வருமிக்க மதயானை உரித்தான் தன்னை வானவர் கோன்
தோள் அனைத்தும் மடிவித்தானைத்
தருமிக்க குழல் உமையாள் பாகன் தன்னைச் சங்கரன் எம்
பெருமானைத் தரணி தன் மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும்
ஓமாம்புலியூர் மன்னும்
திருமிக்க வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே
விளக்கம்
திரு என்ற சொல்லுக்கு அழகு செல்வம் ஆகிய இரண்டு பொருள்களும் பொருந்தும். வருமிக்க மத யானை = மிகுந்த மதத்துடன் எதிர்த்து வந்த மதயானை. தருமிக்க = நறுமணம் மிகுந்த. உருமிக்க = ஒளி மிகுந்து வீசும். சங்கரன் என்ற வடமொழிச் சொல்லுக்கு, இன்பம் விளைவிப்பவன் என்றும் சங்காரத்தில் ஈடுபடுபவன் என்று இரண்டுவிதமான பொருட்கள் உள்ளன. தருமிக்க என்ற சொல்லுக்கு, தேவலோகத்தில் உள்ள கற்பகத்தரு என்று பொருள்கொண்டு, நாம் நினைத்ததைத் தரவல்ல உமையம்மை என்று பொருள் கொள்வதும் உண்டு.
இந்த பாடலில், ஒரு முறை இந்திரன் கயிலாயம் சென்ற போது, பூதகணத்தின் உருவில் பெருமான் அவன் முன்னே கயிலாயத்தின் வாயிலில் தோன்றினார். தனது முன்னே நிற்பது பெருமான் என்று அறியாத இந்திரன், தனது வழியில் குறுக்கிட்ட பூதகணத்தை, தனது வஜ்ராயுதத்தால் தாக்கினான். பதிலுக்கு அவன் மீது தாக்குதல் தொடுத்து சிவபெருமான் அவனது தோள்கள் செயலற்று, இந்திரன் கீழே மயங்கி விழுமாறு செய்தார். இந்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது.
மணிவாசகரும் திருவம்மானை பதிகத்தின் ஒரு பாடலில் இந்திரனின் தோள் நெரித்த நிகழ்ச்சியை, தக்க யாகத்தில் நடந்ததாக குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் குறிப்பிடப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் தக்க யாகத்தில் நடந்த நிகழ்ச்சிகளாக இருப்பதை நாம் உணரலாம். எச்சன் என்பது தலைமை தாங்கி வேள்வி நடத்திக்கொடுத்தவரை குறிக்கும். தேவர்கள் பல திசைகளிலும் சிதறி ஓடியதை, அவர்கள் சிந்தி ஓடினார்கள் என்று குறிப்பிடும் மணிவாசகர். இந்த பாடலில் மணிவாசகர் சந்திரனை தேய்த்து அருளி என்று குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. தன்னைப் புறக்கணித்து, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நெறிகளை மீறி செய்யப்பட்ட வேள்வியில் கலந்துகொண்ட தேவர்கள் எவரையும் வீரபத்திரர் கொல்லவில்லை. ஏன், தக்கனையும் வேள்வித் தலைவனையும் தண்டனை கொடுத்து அவர்களை பெருமான் மன்னித்தாரே தவிர அவர்களையும் கொல்லாமல் விட்டது பெருமானின் அருட்செயல்தானே.
சந்திரனைத் தேய்த்து அருளி தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்துச்
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த
செந்தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய்
சுந்தரரும் தனது கலயநல்லூர் பதிகத்தின் (7.17) இரண்டாவது பாடலில், இந்திரனின் தோள் நெரிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிடுகின்றார். செருமேவு சலந்தரன் = போரை விரும்பி வேண்டி வந்த சலந்தரன்.
செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர்
பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனைத்
தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்
பெருமேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை
இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருகக்
கருமேதி புனல் மண்டக் கயல் மண்டக் கமலம் களி வண்டின்
கணம் இரியும் கலயநல்லூர் காணே
பொழிப்புரை
மிகுந்த மதத்துடன் தன்னை எதிர்த்துவந்த யானையைக் கொன்று அதன் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்தவனும், தேவர்களின் தலைவனான இந்திரனின் தோள்களை நெரித்தவனும், நறுமணம் மிகுந்த குழலினை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், அனைவர்க்கும் நலத்தை விளைவிப்பதால் சங்கரன் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய இறைவன், இப்போது எனது தலைவனாக விளங்குகின்றான். பூமியின் மேல் ஒளிமிக்க மணிகள் பொருந்திய மாடங்கள் நிறைந்ததும், உத்தமராகிய சான்றோர்கள் வாழ்வதும், அழகும் செல்வமும் உடையதும் ஆகிய வடதளி என்று அழைக்கப்படும் திருகோயிலில் உறையும் செல்வனுமாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

