அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த
கண்ணானை அமரர் கோனை
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி
எடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ்
நான்மறை ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே
விளக்கம்
அன்றினவர் = பகைவர்கள், திரிபுரத்து அரக்கர்கள் மூவர். திரிபுரத்து அரக்கர்களை சிவபெருமான் அழித்த விதம், மூன்று விதமாக புராணங்களில் சொல்லப்படுகின்றது. ஒரே அம்பினை எய்து மூன்று கோட்டைகளை எரித்ததாகவும், புன்முறுவல் சிரித்து எரித்ததாகவும், விழித்தே எரித்ததாகவும் சொல்லப்படுகின்றது. தேவார ஆசிரியர்களும் இந்த மூன்று முறைகளையும் தங்களது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்கள். இந்த பாடலில், அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகளை விழித்தே அழித்ததாகக் கூறுகின்றார். வென்றி = வெற்றி. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரச் சென்ற நாள் வரையில் தான் எடுத்த காரியத்தில் வெற்றி கொண்டவனாக விளங்கியவன் இயமன். போன்றி வீழ = உயிர் அழிந்து உடல் கீழே விழ. விகிர்தன் = மாறுபட்டவன். இயமனது செயலைச் செய்யவிடாமல் தடுத்தவன் சிவபெருமான் ஒருவனே என்பதால் விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
இருபிறப்பர் என்று அந்தணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அந்தணச் சிறுவர்களுக்கு உபநயனச் சடங்கு (பூணூல் அணிவிக்கும் விழா) நடைபெறுவதை இரண்டாவது பிறப்பு என்று கூறுவார்கள். இந்த செய்தி சேக்கிழார் பெருமானால், திருஞானசம்பந்தர் புராணத்தில் உணர்த்தப்படுகின்றது. பொருவிறப்ப = வேறு எவரிடமும் இல்லாத வகையில். உபநயனம் முடிந்த பின்னர், அந்தணச் சிறுவர்கள், வேதங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்குவார்கள். இந்த பாடலிலும், சேக்கிழார் வேதியர்கள் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்ததாக கூறுகின்றார். ஞானப்பால் உண்ட பின்னர், சிவபெருமானின் அருளால் ஞானம் வரப்பெற்றதால் நான்மறைகளும் அந்த மறைகளின் பொருளும், உணரப்பெற்ற ஞானசம்பந்தர், வேறு ஒரு குருவினை அடைந்து வேதங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார் தம்மை உலகியல்பின்
உபநயன முறைமையாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும்
மறை முனிவர் எதிரே நின்று
வருதிறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள்
மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்ணிறந்த
புனித வேதம்
பண்டைய நாட்களில் உபநயனம் முடிந்த பின்னர், சிறுவர்களை குருகுலம் அனுப்பி, அங்கே தங்கியிருந்து வேதங்களை கற்கச் செய்வது வழக்கம். அந்நாள் வரை பெற்றோரிடம் இருந்த வளர்ந்து வந்த சிறுவர்கள், பெற்றோர்களைப் பிரிந்து குருகுலம் சென்றடைந்து, குருகுலத்து ஆசிரியரையும் அவரது மனைவியரையும் தங்களது பெற்றோர்களாக கருதி அவர்களுக்கு பணிவிடைகள் செய்தவாறு, வேதங்கள் கற்றுக் கொள்வதை மறுபிறப்பு என்று அழைப்பார்கள். அவர்கள் அந்நாள் வரையில் வளர்ந்துவந்த சூழ்நிலை முற்றிலும் மாறி வேறு வகையான வாழ்க்கை வாழ்வதால் மறுபிறப்பு என்று அழைத்தனர் போலும். உபநயனம் முடிந்த பின்னர், வேதங்களைக் கற்பதன் மூலம் ஞானம் பெறுவதற்கான தகுதி அடைவதால், வாழ்க்கை முறை மாறுபடுகின்றது என்பதால் இரண்டாவது பிறப்பு என்று அழைப்பதாகவும் விளக்கம் அளிப்பதுண்டு.
இந்த பாடலில் அப்பர் பிரான் முத்தீயாளர் என்று அந்தணர்களை அழைக்கின்றார். ஆகவனீயம், காருகபத்தியம், தாக்கிணாக்னி என்பன அந்தணர்கள் தினமும் வளர்க்க வேண்டிய மூன்று விதமான அக்னிகள் ஆகும். ஆகவனீயம் என்ற வேள்வி, தேவர்களுக்காக செய்யப்படும் வேள்வி. நமது முன்னோர்களை நினைத்து செய்யப்படும் வேள்வி தட்சிணாக்னி என்பதாகும். இல்வாழ்க்கையில் ஈடுபட்டோர் தினமும் செய்ய வேண்டிய வேள்வி காருகபத்தியம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மூன்று வகையான வேள்விகளை தினமும் செய்துவந்தமையால், அந்தணர்கள் முத்தீயாளர் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த பாடலின் மூன்றாவது அடியில், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்ற சொற்களை பயன்படுத்தி எண்ணலங்கார அடியாக அப்பர் பிரான் அமைத்திருக்கும் நேர்த்தியை நாம் உணரலாம்.
பொழிப்புரை
பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் எரித்து பொடிப்பொடியாக மாறுமாறு, தனது நெற்றிக் கண்ணை விழித்தவனும், தேவர்களின் தலைவனும், தான் எடுத்த காரியத்தில் எப்போதும் வெற்றி அடைந்தவனாக விளங்கிய இயமன் சிறுவன் மார்க்கண்டேயனின், உயிரினைக் கவரச் சென்றபோது அவனது உயிர் அழிந்து உடல் கீழே விழுமாறு தனது திருவடியால் உதைத்த பெருமானும், ஏனைய தேவர்களிடமிருந்து மாறுபட்டு விளங்குபவனும் ஆகியவன் சிவபெருமான். அந்த பெருமான், தங்களது வாழ்க்கை முறையால் புகழ்பெற்றவர்களாக விளங்கியவர்களும், இருபிறப்பர் என்று அழைக்கப்பட்டவர்களும், தினமும் மூன்று விதமான வேள்விகளை தவறாமல் செய்து வந்தவர்களும், உயர்ந்த புகழினை உடைய நான்கு வேதங்களைக் கற்றவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் இடமாகவும் தென்றல் தவழும் இடமாகவும் திகழ்ந்த ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனுமாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

