ஆதியான் அரி அயன் என்று அறியவொண்ணா அமரர்
தொழும் கழலானை அமலன் தன்னைச்
சோதி மதி கலை தொலையத் தக்கன் எச்சன் சுடர் இரவி
அயில் எயிறு தொலைவித்தானை
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழார்
தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீதில் திருவடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே
விளக்கம்
மூவராக இறைவன் விளங்கும் நிலை பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. தன்னிடமிருந்து பிரித்து திருமாலையும் பிரமனையும் எவரும் அறியாத வண்ணம், அவர்களுடன் கலந்து இருப்பவன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது, திருமால், பிரமன், உருத்திரன் ஆகியோரோடு கலந்து காத்தல், படைத்தல், அழித்தல் செயலைச் செய்யும் பெருமானின் பெருமையை உணர்த்தும் ஞானசம்பந்தரின் பாடல்களை நினைவூட்டுகின்றது.
சிவபுரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில், சிவபெருமான் பிரமனாகவும், திருமாலாகவும், உருத்திரனாகவும் நின்று முத்தொழில்கள் செய்யும் தன்மையினை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் அந்த மூன்று பாடல்களையும் இங்கே காண்போம். புவம் = வானம். வளி = காற்று. புனல் = தண்ணீர். கனல் = தீ. கலை = அறுபத்து நான்கு கலைகள். திரிகுணம் = சாத்துவீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள். அமர் நெறி = விரும்பத்தக்க வழிமுறைகள். திவம் = தேவலோகம். மருவி = கூடி பொருந்தி, பிரமனால் படைப்புத் தொழில் எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது இந்த பாடலில் கூறப்படுகின்றது. தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப்படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்யமுடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான், பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை
திரிகுணம் அமர்நெறி
திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர்
அவை அவை தம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை
பெறுவரே
பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலைபெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலைபெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப்படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.
மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி
மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை
நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன்
உறை பதி
சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு
திகழ்வரே
பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப்படுகின்றது. கடலால் சூழப்பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.
பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை
அவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன்
உறை பதி
செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு
மூவுலகிலே
மேற்கண்ட மூன்று பாடல்களிலும் உள்ள கருத்தினை, சிவபெருமான் மூவராகவும், அவர்களின் தலைவராகவும் உள்ள நிலை, சம்பந்தரால் முதுகுன்றம் பதிகத்தின் (1.53) முதல் பாடலில் கூறப்படுகின்றது. மறை சேர் நாவர் = வேதங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள். எரி = தீ. கால் = காற்று. விரை மலரோன் = நறுமணம் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்.
தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவாராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் எனும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே
அமலன் = இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன். எயிறு = பல். அயில்=கூர்மையான.
பொழிப்புரை
அனைத்துப் பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும், தன்னின்று வேறாக பிரித்து அறியமுடியாதபடி பிரமனுடனும் திருமாலுடனும் கலந்து இருப்பவனும், தேவர்கள் தொழும் திருப்பாதங்களை உடையவனும், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனும், ஒளி வீசிக்கொண்டிருந்த சந்திரனைத் தனது சந்திரனின் காலால் தேய்த்தவனும், தக்கன் மற்றும் எச்சன் ஆகியோரைத் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவிட்டு பிரகாசிக்கும் சூரியனின் கூர்மையான பற்களைத் தகர்த்தவனும் ஆகிய சிவபெருமான், வேதங்களை முறையாக கற்று மூன்று தீக்களையும் ஏற்றி பாதுகாத்து வருபவர்களும் உயர்ந்த புகழினை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் பொருந்தி வாழ்வதும், தீது ஏதும் இல்லாததுமாகிய வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறைகின்றான். இத்தகைய பெருமை உடைய செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

