மடலாழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண் இடந்து
இடுதலுமே மலிவான் கோலச்
சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானைத் தும்பி உரி
போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை அருவரைக் கீழ்
அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
விளக்கம்
தோழன் = குபேரன். தும்பி = யானை. மடல் = இதழ்கள். ஆழித்தாமரை = வட்டமாக மலர்ந்த தாமரை. இடந்து = பெயர்த்து. வான் = பெரிய. கோலம் = அழகு. மலிவான் கோல சுடர் ஆழி = பெரியதும் அழகு மிகுந்ததும், சுடர் விட்டு ஒளி வீசுவதும் ஆகிய சக்கரப்படை. விட்ட = கைவிட்ட.
குபேரன் பெருமானுக்குத் தோழனாக விளங்கியதும், மீனாட்சி அம்மையைத் திருமணம் செய்து கொள்ள மதுரை நகர் சென்றபோது, திருமாலும் பிரமனும் பெருமானுக்கு குடை பிடித்து வர, பெருமானுக்கு அருகில் மாப்பிள்ளைத் தோழனாக குபேரன் சென்றதும் திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்படுகின்றது. புட்பக விமானம் முதலில் குபேரனிடம் இருந்தது. அரக்கன் இராவணன் பிரமனிடம் வரம் பெற்ற பின்னர், தேவர்கள் மீது படையெடுத்தபோது குபேரனின் நகருக்கும் சென்றான். இராவணனின் வலிமை கண்டு அஞ்சிய குபேரன், தன்னிடம் இருந்த புட்பக விமானத்தை, இராவணனுக்கு ஈந்தான் என்று வால்மீகி இராமாயணம் உத்தர காண்டம் உரைக்கின்றது. அப்பர் பிரானும் ஆரூர் அரநெறி பதிகத்தின் கடைப் பாடலில் (4.17.11) குபேரனிடமிருந்து இராவணன் புட்பக விமானத்தைக் கைப்பற்றிய நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். பொருள் மன்னன் என்று குபேரனையும், தனது வலிமையினால் செருக்குடன் திகழ்ந்த அரக்கனை மருள் மன்னன் என்றும் குறிப்பிடும் நயத்தை இந்த பாடலில் நாம் காணலாம். எற்றி = கால் விரலால் அழுத்தி. கருள் = கருமை.
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே
பொழிப்புரை
வட்ட வடிவத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக இதழ்கள் அமைந்த ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட எண்ணம் கொண்ட திருமால், தான் வைத்திருந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்த போது, தாமரை மலருக்கு பதிலாக தனது கண்ணினை பெயர்த்து இறைவனது திருவடியில் சமர்ப்பித்து அருச்சனை செய்தார். இதனால் மகிழ்ந்த பெருமான், அழகு நிறைந்ததும், சுடர் விட்டு ஒளிவீசியதும், வட்ட வடிவினில் அமைந்ததுமாகிய சக்கரப் படையை திருமாலுக்கு அருள் செய்தார். தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்து, அந்த தோலைத் தனது உடலில் போர்வையாக போர்த்துக்கொண்டார். தனது தோழனாகிய குபேரன் கைவிட்ட புட்பக விமானத்தைத் ஊர்தியாகக் கொண்ட அரக்கன் இராவணன், விமானம் செல்வதற்கு தடையாக இருந்தது என்று கருதி கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி அரக்கனை நெரித்தவர் சிவபெருமான். பின்னர் அரக்கன் சாமகானம் பாடுதலும் அவனுக்கு இரங்கி, பல அருள்கள் செய்தவரும் சிவபெருமான் தான். இவ்வாறு திருமாலுக்கும் அரக்கன் இறைவனுக்கும் அருள்கள் செய்து கருணைக் கடலாக விளங்கிய பெருமானும் கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.
முடிவுரை
உய்ந்தேன் என்று பாடல் தோறும் உணர்த்தும் அப்பர் பிரான், தான் இறைவனின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றதை குறிப்பிட்டு, நாமும் அவ்வாறு உய்வினை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வலியுறுத்தும் பதிகம் இது. அப்பர் பிரான் காட்டிய வழியில் சென்று நாமும் இறைவனை வழிபட்டு, தேவாரப் பாடல்கள் பாடி அவனை மகிழ்வித்து, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

