மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 1

துதிக்க நின்றவனே

News image
Updated On :20 பிப்ரவரி 2018, 11:39 am


முன்னுரை:

திருவாரூரில் பல நாட்கள் தங்கி, உழவாரப் பணிகள் செய்தவண்ணம் பல பதிகங்கள் பெருமானைப் புகழ்ந்து பாடிய அப்பர் பிரான் திருவாரூரின் செல்வச் செழிப்பை கண்டார். எந்த பொருளிலும் இறைவனைக் காணும் தன்மையைப் பெற்றிருந்த அப்பர் பிரான், திருவாரூரின் செல்வச் செழிப்பிலும் பெருமானின் கருணையை காண்கின்றார். நகரின் செல்வச் செழிப்பினைக் கண்ட அவர், அந்த செழிப்பிற்கு காரணமான பெருமானை செல்வன் என்று அழைத்து எம்பந்த வல்வினை நோய் தீர்த்தான் என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தினை (6.30) பாடுகின்றார். பின்னர் மிகவும் தொன்மையான பதியாகிய ஆரூர் நகரத்தின் தொன்மைச் சிறப்பினையும், அந்த நகரத்தில் தொன்மைக் காலத்திலேயே பெருமான் குடிகொண்டுள்ள தன்மையையும் குறிப்பிட்டு பதிகம் பாட ஆவல் கொண்டார் போலும். அந்த ஆவலின் விளைவாக எழுந்ததே இந்த பதிகம். எவ்வளவு தொன்மையானது திருவாரூர் திருக்கோயில் என்பதை குறிப்பிடுவதற்கு அளவுகோலாக, அப்பர் பிரான் எந்த வருடக் கணக்கினையும் எடுத்துக் கொள்ளவில்லை. பெருமானின் கருணைச் செயல்கள் பலவற்றையும் வீரச் செயல்களை பலவற்றையும் குறிப்பிட்டு அந்த செயல்கள் நடைபெற்ற நாளுக்கு முன்னரோ பின்னரோ ஆரூர் திருக்கோயில் எழுந்ததோ என்று கேட்கின்றார். இவ்வாறு கேள்வியை எழுப்பி அதன் மூலம், இந்த கேள்விக்கு பதிலை தான் அறியும் நிலையில் இல்லை என்பதை குறிப்பிட்டு, மனிதர்களால் அளவிட முடியாத தொன்மை உடையது திருவாரூர் தலம் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், முத்தாய்ப்பாக, உலகம் பெருமானை அறிவதற்கு முன்னமே ஆரூர் திருக்கோயில் எழுந்தது போலும் என்று கூறுகின்றார். 

பாடல் 1:

    ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
            ஓருருவே மூவுருவமான நாளோ
    கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ
           காமனையும் கண் அழலால் எரித்த நாளோ 
    மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
           நாளோ மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்    
    திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
          திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே

விளக்கம்:

கருவன்=சம்ஹார மூர்த்தி; கறுவன் என்ற சொல்லின் திரிபாக, சினம் கொண்டவன் என்னும் பொருள் பட, கருவன் என்ற சொல் கையாளப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் கூறுவார்கள். பாடலின் எதுகை நோக்கி கருவன் எனத் திரிந்தது என்று கூறுவார்கள். தெரித்த=படைத்த: திருவினாள்=அழகு பொருந்தியவள்; மருவன்=பொருந்துபவன்; மூவுருவம்=பிரமன், திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூன்று வடிவங்களையும் கொண்டு முத்தொழில் நடத்தும் நிலை; மூவராய முதல்வன் என்றும் மூன்று தொழில்களையும் புரிபவன் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. சிவபுரம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில் எவ்வாறு பெருமான் மேற்கண்ட மூன்று உருவங்களிலும் பொருந்தி முத்தொழில் செய்கின்றார் என்பது விவரமாக கூறப்படுகின்றது. அந்த
பாடல்களை நாம் இங்கே காண்போம்.

தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப் படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். புவம்=வானம்: வளி=காற்று; புனல்=தண்ணீர்; கனல்=தீ; கலை=அறுபத்து நான்கு கலைகள்; திரிகுணம்=சாத்துவீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; அமர் நெறி=விரும்பத்தக்க வழிமுறைகள்; திவம்=தேவலோகம்; மருவி=கூடி பொருந்தி, பவம்=பிறவி; பவமலி=வினைகளுக்கு ஏற்றவாறு பிறப்பினை ஏற்படுத்தும் படைப்புத் தொழில்;  

    புவம் வளி கனல் புனல் புவிகலை
           உரை மறை திரிகுணம் அமர்நெறி
    திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும்
           உயிர் அவை அவை தம 
    பவமலி தொழிலது நினைவொடு
           பதுமநன் மலரது மருவிய
    சிவனது சிவபுரம் நினைபவர் செழு
          நிலனினில் நிலை பெறுவரே

பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலை பெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது படைப்புத் தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது காக்கும் தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப் படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.


மலைகள் சூழ்ந்த உலகினில் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளில் நடக்கும் பெரும்பான்மையான மக்களையும், தேவர்களாக நிலை பெற்று வாழ்வோரையும் காக்கும் வண்ணம் காக்கும் தொழில் நடைபெறுகின்றது என்று கூறுகின்றார்.
    
    மலை பல வளர்தரு புவியிடை
         மறைதரு வழிமலி மனிதர்கள் 
    நிலை மலி சுரர் முதல் உலகுகள்
        நிலைபெறு வகை நினைவொடு மிகும்
    அலைகடல் நடு அறிதுயில் அமர்
        அரி உரு இயல் பரன் உறை பதி
    சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர்
        திருமகளொடு  திகழ்வரே

பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப் படுகின்றது. கடலால் சூழப் பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். 

    பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
    குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை அவை
    முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன் உறை பதி
    செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு மூவுலகிலே

   
பொழிப்புரை:

ஒப்பற்ற தலைவனாக உலகம் எல்லாம் துதிக்க நின்றவனே, சிவபெருமானாக ஒரு உருவம் கொண்டிருந்தாலும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று உருவங்கள் கொண்டு முத்தொழில்களையும் நடத்துபவனே, உனது அடியான் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர முயற்சி செய்த இயமனின் மீது சினம் கொண்டு அவனை காலால் உதைத்து கீழே சாய்த்தவனே, உனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனை வெப்பம் மிகுந்த கதிர்களை வீசும் நெற்றிக் கண்ணால் விழித்து எரித்தவனே, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் படைத்து அவற்றில் பொருந்தி இருப்பவனே, உன்னை எதிர்த்து வந்த மான் கன்றினை அடக்கி அந்த மான் கன்று துள்ளி விளையாடுமாறு கையினில் ஏந்தியவனே, அழகிய உருவத்தினை உடைய பார்வதி தேவியை உனது உடலில் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனே,  பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.