மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 9

சண்டீசருக்கு ஈசன் அருள் செய்ததை

Updated On :14 ஜூன் 2017, 11:08 am

கூசுவார் அலர் குண்டர் குணமிலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர் பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந்த்தேன் அன்றே
 

விளக்கம்

சண்டீசருக்கு ஈசன் அருள் செய்ததை முந்தைய பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு, ஈசன் தனக்கு அருள் செய்ததும் நினைவுக்கு வந்தது போலும். மனம் ஒன்றி சிவனை வழிபாடு செய்த சண்டீசனுக்கு இறைவனின் அருள் கிடைத்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் கொடுமை செய்தலையே தங்கள் தொழிலாகக் கொண்ட சமணர்களுடன் கலந்திருந்த தன்னை, அவர்களிடமிருந்து பிரித்தது ஈசனின் பெருங்கருணை என்று மனம் நெகிழ்ந்த அப்பர் பிரான், அவர்களை விட்டுத் தான் பிரிந்த அன்றே உய்ந்ததாக கூறுகின்றார். இதே செய்தியைத்தான், சேக்கிழார் பெரிய புராணத்தில் சிவனருள் கூடியதால், தருமசேனர் (சமணர்களுடன் வாழ்ந்த போது தருமசேனர் என்று அப்பர் பிரான் அழைக்கப்பட்டார்) அவர்களை விட்டு பிரிந்தார் என்று கூறுகின்றார். அந்த பெரிய புராண பாடலை நாம் இங்கே காணலாம். அயர்வு = தளர்ச்சி. செவ்வாறு = செம்மையான வழி, சிறந்த சைவ நன்னெறி. 

அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப்புன்சமயத்து ஒழியா இத்துயர் ஒழிய
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என

மந்திரங்கள், தந்திரங்கள் என பலவாறு சமணர்கள் முயற்சி செய்தும் தீராத சூலை நோயினால் மிகவும் தளர்ச்சி அடைந்திருந்த தருமசேனர், தனது தமக்கை தனக்கு நல்ல தீர்வு காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். எனவே தமது தமக்கையாரிடம் தான் அனுப்பிய தூதுவன் நல்ல சேதி கொண்டு வருவான் என்று காத்திருந்த அவர், தனது தமக்கை, நன்றி அறியாச் சமணர்கள் இருக்கும் இடத்திற்கு தான் வரமாட்டேன் என்று மறுத்தது பேரிடியாக இருந்தாது. தனது தமக்கை சொல்லி அனுப்பிய மறுமொழியைத் தனது வேலையாள் மூலம் அறிந்த அவரது மனம் உடைந்தது; அவரது தளர்ச்சி மிகவும் அதிகமாகியது. ஏற்கனவே சூலை நோயினால் மிகவும் வாடியிருந்த அவர் தமக்கையின் மறுமொழியை கேட்டறிந்த பின்னர் மேலும் தளர்ந்திருக்க வேண்டும், இந்த நோயிலிருந்து மீள்வோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன, அதற்கு என்ன காரணம் என்பதை சேக்கிழார் வாய்மொழியால் உணருகின்றோம். ஈசரின் அருள் கூடியது.
ஈசர் அருள் கூடியதால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்பதை நாம் இங்கே பார்க்கலாம். தமக்கையார் உதவி செய்ய மறுத்த நிலையில், அந்நாள் வரை தான் பெற்று வந்த மருத்துவ உதவியை தொடர்ந்து பெற்றிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, சமணர்களின் உதவியால் தனது நோய் தீராது என்ற எண்ணம் அவரது மனதினில் தோன்றுகின்றது (ஒவ்வா இப்புன்சமயத்து இத்துயர் ஒழியா), அவரது மனதினில் சமணர்களை விட்டு அகன்று தனது தமக்கை இருக்குமிடம் சென்று சேர வேண்டும் என்ற துணிவு பிறக்கின்றது; இந்த துணிவின் காரணமாக, நோயினால் மிகவும் நலிவுற்று இருந்த அவரது உடல் எழுகின்றது; இரவோடு இரவாக கடலூரிலிருந்து திருவதிகை நடந்துசெல்ல முடிகின்றது. இவை அனைத்தும் ஈசரின் அருள் கூடியதன் விளைவாக எழுந்த செயல்கள் தானே. இதனால் அவருக்கு, தாம் எவ்வாறேனும் இந்த சூலை நோயிலிருந்து மீள்வோம், தான் உய்வினை அடைவோம் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. இந்த நம்பிக்கை பிறந்ததைத் தான், சமணர்களிடமிருந்து இறைவனின் அருளால் தான் வேறுபடுத்தப்பட்ட அன்றே தான் உய்வினை அடைந்தேன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். 

சேக்கிழார் பெருமான் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில், சூலை நோய் தீர்க்கப்பட்ட பின்னர், அப்பர் பிரான் தான் சமணர்களிடம் இருந்து பிரிந்து வந்ததற்கு காரணமான சூலை நோய்க்கு கைம்மாறு என்ன செய்வேன் என்று வருந்தியதாக கூறுகிறார். .

பொய் வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறியில் சமண் நீசர்
                புறத்துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழும் ஆறு அறியாது
            மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறுங்குழல் மாமலையாள் மணவாளன் மலர்க் கழல்
                வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தகு சூலையினுக்கு எதிர் செய்குறை என்
            கொல் எனத் தொழுவார். 

பொழிப்புரை

பாவங்கள் செய்வதற்கு மனதினில் கூச்சம் ஏதும் இல்லாதவர்களாகவும், ஆன்ம அறிவினை வளர்த்துக்கொள்ளாமல் உடலினை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்களும், போற்றத் தகுந்த நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவர்களாகவும், மற்ற மதத்தவர்கள் பால் அன்பு ஏதும் இல்லாதவர்களாகவும், வெறுக்கத்தக்க இழிந்த குணம் உடையர்களாகவும், உடலில் அழுக்கு நிறைந்தவர்களாகவும் விளங்கிய சமணர்களிடமிருந்து என்னை, மங்கலக்குடி இறைவன் வேறுபடுத்திய அன்றே நான் உய்வினை அடைந்தேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.