பாடல் 4:
தீ உறவாய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேய் உறவாய கானில் நடமாடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
இந்த பாடலில் சம்பந்தர் தாயின் தன்மையை உடைய இறைவன் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு ஈன்றாளுமாய் (4.94.1) என்று அப்பர் பிரான் அழைத்ததை நினைவுக்கு கொண்டு வருகின்றது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப் போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக் கொள்ளத் தெரியாமல் தவித்த போது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயனாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவர் தப்பியதற்கு சிவபிரானின் கருணை தானே காரணம். எனவே தான், தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். ஏன்றுதல்=தாங்கிக் கொள்ளுதல்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
இறைவனை தனது தந்தை தாய் என்று பல அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது தமக்கையார் தனக்கு செய்த உதவியினை நினைத்து சிவபிரானைத் தனது சகோதரியாகவும் அப்பர் பிரான் காண்கின்றார். துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள்.
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும்
மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும்
ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என்
நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ
ஏறூர்ந்த செல்வன் நீயே
பெற்ற தாயினும் நல்லவனாக சிவபெருமானை திருமூலர் கருதுகின்றார். இந்த பாடலில் திருமூலர் தாயினும் நல்லன் தாழ்சடையோன் என்று கூறுகின்றார். உயிர்களுக்கு தேவையான வெப்பத்தை அளிப்பதில் கதிரவனை விடவும் சிறந்தவன் என்றும் உயிர்களுக்கு தேவையான சமயத்தில் குளிர்ச்சியை அளிக்கும் சந்திரனை விடவும் சிறந்தவனாக விளங்கும் பெருமானின் அருள் புரியும் தன்மையை எவரும் அறியாமல் இருக்கின்றனரே என்று திருமூலர் இந்த பாடலில் வருந்துகின்றார்.
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ் சடையோனே
இதே கருத்தை தான் மணிவாசகரும் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருள் புரிபவன் சிவபெருமான் என்று பிடித்த பத்து பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார். இந்த பாடலில் அவர், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் மேலாக பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார். சிவபுராணத்தில் தாயினும் சிறந்த தயா ஆன தத்துவனே என்று குறிப்பிடுவதும் நாம் இங்கே சிந்திக்கத் தக்கது.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து
நீ பாவியேனுடைய
ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு
எழுந்து அருளுவது இனியே
தாயினும் சிறந்து இறைவன் விளங்கும் தன்மை திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் மற்றொரு பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவானந்தமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் இந்த பாடலில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில்
விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு
எழுந்து அருளுவது இனியே
தேவர்களும் காண்பரிய விளங்கும் சிவபெருமான், தானே வந்து தாய் போல் கருணைச் செயல் புரிந்ததாக மணிவாசகர் கூறும் பாடல், திருவாசகம் திருவம்மானை பதிகத்தில் வருகின்றது. கான் நின்று வற்றி=தவம் செய்ய காட்டில் புகுந்து உடல் இளைத்து; புற்று எழுந்து=உடல் முழுதும் புற்றால் மூடப்பட்டு; வான் வந்த=சிறப்பு வாய்ந்த; தானே வந்து கருணை கொண்டு பெருமான் செய்த செயல், தனது திருவடிகளை காட்டியது, தனது உடல் மயிர் கூச்செறியும் வண்ணம் பரவசம் அளித்தது என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பரிய
தான் வந்து நாயேனைத் தாய் போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்
மூன்று வயதுக் குழந்தையாக இருந்த போதே தோணிபுரத்து கோபுரத்தை பார்த்து அம்மையே அப்பா என்று அழுது பெருமானை அழைக்க, அம்மையால் ஞானப் பால் ஊட்டப்பட்ட ஞானசம்பந்தர், தாயினும் மேலாக பெருமானை கருதுவதில் வியப்பு ஏதும் இல்லை. சிவபிரானை தனது தந்தையாகவும் உமையம்மையை தனது தாயாகவும் வரித்துக் கொண்ட ஞானசம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (1.50) ஏழாவது பாடலில் தாயும் நீயே தந்தை நீயே என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பல சிவஞானிகள் ஆராய்ந்து உணரும் பெருமான் பால் செல்ல வேண்டும் என்று தனது உள்ளம் விரும்பினாலும், உள்ளத்தை அவ்வாறு செல்ல ஒட்டாமல் தனது உடலில் இருக்கும் ஐந்து புலன்களும் ஒன்று சேர்ந்து தடுக்கும் மாயத்திற்கு தான் அஞ்சுவதாக சம்பந்தர் இந்த பாடலில் கூருகின்றார்.
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
அருளாளர்கள் பெருமானை தங்களுக்கு மட்டும் தாயாக இருப்பவன் என்று கூறுவதில்லை. வீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.4) பெருமானை எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற தாயான் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். சேயான்=தொலைவில் உள்ளவன். சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள்.
தூயானைச் சுடர்ப் பவளச் சோதியானைத் தோன்றிய
எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச்
சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால்
அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார்
தீநெறிக்கே சேர்கின்றாரே
திருமருகல் தலத்தில் சடையாய் எனுமால் என்று தொடங்கும் பதிகத்தை ஞான சம்பந்தர் பாடியதை விவரிக்கும் சேக்கிழார், எவ்வுயிர்க்கும் தாயானான் என்று பதிகத்தில் உள்ளடக்கி பாடியதாக குறிப்பிடுகின்றார். இறைவன் தாய் போல் நின்று நமக்கு அருள் புரிந்தால் விளைவது இன்பம் தானே. இதனை குறிப்பிடும் வண்ணம் தாயான சங்கரன் என்று இங்கே கூறுகின்றார். சாபத்தால் தனது கலைகள் அனைத்தும் இழந்த சந்திரனுக்கே மறு வாழ்வு அளித்த பெருமானுக்கு, தன்னையே முப்பொழுதும் தொழுது கொண்டிருந்த அடியாளுக்கு அருள் புரிவது எளிமையான செயல் தானே. எனவே சசி கண்ட மவுலியான் என்று பிறைச் சந்திரனை சடையில் வைத்துள்ள இறைவனே என்று அழைக்கின்றார்.
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண்ணீற்றானை விரவாதார்
புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பணையில்
துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையாள்
உண்மெலிவு என்று எடுத்துப் பாட
இந்த பாடலில் தேய்பிறை வைத்துகந்த சிவன் என்று கூறுகின்றார். ஒற்றைப் பிறையுடன் தான் அழியும் நிலையில் சரணடைந்த சந்திரன் என்பதை உணர்த்தும் வண்ணம் இவ்வாறு கூறுகின்றார். தீ உறவாகிய=தீய வினைகளுடன் உறவு கொண்டுள்ள; ஆக்கை=உடல்; செற்ற=நெருங்கிய, பிணைந்துள்ள; உற்ற என்ற சொல்லினை உலகின் என்ற சொல்லுக்குப் பின்னர் வைத்துப் பொருள் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
தீய வினைகளோடு உறவு கொண்டுள்ள உடலும், அந்த உடலினை ஆதாரமாகக் கொண்டுள்ள வினைகளும் நெருங்கி அடர்ந்துள்ள உலகினையும் அந்த உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தாயாகிய தன்மையுடன் பாதுகாக்கும் தலைவனாகிய இறைவனின் திருநாமம் நிலையாக நின்று பொருந்தியிருக்கும் திருநாரையூர் தலத்தினை, உங்களது கைகளை தூக்கித் தொழுவீர்களாக. பேய்கள் நெருங்கியுள்ள காட்டினில் நடமாடுபவனும், தான் உட்கொண்ட விடத்தினை கழுத்தினில் அழகிய மணி போன்று தேக்கிக் கொண்டவனும், தனது சடைமுடியில் அழிந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரனை ஏற்றுக்கொண்டு அபயம் அளித்து, வளரும் சந்திரனாக மாற்றியவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் தலம், செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


