ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 10

விரிந்து பரந்த கடல் நீரினால்

Updated On :1 மே 2017, 9:48 am

பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன்
உரத்தினால் அடுக்கல் எடுக்கல் உற
இரக்கம் இன்றி இறை விரலால் தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே

விளக்கம்

பரப்பு நீர் = விரிந்து பரந்த கடல் நீர். உரம் = வலிமை. அடுக்கல் = மலை. இறை விரல் = கால் பெருவிரல். பொதுவாக, அப்பர் பிரான் அரக்கன் இராவணன் கயிலை மலையை எடுக்க முயற்சி செய்த நிகழ்ச்சியை குறிப்பிடும்போது, பெருமான் இராவணனுக்கு அருள் புரிந்ததையும் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பாடலில் இரக்கம் ஏதும் இல்லாமல், தனது கால் பெருவிரலால் மலையை அழுத்தி அரக்கனின் தலை மலையின் கீழே அழுந்துமாறு செய்தார் என்று கூறுகின்றார். இவ்வாறு இரக்கம் இல்லாது அவர் செய்த செயல் என்று இறைவனின் செயலைக் கூறுவது நமக்கு திருமறைக்காட்டின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலை (5.10.11) நினைவூட்டுகின்றது. திருமறைக்காட்டு இறைவனை வணங்கி, திருக்கோயிலின் மூடப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பத்து பாடல்கள் பாடிய பின்னரும், பெருமான் கோயிலின் கதவுகள் திறப்பதற்கு அருள் புரியாமையால், இறைவனை இரக்கம் இல்லாதவன் என்று உணர்த்தும் வகையில் அருளிய பாடல் இது.

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம் பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே

இறைவன் மீது கொண்டுள்ள கோபத்தினால், கோயிலின் திருக்கதவுகளை திறக்கச்செய்து தனக்கு அருள் புரியாத இறைவன், அரக்கன் இராவணனுக்கு அருள் புரிந்தமையை குறிப்பிடாமல் அப்பர் பிரான் விட்டுவிடுகின்றார். பொதுவாக இராவணனைக் குறிப்பிடும் பாடல்களில் அரக்கனின் வலிமையை அடக்கிய செயலையும், பின்னர் அவன் பாடிய சாமகானத்திற்கு மகிழ்ந்து இரங்கி, அவனுக்கு வரங்கள் அருள் செய்த செய்கையையும் குறிப்பிடும் அப்பர் பிரான், இங்கே விரலால் அரக்கனது வலிமையை அடக்கிய செயலை மட்டும் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து அவரது வருத்தம் எத்தகையது நாம் உணர்ந்து கொள்ளலாம். தேன் சுரக்கும் புன்னைகளைக் குறிப்பிட்டு இறைவன் அருள் சுரக்க வேண்டும் என்பதையும் குறிப்பால் இங்கே உணர்த்துகின்றார்.

தினமும் சிலம்போசை கேட்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாருக்கு அந்த ஓசை ஒருநாள் காலம் தாழ்ந்து கேட்டது. தாமதத்திற்கு காரணம் யாது என்று சேரமான் பெருமாள் கேட்டமைக்கு, சிவபிரான் சுந்தரரின் பாடலை நின்று கேட்டமையால் தாமதம் ஏற்பட்டது என்று உணர்த்தியதாக, பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல், அப்பர் பெருமானின் சுவை நிறைந்த திருப் பதிகத்தினை சிவபிரான் ரசித்துக் கேட்டமையால், அப்பர் பிரானின் விண்ணப்பத்தினை நிறைவேற்ற, தாமதம் ஆகியது என்று பெரியோர்கள் விளக்கம் கூறியுள்ளனர். சேக்கிழாரும் பெரிய புராணப் பாடலில், பாடலின் பயனைத் துய்ப்பான் பொருட்டு தாமதம் ஏற்பட்டது என்று கூறுகின்றார்.

உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணின் நேர் மொழியாள் என்று எடுத்தப் பாட பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்புத் தாழ்க்கத் திருக்கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இலாதீர் என்று பாடி இறைஞ்சுதலும்

பொழிப்புரை

விரிந்து பரந்த கடல் நீரினால் நான்கு புறமும் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணன், தனது வலிமையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, தனது வழியில் குறுக்கிட்டது என்றுதான் கருதிய கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்தான். அவ்வாறு துணிந்த அரக்கனின் வலிமையை அடக்கி அவனுக்கு உண்மையினை உணர்த்தும் பொருட்டு, சற்றும் இரக்கம் இல்லாதவராக பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மேல் ஊன்றி மலையின் கீழே அரக்கனின் தலை நசுங்குமாறு செய்தார். இத்தகைய ஆற்றல் படைத்த பெருமான் உறையும் இடம் கடம்பூர் கரக்கோயிலாகும்.

முடிவுரை

பதிகத்தின் முதல் பாடலில், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் மற்றும் அருள் புரிதல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்து அனைத்து உயிர்களையும் காப்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் அப்பர் பிரான், அடுத்த பாடல் மற்றும் ஐந்தாம் பாடலில் திங்களைத் தனது சடையில் ஏற்று கருணை புரிந்த பெருமான், சர்வ வல்லமை பொருந்தியவனாக பாய்ந்து ஓடும் கங்கை நதியைத் தனது சடையில் தரித்தவனாக விளங்கும் நிலையினை உணர்த்தி பெருமானின் வல்லமையை நமக்கு சுட்டிக் காட்டுகின்றார். கங்கை நதியைத் தனது சடையில் அடகியதும் பகீரதன் என்ற அடியானுக்கு உதவும் பொருட்டுதானே. இதன் மூலம், அடியார்களுக்கு உதவும் பொருட்டு எந்த செய்கையும் செய்யும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான் என்று பெருமானின் பெருமையை நமக்கு உணர்த்தி, நாம் அவனைத் தொழுமாறு நம்மைத் தூண்டுகின்றார். தன்னைச் சுற்றியிருக்கும் பல ஆன்மாக்கள், இல்லற சுகத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து நிற்கும் நிலையினைக் கண்ட அப்பர் பிரான், இவ்வாறு நிலையற்ற இல்லற சுகத்தில் ஆழ்ந்து கிடப்பதால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்பதை சுட்டிக் காட்டி, கடம்பூர் திருக்கோயில் தான் நம்மை உய்விக்கும் வழி என்பதை உணர்த்துகின்றார். கரக்கோயில் வழிபாடு நமது தீவினைகளை அறுக்கும் என்று நான்காவது பாடலிலும், எல்லா உயிர்களும் அடைய விரும்பும் முக்தி நிலையினை அருளவல்லது என்று ஆறாவது பாடலிலும், அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைய வழி வகுக்கும் என்று ஒன்பதாவது பாடலிலும் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கரக்கோயிலின் பெருமையை உணர்ந்த பல அடியார்கள் அங்கே சென்று வழிபடுவதையும், பாடல்கள் பாடி இறைவனைத் தொழுவதையும் பதிகத்தின் ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களில் நமக்கு உணர்த்துகின்றார். அப்பர் பெருமான் காட்டிய வழியில் சென்று, கரக்கோயில் பெருமானைத் தொழுது வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.