பாடல் 7
தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் தலை கலனாப்
பலியேற்ற தலைவன் தன்னை
கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம்
பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோடு
ஆனைமுகற்கு அப்பன் தன்னை
நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர்
நன்னகரில் கண்டேன் நானே
விளக்கம்
இந்த பாடலில் முருகன் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப்படுகின்றார்கள். பல திருமுறைப் பாடல்களில் முருகன் மற்றும் விநாயகர் பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், இவர்கள் இருவரும் ஒரே பாடலில் இடம்பெறுவது அரிதாகும். அத்தகைய தேவாரப் பாடல்கள், மேற்கண்ட பாடலைத் தவிர்த்து ஐந்து பாடல்கள் உள்ளன.
அவைகளையும் நாம் இங்கே சிந்திப்போம்.
பூவனூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.65.10) அப்பர் பிரான் கணபதியும் முருகப் பெருமானும் வணங்கும் பெருமான் என்று இறைவனை
குறிப்பிடுகின்றார். நாராயணன். நான்முகன், இந்திரன், கணபதி, முருகன் ஆகியோர் வணங்கும் திருப்பாதங்களை உடையவன் சிவபெருமான் என்று இங்கே கூறுவதை நாம்
உணரலாம். வாரணம் = யானை. இங்கே யானை முகத்தினை உடைய கணபதியை வாரணன் என்று குறிப்பிடுகின்றார். உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த
பெருமானை காரணன் என்று இங்கே அப்பர் பிரான் அழைக்கின்றார்.
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திருப்பூவனூர் மேவிய
காரணன் என்னை ஆளுடைக் காளையே
கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒரு பாடலில் (6.65.9) முருகவேளுக்கும் யானை முகத்தவனுக்கும் தந்தையாகிய பெருமான் என்று அப்பர் பிரான்
குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளும் தோன்றுவதற்கு காரண புருடனாக இருந்தவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார் சிவன் என்றால் இன்ப
வடிவானாவன் என்று பொருள். சிந்தாத சிந்தையர் என்று சிவபெருமான் பால் வைத்த சிந்தை, மற்ற எந்த பொருட்களின் மீதும் சிதறாதவாறு உறுதியுடன் இருக்கும்
அடியார்களை இங்கே குறிப்பிடுகின்றார்.
முந்தை காண் மூவரினும் முதலானான் காண் மூவிலை
வேல் மூர்த்தி காண் முருகவேட்குத்
தந்தை காண் தண் கடமா முகத்தினாற்குத் தாதை காண்
தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்குச் சிவனவன் காண்
செங்கண்மால் விடை ஒன்று ஏறும்
எந்தை காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண்
அவன் என் சிந்தையானே
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.13) பத்தாவது பாடலில், பெருமானைப் போற்றிப் புகழ்வோரின் பட்டியலில், முருகப் பெருமானையும் கணபதியையும் அப்பர்
பிரான் சேர்த்திருப்பதை நாம் காணலாம். விநாயகப் பெருமானின் இடர் களையும் தன்மை இங்கே விக்கின விநாயக என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.
சிவபிரான்பால் ஆழ்ந்த காதல்கொண்ட தலைவி, பெருமான் தன்னை விட்டுப் பிரிந்துபோனதை நினைத்து வருந்தும் பாடல்கள் கொண்ட பதிகம் இது.
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக் குமரனும் விக்கின
விநாயகன்னும்
பூவாய் பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும்
போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து
பற்றிப்
பூவார்ந்த கொன்றை வண்டார்க்கப் புறம்பயம் நம்மூர் என்று
போயினாரே
நாகைக் காரோணம் பதிகத்தின் ஒரு பாடலில் (7.46.9), அன்னை பார்வதி தேவி, விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆகியோரிடத்தில் எதுவும் வேண்டமாட்டேன்
என்று கூறுகின்றார். மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்யும் உன்னிடம்தான் எதுவும் வேண்டுவேன் என்று கூறுகின்றார். நீர் எனக்கு ஏதும் தாராது
இருந்தால், நாம் உமது திருமேனியை விடாமல், கெட்டியாகப் பற்றிக்கொள்வேன். அதற்காக நீர் என்னை, கொடுமைக்காரன் என்று பழிக்கக்கூடாது என்றும் இந்த பாடலில்
கூறுகின்றார்.
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன்
பொற்பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான்
எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர்
திண்ணென என்னுடன் விருத்தி தாரீரேயாகில் திருமேனி
வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல்
நாகைக் காரோணம் மேவி இருந்தீரே
மேற்கண்ட பாடலில் வேறு எவரையும் வேண்டமாட்டேன் என்று கூறுவது, அவர் திருவாரூர் தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் முதல் பாடலில் (வலது கண்ணில்
பார்வை பெறுவதற்காக பாடி அருளிய பதிகம்) பெருமானே, உமக்கு மீளா அடிமையாக இருக்கும் அடியேன் உனக்கு ஆளாவதன்றி வேறு எவரையும் வேண்டாது இருக்கும்
அடியார்களின் குறைகளைத் தீர்ப்பது உனது கடமை என்று கூறுவதை நினைவு படுத்துகின்றது. நாகைக் காரோணம் பதிகத்தின் மற்றொரு பாடலில், பெருமானின்
செல்வத்தின் மூன்றில் ஒரு பங்கு தனக்குத் தரவேண்டும் என்று சுந்தரர் கூறுவது, அவர் பெருந்தன்மையுடன், பெருமானின் குழந்தைகளான கணபதிக்கும் முருகனுக்கு
ஆளுக்கு ஒவ்வொரு பங்கினை ஒதுக்கிய பின்னர் மீதும் இருக்கும் ஒரு பங்கினைக் கேட்கும் நயம் வெளிப்படுகின்றது. அவ்வாறு ஒரு கூறு தாராவிடில், பெருமான்
அடியெடுத்து எங்கும் செல்லாதவாறு அவரது திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என்று பயமுறுத்துவதையும் நாம் உணரலாம். இந்த நிலை சுந்தரர்
பெருமானிடம் வைத்திருந்த அளவு கடந்த தோழமையால் ஏற்பட்ட நிலையாகும்.
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர்
வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணியாரூர்
புகப்பெய்த வருநிதியம் அதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒரு
பொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்
காற்றனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்
காரோணம் மேவி இருந்தீரே
ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.5.) இரண்டாவது பாடலில் சுந்தரர் பெருமானுடன் தொடர்பு கொண்டுள்ள கங்கை நங்கை, பார்வதி தேவி, கணபதி,
முருகன் ஆகியோர், எவ்வாறு தனக்கு உதவாமல் இருக்கின்றார்கள் என்று நகைச்சுவையாக கூறுகின்றார். இந்த பாடலிலும் முருகப் பெருமான் மற்றும் விநாயகர் ஆகிய
இருவரும் குறிப்பிடப் படுகின்றனர். கங்கை, உமையம்மைக்கு அஞ்சி ஏதும் வாய் திறவாமல் இருப்பதாலும், கணபதி தனது வயிற்றினையே பிரதானமாக கருதுவதாலும்,
குமரன் சிறுபிள்ளையாக இருப்பதாலும், உமையம்மை கணவனின் கருத்தினை மீறி அடியார்க்கு அருள் செய்யாமல் இருப்பதாலும், தனக்கு அவர்கள் நால்வரும்
உதவுவதில்லை என்று கூறும் சுந்தரர், பெருமானும் தனக்கு உதவவில்லை என்றால், எவ்வாறு அவருக்குத் தான் தொண்டு செய்வது என்ற கேள்வியை இங்கே
கேட்கின்றார். கோல் தட்டி = ஆணையை மீறி;
திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கோல் தட்டி ஆளார்
உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே
பொழிப்புரை
தன்னை மதிக்காது தக்கன் செய்த வேள்வி முற்றுப் பெறாதவாறு அதனை அழித்த வல்லமை உடையவன் சிவபெருமான். பிரமனது தலையினைத் தனது உண்கலனாக
ஏற்று ஊரெங்கும் திரிந்து பலி ஏற்கும் தலைவன் சிவபெருமான்; கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக் கருவிகளை வாசிக்கும் கருத்தினை உடையவன் சிவபெருமான்;
உயிரினை கொல்லும் விடத்தினை உடைய நாகத்தினை ஆபரணமாக அணிந்தவன் சிவபெருமான்; உருத்திராக்க மணிகளையும் எலும்பினையும் மாலையாக அணிந்து
அழகாக விளங்குபவன் சிவபெருமான்: ஆறுமுகனுக்கும் ஆனைமுகனுக்கும் தந்தையாகத் திகழ்பவன் சிவபெருமான்: குறைந்த ஆடைகளுடன் காணப்படும் அவன், வக்கரை
மற்றும் நள்ளாறு தலங்களில் உறைகின்றான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

