மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 3

பகன் எனப்படும் சூரியனின்

Updated On :14 ஜூன் 2017, 11:12 am

தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானைச் சுடர்
    மழுவாள் படையானைச் சுழி வான் கங்கைத்
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானைச்
   செக்கர் வான் ஒளியானைச் சேராது எண்ணிப் 
பண்டு அமரர் கொண்டுகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்துத்
         தலை அறுத்துப் பல் கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
 

விளக்கம்

கண்டகன் = தண்டனை அளிப்பவன். தக்க யாகத்தில் பங்கேற்றோரை தண்டித்தற்கும், வேள்வியினை அழித்தற்கும் காரணம் இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. சேராது எண்ணி என்று, சிவபிரானை புறக்கணித்து யாகம் செய்யத் துவங்கிய செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. வேதங்களில் வகுக்கப்பட்டுள்ள நியதியின்படி, வேத முதல்வனான சிவபெருமானை முன்னிட்டுச் செய்யப்பட வேண்டியவை வேள்விகள். இந்த நியதியை மீறிச் செய்யப்பட்ட வேள்வியில் ஒரு சில முனிவர்கள் தவிர ஏனைய தேவர்கள் கலந்துகொண்டமை, விருப்பத்துடன் கலந்துகொண்டமையாக இங்கே கூறப்படுகின்றது. வேள்வியில் அளிக்கப்படும் அவிர்பாகத்தைப் பெற வேண்டிய தேவர்கள், அவிர்ப் பாகத்தை பெற மறுத்து புறக்கணித்தால், தக்கன் தனது வீணான முயற்சியை கைவிட்டிருப்பான் அல்லவா. ஆனால் தக்கனிடம் அவர்கள் கொண்டிருந்த பயத்தினால் அவர்கள் யாகத்தில் பங்கேற்றார்கள் என்று கந்த புராணம் கூறுகின்றது. தக்க யாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மூலம் பெருமானை அவமதிப்போர் அடையும் நிலையும், அவர்களுக்குத் துணை போகும் ஏனையோரின் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. 

பொழிப்புரை

கூட்டமாகத் தொண்டர்கள் தன்னைத் தொழுது புகழ்ந்து பாடல்கள் இசைக்க, அவர்களுக்கு அருள் செய்பவன் சிவபெருமான். அவன் ஒளிவீசும் மழுப்படையைக் கையில் ஏந்தியவன்; தெளிந்த நீரினை உடைய அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதுமாறு, பரந்து விரிந்த நிலையில் வெள்ளமாக சுழித்துக்கொண்டு, வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது செஞ்சடையில் தாங்கியவன் சிவபெருமான்; மாலை நேரத்து வானம் போன்று சிவந்த ஒளியுடன் திகழும் பெருமான், தன்னைப் புறக்கணித்தும் வேதங்களில் சொல்லிய முறைக்கும் மாறுபட்டும் தக்கன் செய்யத் துணிந்த வேள்வியில் பங்கேற்றதை அறிந்து அந்த வேள்வி தொடர்ந்து முடிவுறாத வண்ணம் அழித்தார். மேலும் அந்த வேள்வி செய்யத் துணிந்த தக்கன் மற்றும் வேள்வித் தலைவன் ஆகியோரது தலைகளை அறுத்தார்; பூஷன் எனப்படும் சூரியனின் பற்களைத் தகர்த்த அவர், பகன் எனப்படும் சூரியனின் கண்களைப் பறித்தார்; இவ்வாறு அவரவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்றவாறு தண்டனை அளித்த பெருமானும் கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.