/

101. நின்று மலர் தூவி  - பாடல் 4

பெருமானைத் தொழும்

News image
Updated On :11 ஜனவரி 2019, 5:59 am


பாடல் 4:

    ஈசன் முதுகுன்றை
    நேசமாகி நீர்
    வாச மலர் தூவப்
    பாச வினை போமே

விளக்கம்:

முதல் மூன்று பாடல்களில் முதுகுன்றத்து பெருமானைத் தொழும் அடியார்கள் இம்மையில் அடையும் பயன்களை குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் பெருமானைக் குறித்து நாம் செய்யும் வழிபாடு மறுமையில் இன்பத்திற்கு வழி வகுக்கும் என்று கூறுகின்றார். வீடுபேறு அடைவதற்கு முதல் படியாக கருதப் படுவது பாச நீக்கம். உலகத்து உயிர்கள் மீதும் உலகப் பொருட்கள் மீதும் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்குவது எளிதான செயல் அல்ல. இறைவனின் அருளும் துணையும் இருந்தால் தான் அந்த செயல் நிகழும். எனவே தான் இறைவன் பால் அன்பினை வளர்த்துக்கொண்டு அவனை வழிபட வேண்டும் என்று சம்பந்தர் நம்மை வழிநடத்துகின்றார். முந்தைய பாடலில் சம்பந்தர் உணர்த்திய வண்ணம் மனதினில் வஞ்சனையை நீக்கிக்கொள்ளும் நாம் அடுத்து இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலில் கூறப்படும் அறிவுரை.  ஈசன்=தலைவன், பசுபாசம் நீங்கப் பெற்று பதிபாசம் உடையவர்களாக நாம் மாற வேண்டும் என்பதே இங்கே சொல்லப்படும் அறிவுரை. பசுபாசம்=உலகம் மற்றும் உலகப் பொருட்களின் மீது உயிர்கள் வைக்கும் அன்பு.

பொழிப்புரை:

நமது தலைவனாகிய முதுகுன்றத்து இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொண்டு, அவன் திருவடிகளில் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி வழிபடும் அடியார்களின் பசுபாச உணர்வுகளும் அதனால் ஏற்படும் வினைகளும் தீர்ந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.