பாடல் 10:
பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்த
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து
ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்
விளக்கம்:
பார்=உலகம்; பௌவம்=கடல்; பத்தர்=பக்தர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்றும் கூறலாம், சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்கள் என்றும் பொருள் கொள்ளலாம். செம்மாப்பு=சிறப்பு; ஆரூர்த் திருவிழாவின் சிறப்பினை விளக்கி, இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் கூறிய அப்பர் பிரான், இந்தத் திருவிழாவின் பெருமையினை அறியாத ஊர் உலகத்தில் இல்லை என்று சுருக்கமாக கூறி, அதன் பெருமையை விளக்குகின்றார்.
திருவாரூரில் வாழும் அடியார்கள் சிறப்பான பத்து குணங்களை உடையவர்கள் என்பதை வலியுறுத்தும் வண்ணம், அப்பர் பிரான் பத்தர் என்று இந்த பதிகத்தின் முதல் பாடல் மற்றும் கடைப் பாடல் இரண்டிலும் குறிப்பிடுவது நாம் உணர்ந்து ரசிக்கத்தக்கது.
சிவபிரான் உலகாகவும் கடலாகவும் உள்ள தன்மை பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அத்தைகைய பாடல் ஒன்றினை நாம் இங்கே காணலாம் (மழபாடித் தாண்டகம்: 6.39.7). எல்லை காண முடியாத மலையினையும் கடலையும், நம்மால் எல்லைகள் அறிய முடியாத இறைவனுக்கு உதாரணமாக சொல்வதுண்டு. எனவே உலகினைச் சூழ்ந்த கடல் போன்று பரந்து காணப்படும் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
நீராகி நெடுவரைகள் ஆனான் கண்டாய் நிழலாகி நீள்விசும்பும் ஆனான் கண்டாய்
பாராகிப் பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனும் தன்னடியார்க்கு அன்பன் கண்டாய் அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே
பொழிப்புரை:
உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது.
முடிவுரை:
இறைவனது ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்டு களித்தல், உலகத்தார் பெற்ற பெரும்பேறு என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. பூம்பாவையை உயிர் பெற்றெழச் செய்த போது திருஞான சம்பந்தப் பெருமானின் வாய் மொழிகளாக, நமக்கு சேக்கிழார் மானிடப் பிறவி எடுத்ததன் பயனை நமக்கு உணர்த்துகின்றார். சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது செய்வித்தலும், சிவபிரானின் திருவிழாக்களைக் கண்டு களித்தலும் மனிதப் பிறவி அடைந்துள்ள பெரும் பேறு என்று உணர்த்துகின்றார். பூம்பாவை உயிர் பெற்றதன் மூலம், சிவபிரான் சம்பந்தப் பெருமானின் வாய்மொழியின் உண்மையை உலகுக்கு உறுதிப் படுத்துகின்றார்.
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என்று உரைப்பார்
இத்தைகைய பெரும் பேற்றினை, ஆரூர் ஆதிரைப் பெருவிழாவினைக் காண்பதன் மூலம் அனுபவித்த அப்பர் பிரான், அந்த அனுபவத்தை நமக்கு பாடலாக அளிக்கும் பதிகம். இந்தப் பாடலை அப்பர் பிரான் பாடக்கேட்டு ஆதிரை நாளின் சிறப்பையும் திருவாரூர் நகரத்தின் சிறப்பையும் உணர்ந்த திருஞானசம்பந்தர், திருவாரூர் செல்கின்றார். நாமும் அப்பர் பிரானிடம் தாற்காலிக விடை பெற்றுக் கொண்டு, திருஞானசம்பந்தரைப் பின் தொடர்வோம், தோடுடைய செவியன் என்ற பதிகம் பாடி, தனக்கு பாலூட்டிய பெருமானை தந்து தந்தையாருக்கு சுட்டிக் காட்டிய பதிகம் முதலாக, சம்பந்தப் பெருமான் அருளிய பல பதிகங்களை நாளை முதல் சிந்தித்து மகிழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


