பாடல் 9
சிதைந்துவிட்டது.
பாடல் - 10
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை
எடுத்த வாளரக்கன் தோளும் தாளும்
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு
இருந்தானை இமையோர் கோனைப்
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாடப் பைம்பொழில்
சேர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே
விளக்கம்
வார் = கச்சு. கெழுவு = பொருந்திய.
பொழிப்புரை
கச்சை அணிந்த மார்பினை உடைய உமையம்மை அச்சமுறும் வண்ணம், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த வலிமை பொருந்திய அரக்கன் இராவணனின் இருபது தோள்களும் அழகிய பத்து தலைகளும் கால்களும் நெரித்து, அதன் பின்னர் அரக்கன் மீது தான் கொண்டிருந்த சினத்திலிருந்து மீண்டு அவன் பாடிய இன்னிசையை உகந்து கேட்டவனும், வானோர்களுக்குத் தலைவனும் ஆகியவன் சிவபெருமான். உலகம் எங்கும் தங்களது புகழ் பரவப்பெற்ற மறையோர்கள் தொடர்ந்து வேதங்கள் பயின்று வாழும் ஓமாம்புலியூர் எனப்படும் தலத்தில் நிலையாக இருப்பவன் சிவபெருமான். மாடங்கள் நிறைந்தும் பசுமையான் சோலைகள் சூழ்ந்தும் காணப்படும் இந்த தலத்தில் அமைந்துள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருகோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.
முடிவுரை
இந்த தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர் வடதளி. இந்த தலத்தில் உள்ள ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருந்த தென்முகக் கடவுளிடம் உமையம்மை பிரணவ மந்திரத்தின் உபதேசம் பெற்றதால் இறைவனுக்கு பிரணவபுரீஸ்வரர் என்ற திருநாமம் அமைந்தது. ஆலமரத்தின் அடியில் உபதேசம் செய்ததை நினைவூட்டும் வகையில் திருக்கோயில் வடதளி என்று அழைக்கப் படுகின்றது. அப்பர் பெருமான் வடதளி என்ற கோயிலின் பெயரினை இந்த பதிகத்தின் பாடல் தோறும் கூறுவதை நாம் உணரலாம். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள், அம்மை பிரணவ உபதேசம் பெற்றதை குறிக்கும் வகையில், தலத்திற்கு (ஓம்+ஆம்+புலியூர்) ஓமாம்புலியூர் என்று பெயர் வந்ததாக கூறுகின்றார்.
இந்த பதிகத்தின் பல பாடல்களில் தலத்தில் வாழ்ந்த அந்தணர்களின் சிறப்பினை அப்பர் பிரான் உணர்த்துவதை நாம் காணலாம். பதிகத்தின் இரண்டாவது பாடலில், ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழார் என்றும், மூன்றாவது பாடலில் உத்தமர் வாழ் தரும் ஓமாம்புலியூர் என்றும், ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் என்று பதிகத்தின் நான்காவது பாடலிலும், உயர் புகழ் அந்தணர் என்று ஐந்தாவது பாடலிலும், உலையாத அந்தணர்கள் என்று ஏழாம் பாடலிலும், வேதம் ஓர்ந்து ஓதிப் பயில்வார் என்று எட்டாம் பாடலிலும், பார் கெழுவு மறையோர் என்று பத்தாவது பாடலிலும், தலத்தில் வாழ்ந்த அந்தணர்களை அப்பர் பிரான் குறிக்கின்றார். அந்தணர்கள் புகழுடன் வாழ்ந்த தலம் என்று தில்லைச் சிதம்பரம் மற்றும் வீழிமிழலைத் தலங்கள், அந்த தலங்களுக்கு உரிய பதிகங்களில் கூறப்படுகின்றன. இந்த பாடல் மூலம் அந்தணர்கள் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதையும் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
சம்பந்தரும் தான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.122) மூன்று பாடல்களில், தலத்தில் வாழ்ந்த அந்தணர்களின் சிறப்பினை உணர்த்துகின்றார். அத்தகைய பாடல் ஒன்று இங்கே கொடுக்கப் படுகின்றது. பகீரதனின் வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான், கங்கை நதியைத் தனது சடையிலிருந்து சிறிது சிறுதாக பூமியில் ஓடவைத்த கருணைச் செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அந்தணர்கள் வேள்வியில், நெய் சமித்து போன்றவற்றை இட்டு, பல்வேறு தேவர்களுக்கும் ஆகுதி வழங்கும் செயலும் இங்கே உணர்த்தப் படுகின்றது.
பாங்குடை தவத்து பகீரதற்கு அருளிப் படர்சடைக் கரந்த
நீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த தத்துவன்
உறைவிடம் வினவில்
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடனிருந்த அங்கையால்
ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர்
வடதளி அதுவே.
இந்த பதிகத்தின் பாடல் தோறும், சமண சமயத்தைச் சார்ந்து இருந்த நாட்களில் அறியாமை காரணமாகத் தான் பெருமானை வழிபடாமல் இருந்ததை நினைத்து வருத்தம் தெரிவிக்கும் அப்பர் பிரான், அவ்வாறு நாம் வருந்தக் கூடாது என்பதற்காக, பெருமானின் சிறந்த குணங்களை நமக்கு எடுத்துச்சொல்லி பெருமானை வணங்குமாறு நம்மைத் தூண்டும் பதிகம். இனி வரவிருக்கும் பிறவிகளிலும் தன்னை ஆட்கொள்ளும் பெருமான் என்று பதிகத்தின் முதல் பாடலில் இறைவனை அறிமுகப்படுத்தும் அப்பர் பிரான், அமரர்களும் தொழுதேத்தும் பெருமான் என்று அவனது சிறப்பினை இரண்டாவது பாடலிலும், தனது அடியானுக்காக காலனை உடைத்தவன் என்று அவனது கருணையை நான்காவது பாடலிலும் உணர்த்துகின்றார். இவ்வளவு சிறப்புகள் படைத்திருந்தும் அடியார்களுக்கு எளியவனாக உள்ள தன்மை எஞ்சிய பாடல்களில் கூறப்படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில் அனைவர்க்கும் நலம் அளிப்பதால் இறைவன் இனியவராக இருக்கும் நிலையையும், ஐந்தாவது பாடலில் தனது தொண்டர்களுக்கு அவர்கள் நரகத்தினை காணாத வகையில் அருள் புரிவதையும், ஆறாவது பாடலில் அடியார்களுக்கு வரவிருக்கும் துயரத்தைத் தடுக்கும் அருட்செயலும், ஏழாவது பாடலில் அடியார்களின் துன்பங்களை நீக்கும் கருணைச் செயலும், எட்டாவது பாடலில் தன்னைச் சார்ந்தோர்க்கு இனியவனாக இருக்கும் தன்மையும் பத்தாவது பாடலில் அடியார்கள் பாடும் இன்னிசையினை விரும்பும் தன்மையும் கூறப்பட்டு, பெருமானைத் தொழுவதால் அடியார்கள் அடையும் பயன் விளக்கப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

