மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 4

தினமும் நெய்யும் பாலும் கொண்டு

Updated On :14 ஜூன் 2017, 11:05 am

மஞ்சன் வார்கடல் சூழ் மங்கலக்குடி
நஞ்சம் ஆரமுதாக நயந்து கொண்டு
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேனுடை
நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே
 

விளக்கம்

மஞ்சன் = மஞ்சு உடையவன், அழகினை உடையவன் என்று பொருள். மஞ்சு என்ற சொல்லுக்கு மேகம் என்ற பொருள் கொண்டு குளிர்ந்த மனதினை உடையவன், கருணை உள்ளம் கொண்டவன் என்றும் பொருள் கொள்வது பொருத்தமே. வலிமை மிக்கவன் என்ற பொருள் கொண்ட மைந்தன் என்ற சொல் மஞ்சன் என்று திரிந்ததாகவும் கூறுவார்கள். மஞ்சா போற்றி மணாளா போற்றி என்பது திருவாசக வாக்கியம். மேற்கண்ட மூன்று பொருட்களுக்கும் பொருத்தமாக உடைய பெருமானை மஞ்சன் என்றும் மஞ்சனே என்றும் மஞ்சா என்றும் பல தேவாரப் பாடல்களில் மூவர் பெருமானர்கள் அழைத்து மகிழ்ந்தார்கள்.

மயிலாடுதுறை பதிகத்தின் ஒரு பாடலில் (1.38.4) ஞானசம்பந்தர், மஞ்சன் உறையும் மயிலாடுதுறை என்பதை மஞ்சன் மயிலாடுதுறை என்று கூறுகின்றார். ஒண்ணுதல் = சார்தல், சார்ந்து இருத்தல். அஞ்சு ஒண்புலன் = தத்தமக்குரிய ஐந்து செயல்களைப் பற்றும் ஐந்து புலன்கள். ஐந்து புலன்களையும் வென்ற வல்லமை உடைய பெருமானை, மனம் ஒன்றி வழிபடும் அடியார்கள் மேல் பிறவிப்பிணி என்ற நோய் படராது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.

அஞ்சு ஒண்புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடு துறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல்
துஞ்சும் பிணி ஆயின தானே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றினில் (5.39.4) அப்பர் பிரானும் மயிலாடுதுறை மஞ்சன் என்று அழைக்கின்றார். இறப்பு என்ற சொல்லே ஒரு இனம் புரியாத அச்சத்தை நம்மிடம் ஏற்படுத்துகின்றது. அனைவர்க்கும் அச்சத்தை உண்டுபண்ணும் இறப்பு என்ற நிலைக்கு அருளாளர்கள் ஒருவிதமாக அஞ்ச, நாம் வேறு காரணத்திற்காக அச்சம் அடைகின்றோம். நாம் சேர்த்துவைத்த செல்வத்தை முழுதுமாக அனுபவிக்காமல், நாம் அதிகமாக அன்பு வைத்துள்ள மனைவி மக்களை சுற்றத்தார் அவர்களை விட்டு பிரிகின்றோம் என்பதனால் நாம் இறப்பிற்கு அஞ்சுகின்றோம். ஆனால் அருளாளர்களோ, இந்த பிறவியில் இறைவனை வழிபடும் வாய்ப்பினைப் பெற்ற நாம், அடுத்த பிறவியில் எந்த நிலையில் இருப்போமோ, இறைவனை வழிபடாது விட்டுவிடுவோமோ என்று அச்சம் கொள்கின்றனர். இறைவனின் அருள் இருந்தால், நாம் இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறப்புக்கு அஞ்சாத நிலையினை அடையலாம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

வெஞ்சினக் கடும் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயிலாடுதுறை உறை
அஞ்சொலாள் உமை பங்கன் அருளிலே

சீர்காழி தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் (3.81) கடைப்பாடலில் ஞானசம்பந்தர், முற்றூழிக் காலத்தில் உலகமும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கிய நிலையில், இருளில் நடனம் ஆடுபவனாகத் திகழும் மஞ்சனை வணங்கி இயற்றப்பட்ட பதிகத்தினை தனக்கு பற்றுக்கோடாக கருதி இன்னிசையுடன் இசைத்துப் பாடும் அடியார்கள், வஞ்சனையாக அறிவினை மயக்கித் தீயவழியில் அழைத்துச் செல்லும் தடுமாற்றம் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்றும் தங்களது அறியாமை நீங்கப்பெற்று இறைவனது அருள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்றும் கூறுகின்றார்.

துஞ்சிருள் நின்று நடமாடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திருஞானசம்பந்தன சொல் மாலை
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் 
வஞ்சம் இலர் நெஞ்சு இருள் நீங்கி அருள் பெற்று வளர்வாரே

மஞ்சனே, மணியே, மணி மிடற்று அண்ணலே என்று உள்ளம் நெகிழ்ந்து கோட்டாற்று பெருமானை வணங்கும் பலவகையான அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று சம்பந்தர் கோட்டாற்று பதிகத்தின் ஒரு பாடலில் (2.52.6) கூறுகின்றார். இனிமையான மொழியினால் இறைவனுடைய பண்புகளைச் சொல்லி நாள்தோறும் தொழும் அடியார்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்படுகின்றது. பஞ்சினைப் போன்று மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்து சிறந்த குணங்களைக் கொண்ட அடியார்கள், சித்தர்கள் என்று சம்பந்தரின் பட்டியல் நீளுகின்றது. இறைவனிடத்தில் அளவு கடந்த பாசம் வைத்துள்ள இந்த அடியார்கள் ஆசையுடன் இறைவனை கொஞ்சுகின்றார்கள் என்றும் சம்பந்தர் கூறுகின்றார்.

பஞ்சின் மெல்லடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு
            வைகலும்
கொஞ்சி இன் மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணியே மணிமிடற்று அண்ணலே என உள்
            நெகிழ்ந்தவர்
துஞ்சுமாறு அறியார் பிறவார் இத் தொன்னிலத்தே

திருவாவடுதுறை பதிகம் ஒன்றினை (4.57) மஞ்சனே என்று அப்பர் பிரான் தொடங்குகின்றார். மணியாகவும் மரகதத் திரளாகவும் திகழும் மஞ்சன், தனது நெஞ்சினுள்ளே நிறைந்து தனது நினைவாக இருப்பதாகக் கூறும் அப்பர் பிரான், தான் இறக்கும் தருவாயில் தனக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கோரும் பாடல் இது. துணையாக நிற்கும் இறைவன், அஞ்சேல் என்று சொல்லி தனக்கு அபயம் அளிக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் இங்கே வேண்டுகின்றார். 

மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திரளும் ஆனாய் 
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று
அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே

திருவாசகம் திருத்தசாங்கம் பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர் இறைவனை மஞ்சன் என்று அழைக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கிஞ்சுகம் = முள் முருங்கை மலர், சிவந்த நிறத்தில் காணப்படுவது. அஞ்சுகம் = அம்+சுகம், அழகிய கிளி. நமது மனதினில் உள்ள அறியாமையை,

கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக் கோன்
மஞ்சன் மருவும் மலை பகராய் - நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து

தனது உள்ளத்தைக் ஆலயமாகக் கொண்டு இறைவன் நிற்கின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனது சிந்தனை எல்லாம் சிவமாக, தனது வாக்கிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் சிவபெருமானைப் புகழ்ந்து வணங்கும் பாடல்களாக, தனது செய்கைகள் எல்லாம் சிவத் தொண்டுகளாகத் திகழ்ந்த அப்பர் பிரானின் நெஞ்சினை பெருமான் கோயிலாகக் கொண்டு உறைவதில் வியப்பு ஏதும் இல்லை. 

இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருமூலரின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. தெளிந்த அறிவு பெற்ற ஞானியர்க்கு, அவர்களது உள்ளமே சிவபெருமான் உறையும் கருவறை என்றும், அவர்களது உடலே ஆலயம் என்றும், அவர்களது வாய், அந்த உள்ளப் பெருங்கோயிலின் வாயில் என்றும், உடலில் உள்ள ஐந்து புலன்களும் கோயிலில் சுடர் விட்டு எரியும் தீபங்கள் என்றும், அவர்களது உயிரே சிவலிங்கம் என்றும் இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். கலா விளக்கு என்றால் சுடர்விட்டு ஒளிரும் தீபம் என்று பொருள். கலா என்ற சொல் காளா என்று திரிந்தது.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே 

தனது மனதில் மட்டுமல்ல, இறைவனை நினைப்பவர் அனைவரது மனதிலும் பெருமான் குடியிருப்பான் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் தில்லைத் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் முதல் பாடல் (5.2.1) ஆகும். இறைவன் உறையும் ஆலயத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது நமது கடமை அல்லவா. அதனால் தான் நமது உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு, பல பதிகங்களில் அப்பர் பிரான் வலியுறுத்துகின்றார். இறைவனைப் பற்றிய சிந்தனைகள் நமது மனதினில் நிறைந்து இருந்தால், நமது மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி மனம் தூய்மை அடையும். எனவேதான் இறைவனை நாம் எப்போதும் நினைக்க வேண்டும். மூன்று மதங்கள் கொண்டிருந்த யானையை அடக்கி, அதன் தோலை உரித்த இறைவன், நம்மை பீடித்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கவல்லவன் என்பதை உணர்த்தும் முகமாக இந்த பாடலில், யானையை அடக்கி அதன் தோலை உரித்த செய்தி கூறப்படுகின்றது. பனைமரம் போன்று பருத்து மிகுந்த வலிமையுடன் இருக்கும் துதிக்கை உடையது யானை.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் 
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனை
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ

மூன்று மலங்களையும் எரித்து, மும்மலக் கட்டிலிருந்து நம்மை விடுவிக்கும் வல்லமை படைத்தவன் பெருமான் என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முப்புரங்களை எரித்த பெருமானின் செயல் உணர்த்தும் செய்தியினை அறியாமல், பெருமான் முப்பரம் எரித்தான் என்று சொல்பவர் மூடர்கள் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். மூன்று மலங்கள் தாம் முப்புரங்கள் என்று நமக்கு உணர்த்தி, நமது மலக் கட்டுகளை சுட்டெரித்து, நம்மை மலங்களிளிருந்து விடுவிப்பார் பெருமான் என்பதை உணர்த்தும் பாடல். 

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்பரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே

அவனை வழிபடுவோர்களை முந்தைய பாடலில் பட்டியலிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் அவனை வழிபடும் இரண்டு முறைகளையும், அகப்பூசை மற்றும் புறப்பூசை ஆகியவற்றை குறிப்பிடுகின்றார். அஞ்சும் ஆடல் அமர்ந்து என்ற சொற்றொடர் மூலம், புறப்பூசையை இறைவன் விரும்பு ஏற்றுக்கொள்ளும் தன்மையையும், நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்று என்ற தொடர் மூலம் அகப்பூசையை இறைவன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனுக்கு செய்யும் அகப்பூசை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மிகவும் விரிவாக அப்பர் பிரான் சொல்லிக்கொடுக்கும் பாடல் இங்கே நினைவுரத்தக்கது.

தினமும் நெய்யும் பாலும் கொண்டு இறைவனை நீராட்ட முடியாதவர்கள் தாங்கள் உய்வதற்கான வழி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம் என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மருளவா மனத்தனாகி என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் (4.76) நான்காவது பாடல் ஆகும். நமது உடலினைக் கோயிலாகவும், நல்ல எண்ணங்கள் கொண்ட மனதினை இறைவனுக்கு அடிமையாகவும், உண்மையான தூய நடத்தைகளுடன், நமது மனத்தினில் உள்ள ஆன்மாவை இலிங்கமாக பாவித்து, நமது அன்பையே நெய்யாகவும் பாலாகவும் நினைத்து அன்பினால் இறைவனை நீராட்டி, கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகிய எட்டு அகமலர்களைக் கொண்டு இறைவனைத் தான் வழிபட்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். 

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக 
வாய்மையே தூய்மையாக மனம் அணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே

அப்பர் பிரான் கூறிய வழியில் வாழ்ந்து காட்டியவர் வாயிலார் நாயனார். நாயனார் வழிபட்டமையை சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மறவாமையால் அமைந்த மனக் கோயில் உள்ளிறுத்தி 
உறவாதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பென்னும் அமுது அமைத்து அர்ச்சனை
                             செய்வார்

பொழிப்புரை

நீண்ட கடல்களால் சூழப்பட்ட உலகில் உள்ள திருமங்கலக்குடி தலத்தில் உறையும் பெருமான், பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை, இனிய அமுதமாக ஏற்றுக்கொண்டு, தயக்கம் ஏதும் இல்லாமல் உண்டு உலகத்தவரைக் காத்தவன். அவன், பசுக்களிளிருந்து கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பால், தயிர், நெய், கோசலம், சாணம்) மிகுந்த விருப்பத்துடன் நீராடுபவன். அவன் எனது நெஞ்சத்தைத் தனது இருப்பிடமாகிய ஆலயமாகக் கொண்டு நிலையாக இருக்கின்றான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.