ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

60. ஆராரும் மூவிலைவேல் - பாடல் 6

அமுதமாக விளங்கும் பெருமானை

Updated On :4 மே 2017, 12:29 pm

அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை ஆராத
        இன்னமுதை அடியார் தம்மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள
        நம்பியை என் மருந்து தன்னைப்
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்கப் பொழில்
        கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
        திகைத்து நாள் செலுத்தினேனே
 

விளக்கம்

ஆராத = தெவிட்டாத. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்பது பழமொழி. ஆனால் இறைவனைப் பற்றி எத்தனை முறை சிந்தித்தாலும், எத்தனை முறை அவனது புகழினைப் பாடினாலும். எத்தனை முறை கேட்டாலும், நமக்கு அலுப்பு என்பது ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆரா அமுதமாக விளங்கும் பெருமானை ஆராத இன்னமுது என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். ஆராவமுது என்பது இறைவனின் திருநாமங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. குடந்தை சாரங்கபாணி திருக்கோயிலில் உறையும் பெருமாளை ஆரா அமுதே என்று நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றினில் அழைக்கின்றார். கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் முருகப்பெருமானை, ஆராமுது அயில்வேல் அரசு என்று அழைக்கின்றார்.

திருஞானசம்பந்தர், தென்திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.88.3) ஒரு பாடலில் ஆராத இன்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். முக்தி நிலை அடைந்து இறைவனுடன் சேர்ந்தால், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் உலகில் வந்து பிறவாத நிலையை அடைவோம். இதனையே வாராத நாடன் என்று, முக்தி நிலையை தன்னிடம் உள்ள இறைவன் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் வானவில்லினை மனித உடலுக்கு உவமையாக சம்பந்தர் கூறுகின்றார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோன்றினாலும் வானவில் மிகவும் குறைந்த நேரமே தோன்றி மறைந்துவிடும். மேலும் வானவில்லின் வளைந்த தோற்றம், மனித உடல் முதுமையில் வளைந்து பின்னர் கெட்டுவிடும் நிலையினையும் உணர்த்துகின்றது. நமது உடல் மெலியுமாறு உருகி இறைவனை வழிபடும் அடியார்களுக்கு, அவன் ஆராத இன்பம் அளிப்பவன் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அலர் மேவு பேதை = தாமரை மலரில் உறையும் இலக்குமி தேவி. நெதி = நிதி, செல்வம்.

வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும்
                உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நிதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே    

திருவையாற்றுத் திருத்தாண்டகத்தின் முதல் பாடலில் (6.37) அப்பர் பிரான் தான் எப்படி எப்படியெல்லாம் இறைவனை அழைத்து உள்ளம் நைகின்றேன் என்று கூறுகின்றார். ஆரமுதே என்று தான் அழைத்ததாக இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே                             என்றேன் நானே
கூரார் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறட்பூதப் பல்                                     படையாய் என்றேன் நானே
பேராயிரம் உடையாய் என்றேன் நானே பிறைசூடும்                                     பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆரா அமுதே என் ஐயாறன்னே என்றென்றே நான் அரற்றி                                 நைகின்றேனே
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.27.7) சுந்தரர் இறைவனை ஆரா இன்னமுது என்று கூறுகின்றார்.

பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த நின்ற
சீரார் மேனியனே திகழ் நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சல் என்னே

திருவாசக ஆசைப்பத்து பதிகத்தின் ஒரு பாடலில், மணிவாசகர் ஆரா அமுதே என்று இறைவனை அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். மேலும் சிவபுராணத்தில் ஆராத இன்பம் அருளும் மலை போற்றி என்றும் மணிவாசகர் கூறுகின்றார்.
    பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி
    வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே
    பேராயிரமும் பரவித் திரிந்து எம் பெருமான் என ஏத்த
    ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
பொழிப்புரை
அரிய தவத்தினைச் செய்யும் முனிவர்கள் தொழுது வணங்கும் பெருமானாக உள்ளவனும், தெவிட்டாத இனிய அமுதமாக உள்ளவனும், அடியார்கள் அடையவிருக்கும் துன்பங்களைத் தடுத்து அவர்களை இன்பமுறச் செய்பவனும், உமையாள் நங்கையின் மணாளனாகத் திகழ்பவனும், எனது பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்பவனுமாக விளங்குபவன் சிவபெருமான். பயிர் வளர்ச்சிக்கு பொருத்தமான காற்றினால் தழுவப்படும் வயல்கள் நிறைந்ததும், உயரத்திலிருந்து ஒளிவீசும் நிலவின் ஒளியினால் மிகவும் அழகாக காட்சி தரும் நகரமும் ஆகிய ஓமாம்புலியூர் தலத்தில் நாள்தோறும் சிறப்புடன் வழிபாடு நடைபெறும் வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை எந்நாளும் அனைவர்க்கும் நன்மை பயப்பதால் இனிதாக அமைந்துள்ள வடதளி என்று அழைக்கப்படும் உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.