மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 2

கஞ்சனூர் தலத்தை ஆளும்

Updated On :14 ஜூன் 2017, 11:10 am

தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானைச் சவம் தாங்கு
        தோளானைச் சாம்பலானைக்
குலையேறு நறும் கொன்றை முடிமேல் வைத்துக்
    கோணாகம் அசைத்தானைக் குலமாம் கைலை 
மலையானை மற்றொப்பார் இல்லாதானை மதி கதிரும்
        வானவரும் மாலும் போற்றும்
கலையானைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
 

விளக்கம்

தலை = பிரம கபாலம். சவம் தாங்கு தோளான் = பிரமன் மற்றும் திருமாலின் உயிரற்ற உடலினைத் தனது தோளில் தாங்கிய கங்காள வடிவினன். எலும்பு மாலைகளை அணிந்தவன், சாம்பலைத் தனது உடலில் பூசியவன், கங்காள வேடத்தவன் என்று சொல்வதன் மூலம், பெருமானைத் தவிர நிலையான தன்மை உடையவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

ஊழிக்காலத்தில், கடல் நீர் பொங்கி உலகினை மூழ்குவிப்ப, பிரமன் திருமால் உட்பட அனைவரும் இறக்க, பிரமன் திருமால் ஆகிய இருவரின் சடலங்களைத் தனது உடலில் அணிந்தவனாக, ஒடுங்கிய உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் சிவபெருமான் வீணை வாசித்துக் கொண்டு இருப்பார் என்று கீழ்க்கண்ட பாடலில் (4.112.7) அப்பர் பிரான் கூறுகின்றார்.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இரும் கடன் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே

உயிரற்ற உடலை களேபரம் என்று அழைப்பார்கள். வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.67.10) சுந்தரர் களேபரம் தன்னை சுமந்த கங்காளன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம்.

ஈன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால்
            உதிரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மாவிரதத்த
                கங்காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன்னிலா
                மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன் தன்னை வலிவலம் தன்னில்
                வந்து கண்டேனே

உலகத்தைப் படைத்ததால் தான் முதல்வன் என்று பிரமன் சொல்ல, பிரமனைப் படைத்ததால் தானே பிரமனுக்கும் உலகத்திற்கும் முதல்வன் என்று திருமால் சொல்ல, இருவருக்கிடையில் எழுந்த வாக்குவாதம் போராக மாறும் நிலையில், சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பைரவர் அவர்கள் இருவரின் முன்னே தோன்றுகின்றார். காண்பவர் அச்சமுறும் தோற்றத்துடன் கூடிய பைரவரைக் கண்ட திருமால், அச்சமூட்டும் அந்த இடத்தினை விட்டு அகல, பிரமனோ மமதையில் இருந்ததால், மகனே நீ வா என்று பைரவரை அழைக்க, கோபம் கொண்ட பைரவர் பிரமனது நடுத் தலையினைத் தனது நகத்தால் கிள்ளினார் என்று காஞ்சி புராணம் வைரவேசப் படலத்தில் விரிவாக கூறப்படுகின்றது. மகனே நீ வா என்று அழைத்த பிரமனை ஈன்ற அந்தணன் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். ஈன்ற அந்தணன் என்பதற்கு உலகத்தைப் படைத்த அந்தணன் என்று கூறுவதும் பொருத்தம். 

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.71) முதல் பாடலில் பெருமானை கங்காளர் என்று சம்பந்தர் அழைக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பெருமை மிகுந்த மறையோர்கள் வேதங்களை கீதத்துடன் இசைத்துப் பாட, அதனைக் கேட்கும் வண்டுகள் மிகவும் மகிழ்வதாக இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். 

பிறைகொள் சடையர் புலியின் உரியர் பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்
மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வு எய்தி 
சிறைகொள் வண்டு தேனார் நறையூர் சித்தீச்சரத்தாரே

பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் வாழ்நாட்கள் முடிந்துவிட்ட காரணத்தால், அவர்கள் இறந்துவிட, அவர்களது எலும்புக் கூட்டினை சிவபெருமான் அணிந்தார் என்று திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். காலாந்திரம் = கால முடிவு, ஊழிக் காலம். 

நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காணேடி
கங்காளம் ஆமா கேள் காலந்தரத்து இருவர்
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

பொழிப்புரை

பிரம கபாலத்தை, தான் உணவு உண்ணும் கலனாக ஏற்றவனும், எலும்புகளை மாலையாக அணிந்தவனும், சாம்பலைத் தனது உடலெங்கும் பூசியவனும், முற்றூழிக் காலத்தில் திருமால் மற்றும் பிரமனது இறந்த உடல்களைத் தனது தோளில் தாங்கியவாறு கங்காள நடனம் ஆடுபவனும், கொத்தாக பூக்கும் கொன்றை மலர்களைத் தனது முடி மேல் விரும்பி அணிபவனும், கொடுமைத் தன்மை பொருந்திய நாகத்தைத் தனது இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டி தனது விருப்பம்போல் அதனை அசைப்பவனும், சிறந்த கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக உடையவனும், தனக்கு உவமையாக சொல்லக் கூடியவர் எவரும் இல்லாதவனும், திருமால் சந்திரன் சூரியன் மற்ற தேவர்கள் போற்றும் திருவுருவத்தை உடையவனும் கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.