/

37. சொல்லானைப் பொருளானை  - பாடல் 9

பண்டைய நாட்களில், அந்தணர்கள் வேதங்கள்

Updated On :22 செப்டம்பர் 2016, 12:16 pm

பாடல் 9


    ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆலதன் கீழ்
                        அறம் நால்வர்க்கு அருள்     செய்தானைப்
    பாலாகித் தேனாகிப் பழமுமாகிப் பைங்கரும்பாய் அங்கு
                                                   அருந்தும் சுவையானானை
    மேலாய வேதியர்க்கு வேள்வியாகி வேள்வியின் இன்     
                                                  பயனாய விமலன் தன்னை
    நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர்     
                                                  நன்னகரில் கண்டேன் நானே

விளக்கம்

மேலாய வேதியர் என்று அந்தணர்களை சிறப்பித்து கூறுவதை நாம் இந்த பாடலில் காணலாம். நமது இலக்கியங்களும், வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல், தானம் கொடுத்தல், வேள்வி செய்வதற்காகவும் வாழ்க்கை நடத்தவும் தானம் வாங்குதல் என்பன அந்தணர்களின் செயல்களாக கூறுகின்றன. பண்டைய நாட்களில், அந்தணர்கள் வேதங்கள் நன்கு அறிந்தவர்களாகவும், தாங்கள் அறிந்த வேதத்தின் உதவி கொண்டு, உலக நலன்களுக்காக வேள்விகள் செய்பவர்களாக விளங்கினார்கள்.

அதனால் ஏனையோர் அவர்கள் மீது மிகவும் அதிகமான மதிப்பு கொண்டு உயர்வாகவும் கருதினார்கள். நான்கு வேதங்களைப் பயிலுவதே அவர்களது கல்வியாகவும் இருந்த காலம். அவர்கள் முழு உணர்வுடன் செய்து வந்த வேள்விகளின் பயன்களை உலகம் பெற்று அனைவரும் நலமாக வாழ்ந்தனர் என்பதை நாம் சரித்திரத்திலிருந்து அறிகின்றோம்.

ஆனால் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, கால நிலைமை மாறி, அந்தணர்கள் பொருள் ஈட்டுவதற்காக, அரசுப் பணியிலும் தனியார் பணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த கருத்தினை மிகவும் விளக்கமாக, தெய்வத்தின் குரல் முதல் பகுதியில் எடுத்துரைக்கும் காஞ்சிப் பெரியவர், இன்றைய உலகின் சீர்கேட்டிற்கு அந்தணர்களே காரணம் என்று சாடுவதை நாம் காணலாம்.

பொழிப்புரை

ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கி, நீல மாமணி போல் விளங்குமாறு, அந்த விடத்தின் நச்சுத் தன்மையை அடக்கியவன் சிவபெருமான்; கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனக முனிவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் வேதங்களின் பொருளினை விளக்கியவர் சிவபெருமான்; பாலாகவும், தேனாகவும், பழமாகவும், பசுமையான கரும்பாகவும், இந்த நான்கு பொருட்கள் மூலம் நாம் அடையும் சுவையாகவும் இருப்பவர் சிவபெருமான்.

மேலும், உயர்ந்தவர்களாக கருதப்படும் அந்தணர்களுக்கு வேள்வியாக இருப்பவனும் அந்த வேள்விகளின் பயனாக விளங்குபவனும் சிவபெருமான் தான்; நான்மறைகளாலும் இறைவனாக போற்றப் படும் இறைவன் குற்றங்கள், குறைகள் இல்லாதவனாகவும் காணப்படுகின்றான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.