த பின்னரும் செழிப்பான தாமரை மலர்கள் நெற்கதிர்களுடன் கலந்து தோன்றுமாறு நீர்வளம் பொருந்திய வயல்களை உடைய திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், கடற்கரையின் அருகில் உள்ள வீடுகள் தோட்டங்களுடன் செழுமையாக காணப்படும் நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட அடியேன் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.